சனி, 28 பிப்ரவரி, 2015

100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)


ஏக இறைவனின் திருப்பெயரால்...

அனைவருக்கும் குறிப்பாக பயான் ஆற்றும் தாயீக்களுக்கு பயன்தரும் வகையில் 100 தலைப்புக்களில் கட்டுரைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தலைப்புக்கள்:

1. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

2. அண்டை வீட்டாரின் உரிமைகள்

3. அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்

4. அமானிதம்

5. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன? ஒரு விரிவான அலசல்

6. அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?

7. அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்

8. அழகிய கடனும் அர்ஷின் நிழலும்

9. அழகை நேசிக்கும் அல்லாஹ்

10. இசை ஓர் ஆய்வு

11. இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

12. இன்பமும் துன்பமும்!

13. இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்!

14. உணரப்படாத தீமைகள்

15. உளுவுக்குப் பின் தொழுகை

16. உறவோடு உறவாடுவோம்

17. உறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்

18. உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி

19. எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்

20. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

21. ஏன்? என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை

22. ஒவ்வொரு செயலிலும் தூய்மை

23. கஞ்சனும், வள்ளலும்

24. கடன் தள்ளுபடி

25. காதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினம்)!

26. காலத்தே பயிர் செய்

27. குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

28. குணம் மாறிய தீன்குலப் பெண்கள்

29. குர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...

30. குழந்தை வளர்ப்பின் முன்மாதிரி

31. கூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...

32. சகிப்புத்தன்மை!

33. சத்தியப் பாதையில் அழைப்புப் பணி

34. சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

35. சமுதாய ஒற்றுமையும்! ஒற்றுமை தலைவர்களும்!

36. சர்ச்சையாக்கப் படும் புர்கா

37. சரித்திரம் படிப்பாய் பெண்ணே! புது சாதனை படைப்பாய் கண்ணே!!

38. சிரிப்பின் ஒழுங்குகள்

39. சிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை

40. மனத் தூய்மை

41. செல்வம் ஒரு சோதனையே

42. செவிகளை பேணுவோம்

43. சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்

44. தர்மத்தின் சிறப்பு

45. தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

46. தவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு

47. தவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்

48. தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்

49. தளராத உள்ளம்

50. திட்டுவதும் சபிப்பதும் பாவமாகும்!

51. துணைவியா? துறவியா? மாமியார் அணுகுமுறை

52. தொல்லைக் காட்சிகள்

53. நட்பு

54. நபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா?

55. நபிவழித் திருமணம் எங்கே?

56. நரகில் கொடுக்கப்படும் தண்டனைகள்!!!

57. நல்லிணக்கம் ஏற்படுத்துதல்

58. நாமும் நமது மரணமும்…

59. நீதி! நீதியாக இருக்க வேண்டும்!

60. படைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்

61. பார்வை ஒன்றே போதும்

62. பிரார்த்தனை

63. பிள்ளைகளின் கடமை

64. புயலுக்குப் பின் அமைதி...

65. பெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி?

66. பெண்கள் பேண வேண்டிய நாணம்!

67. பெருகிவரும் பயங்கரவாதம்

68. பெருமை!

69. பெற்றோரின் மகிமை

70. பேச்சின் ஒழுங்குகள்

71. போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்

72. மண வாழ்வா மரண வாழ்வா?

73. மதி மயங்கும் மாணவர்கள்!

74. மரணத் தருவாயில் மனிதன்!!!

75. மலிவாகிப் போன மனித உயிர்கள்

76. மறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை

77. மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்

78. மறுமையின் முதல் நிலை மண்ணறை!

79. மனத்தூய்மையும் மகத்தான கூலியும்...

80. மன்னிக்கப்படாத பாவம்…

81. மனித நேயம்

82. மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

83. மீலாதும், மவ்லிதும்...

84. முகமன் கூறுதல்

85. மென்மையே நன்மை!

86. வஞ்சகப் புகழ்ச்சி…

87. வட்டி

88. வறுமை / ஏழ்மை

89. வாக்குறுதி மீறுதல்

90. வாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை

91. வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்

92. வானை விஷமாக்கும் வதந்திகள்

93. விபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்

94. வீதியின் ஒழுக்கங்கள்

95. வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்

96. வெற்றி பெற்றோர் யார்?

97. ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?

98. ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

99. ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு

100. எளிய திருமணம்

- தொகுப்பு: மௌலவி. U.L.அன்ஸார் மஜீதி

தொடர்புடையவை:

📌 பேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)

📌 பிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)

📌 மார்க்க அறிவுப்போட்டிக்கான தலைப்புகள் மற்றும் குறிப்புகள்




கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் | QATAR INDIAN THOWHEED CENTRE (QITC)
DOHA, QATAR | Tel: +974 4431 5863 | E-mail: qitcdoha@gmail.com

எளிய திருமணம்


வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணத்தை நடத்திப் பார்! என்று கூறும் அளவுக்குத் திருமணம் என்பது மிகவும் சிரமமான காரியமாக ஆக்கப்பட்டு விட்டது. ஒருவன் திருமணம் முடிக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் தான் திருமணம் முடிக்க முடியும் என்ற நிலை சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ளது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர். (அல்குர்ஆன் 4:21)

திருமணம் என்றால் லட்சக் கணக்கில் செலவு செய்து நடத்த வேண்டிய ஒரு நிகழ்ச்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் தான் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதை வ­லியுறுத்தி உள்ளார்கள்.

"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388


நபி (ஸல்) அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தைப் பாருங்கள்.

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்து விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்க விட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித் தோழர்களில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!" என்றார்கள். அவரும் போய் பார்த்து விட்டுத் திரும்பி வந்து "அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார். "இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்!" என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்று விட்டுத் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இதோ இந்த எனது வேட்டி உள்ளது" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவள் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது ஏதும் இருக்காது" என்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்ட போது, 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?" என்று கேட்டார்கள். அவர், "இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன" என்று எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (ஓதுவேன்)" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்" என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5030


இந்த அளவுக்குத் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ள இந்த மார்க்கத்தில் இன்று வரதட்சணை, ஆடம்பர விருந்துகள் போன்ற காரணங்களால் திருமணம் என்றாலே லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

இன்னிசைக் கச்சேரிகள், வாண வேடிக்கைகள், வண்ண வண்ண அலங்காரக் கார்கள், ஊரை வளைத்துப் போடப்பட்ட பந்தல்கள் என்று ஆடம்பரத் திருமணத்தின் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனவுக்கு வந்த போது, அவர்களையும் ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், "எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்" என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), "உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்" என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "என்ன விசேஷம்?" என்று கேட்டார்கள். அதற்கவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?" என்று கேட்டார்கள். "ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்" என்று பதில் கூறினார். அதற்கு, "ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2048, 2049


அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் என்ற இந்த நபித்தோழர் திருமணம் செய்து கொண்ட விபரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் தான் தெரிகின்றது என்றால் நபியவர்களின் காலத்தில் எந்த அளவுக்கு எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிய முடியும்.

இந்த ஹதீஸில், திருமணத்தின் போது அதிகபட்சமாக மணமகன் ஒரு விருந்தை வழங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் வலி­யுறுத்தியுள்ளார்கள். இதுவும் அவரவர் சக்திக்கு ஏற்ப சாதாரண முறையில் தான் அமைய வேண்டுமே தவிர கடன் வாங்கி, லட்சக்கணக்கில் செலவு செய்து விருந்து வைப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள், (திருமணம் முடித்து வலீமா விருந்தளித்த போது) பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 4213


திருமணத்தில் விருந்து கொடுப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நம்முடைய சக்திக்கு உட்பட்டுத் தான் வைக்க வேண்டும். கடன் வாங்கியோ அல்லது கையில் உள்ளதை விற்றோ வைக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸைப் பின்பற்றி நமது சக்திக்கு உட்பட்டு இருப்பதை வைத்து விருந்து கொடுத்துக் கொள்ளலாம்.

இது தான் இஸ்லாம் கூறும் எளிய திருமணமாகும். வரதட்சணை, ஆடம்பரங்கள், சீர் வரிசைகள், பெண் வீட்டு விருந்துகள் என மார்க்கத்திற்கு முரணான செயல்களின் மூலம் இஸ்லாம் காட்டித் தந்த எளிய திருமணத்தை, சிரமமான காரியமாக மாற்றியவர்கள் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.

- ஏகத்துவம் அக்டோபர் 2007 இதழில் வெளியான கட்டுரை

ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு

ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு

ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு.(கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

இஸ்லாமியர்கள் 'ஹிஜ்ரி ஆண்டு' என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாகக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானை படையுடன் கஅபத்துல்லாஹ்வை அழிக்க வந்த போது அல்லாஹ், பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாகப் பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது.) இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

''நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்'' என்று கைஸ் பின் மக்ரமா (ர­) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்கள்: திர்மிதீ 3552, அஹ்மத் 17218)

இந்தச் செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப் பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லீல் என்ற நூ­ல் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையைச் சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபூபக்ர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரீ ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.

இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் இருந்தன. 1. நபிகளாரின் பிறப்பு, 2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு, 3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு, 4. நபிகளாரின் இறப்பு.

இதில் நபிகளார் எப்போது பிறந்தார்கள்? எப்போது இறைத் தூதரானார்கள்? என்பதில் கருத்து வேறுபாடு இருந்ததால் இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. நபிகளார் இறந்த ஆண்டு அவர்களை கவலைக்கு உள்ளாக்கியதால் அதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக இருந்த ஹிஜ்ரத் செய்த ஆண்டைத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தி­ருந்தோ அவர்களுடைய மறைவி­ருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததி­ருந்தே கணக்கிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி­) நூல்: புகாரீ (3934)

உமர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரீ 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. (பத்ஹுல் பாரீ, பாகம்: 7, பக்கம்: 268)

அபூமூஸா (ரலி­) அவர்கள் உமர் (ர­லி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'உங்களிடமிருந்து கடிதம் வருகிறது; ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லை' என்று கூறியிருந்தார். அப்போது உமர் (ர­) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)

உமர் (ரலி­) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளி­ருந்து துவங்கலாம்?' என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி­) அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி­) அவர்கள் செய்தார்கள். அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப் நூல்: ஹாகிம் (4287)

நபிகளார் அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது; இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.

முதல் மாதம் முஹர்ரம்

வருடக் கணக்கு இல்லாத காரணத்தால் வருடத்தில் முதல் மாதம் எது என்று நபிகளார் காலத்தில் குறிப்பிடப்படவில்லை. வருடத்தைக் கணக்கிட்ட போது வருடத்தில் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தைத் தேர்வு செய்தார்கள்.

எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி­) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். ''ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் (போர் தடை செய்யப்பட்ட மாதம்) மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம் முஹர்ரம்'' என்று குறிப்பிட்டார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)

இந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.

ஹிஜ்ரீ ஆண்டை தேர்வு செய்யத் தூண்டிய வசனம்

நபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத்தைத் தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்ததாக சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மை யானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 9:108)

'இந்த வசனத்தில் ஆரம்ப நாள் என்பது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறது' என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் தான். ஆனால் வருடத்தை ஹிஜ்ரீ என்று தேர்வு செய்த நபித்தோழர்கள் ஏன் ரபீவுல் அவ்வல் மாதத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்யவில்லை? என்ற கேள்விக்கு அறிஞர்கள் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என்று உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான். எனவே முஹர்ரத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)

ஹிஜ்ரீ ஆண்டு பித்அத்தா?

நபி (ஸல்) அவர்களுக்கும் ஹிஜ்ரீ ஆண்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; ஹிஜ்ரீ ஆண்டு உமர் (ரலி­) காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதைக் கண்டோம்.

இதை அடிப்படையாக வைத்து மார்க்கத்தில் உமர் (ர­லி) அவர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி பித்அத்திற்கு ஆதாரமாக இதைக் காட்டுகிறார்கள். உமர் (ரலி­) அவர்கள் ஹிஜ்ரீ ஆண்டை ஏற்படுத்தியதன் மூலம் மார்க்கச் சட்டத்தில் எதையும் அதிகமாக்கி விடவில்லை. ஆண்டைக் கணக்கிடுவது என்பது மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல.

ஹிஜ்ரீ ஆண்டைப் பயன்படுத்து வோருக்கு அதிக நன்மை என்பதோ மற்ற ஆண்டைப் பயன்படுத்தினால் பாவம் என்பதோ மார்க்கத்தில் இல்லை. மேலும் உமர் (ர­லி) அவர்கள் வருடத்திற்கு 13 மாதங்கள் என்றோ மாதத்தில் 25 நாட்கள் என்றோ எதையும் புதிதாகச் செய்து விடவில்லை. எதி­ருந்து கணக்கிடுவது என்பதைத் தான் முடிவு செய்தார்கள். இதை ஆதாரமாக வைத்து பித்அத்தான காரியங்களைச் செய்யலாம் என்று கூறுவது தவறான வாதமாகும்.

நன்றி: துபை TNTJ

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும்.ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்றமக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.

குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்குஇஸ்லாம் தடை செய்துள்ளது.

ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.

இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.

இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.

ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.

இன்னும் சிலர் மாவிலைகளில் “சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்”என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம்நீங்கும் என்று கருதுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.

மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக்கருதப்பட்டது.

பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக,தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)

சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.

தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5707, 5717

ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.

கெட்ட நாள் உண்டா?

காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.

தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)

பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக்கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.

ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்றுவீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)

ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.

மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான்தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.

உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.

எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.

உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாகஅனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.

“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டிவருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: புகாரி 4826

எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.

பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன்மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

மாற்று மதக் கலாச்சாரம்

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.

இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப்பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான்,முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்றுகூறியுள்ளார்கள். (புகாரி 3456)

இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.

மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.

இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.

இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்துசெய்து வருகின்றனர்.

இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.

இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத்தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளைஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள்,நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி) நூல்:திர்மிதி

தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தகாரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ 1560

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக் கருதாமல், மாற்று மதக்கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

- பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?

இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது. மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.

பெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதா என்றால் ஒருக்காலும் எதிரானதல்ல!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று அடையாளம் காட்டி முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்கர் தான் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.

ஆனால் சிலர், இஸ்லாத்தில் ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை என்றும், தேர்தலில் வாக்களிப்பது இறை மறுப்பு என்றும் கூறி வருகின்றனர்.

எந்த ஒரு இயக்கமானாலும் தேசமானாலும் அதன் தலைவரை அதிகப்படியான உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். தலைவர் யார் என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வராது.

மார்க்கத்தில் நுனிப்புல் மேயும் சிலர், சில காலத்திற்கு முன் ஜனநாயகம் நவீன ஷிர்க் என்று வாதிட்டு, விபரமறியாத இளைஞர்களை மதி மயக்கினார்கள். ஆனால் அந்த மயக்கம் இவ்வாறு வாதிட்டவர்களுக்கே நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைக்கு அவர்கள் இன்று அலைவதே இதற்கு உதாரணம்.

ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்று கட்டுரை எழுதி மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்தவர்கள் இன்று தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்க்கிறோம்.

ஜனநாயகம் ஷிர்க் என்று வாதிப்பவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை ஆதரிப்பதுடன் நின்றால் பரவாயில்லை. அதன் பின்னர் அதள பாதாளத்தில் விழுந்து, ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

ஜனநாயகம் இணை வைத்தல் என்று கூறி கூட்டம் சேர்ப்பதும் போதுமான கூட்டம் சேர்ந்தவுடன் அவர்களைப் பயன்படுத்தி அதே இணை வைத்தலில் விழுவதும் தொடர் கதையாக இந்தச் சமுதாயத்தில் நடந்து வருகிறது.

ஜனநாயகம் ஷிர்க் எனக் கூறுவோர் குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஏறுக்கு மாறாகத் திசை திருப்பி மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஜனநாயகம் நவீன இணை வைத்தல் என்ற வாதத்தை எடுத்து வைப்பவர்கள் எவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை. திருக்குர்ஆன் 12:40

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்? திருக்குர்ஆன் 5:49, 50

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை. திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67

ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இந்த வசனங்களில் கூறப்படுகிறது. ஆனால் ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கு உள்ளது என்று இந்தியாவில் உள்ள ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் குர்ஆனுக்கு எதிரானது. அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களிடம் கொடுப்பதால் இது நவீன இணைவைப்பு என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்ல. காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர் இதே வசனங்களை எடுத்துக் காட்டி, இவர்கள் வாதிட்டது போலவே வாதிட்டார்கள். குர்ஆன் கூறாத கருத்தை குர்ஆனில் திணித்த இவர்கள் அலீ (ரலி) அவர்களாலும் முஆவியா (ரலி) அவர்களாலும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.

அந்த வரலாற்றை ஓரளவு அறிந்து கொண்டால் இந்த நவீன கால காரிஜிய்யாக்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள் தலைநகரமான மதீனாவில் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்ப்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். அலீ (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள் ஒரே நிலைபாட்டில் இருக்கவில்லை.

உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்தது என்பது சிலரது நிலைபாடாக இருந்தது.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்போ, உடன்பாடோ இல்லை. ஆயினும் கொலையாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் அலீ (ரலி) தயக்கம் காட்டுகிறார்; கொலையாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார் என்பது மற்றும் சிலரின் நிலைபாடாக இருந்தது. ஆயிஷா (ரலி), முஆவியா (ரலி) போன்றவர்கள் இந்த நிலைபாட்டில் இருந்தனர்.

அலீ (ரலி) அவர்களது ஆதரவாளர்களின் நிலையும் ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களைத் தகுதியான தலைவர் என நம்பியவர்களும் அவர்களில் இருந்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலீயின் ஆதரவாளர்களைப் போல் நடித்தவர்களும் இருந்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினரும், அவர்களால் சிரியாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமான முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள். சிரியாவைத் தனி நாடாக்கி அதன் அதிபராகத் தம்மை அறிவித்துக் கொண்டார்கள். முஆவியா (ரலி) அவர்களின் கீழ் உள்ள நிலப்பரப்புக்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அலீ (ரலி) அவர்கள் போர் தொடுத்தனர். சிஃப்பீன் என்ற இடத்தில் இரு படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

இதனைக் கண்டு கவலை கொண்ட நல்லவர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இரு தரப்பும் ஒன்றுபடுவதற்கான சமாதான உடன்படிக்கை செய்து போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டனர். இரண்டு தரப்பிலும் தலா ஒரு நடுவரை நியமித்து, அவ்விரு நடுவரும் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கூட்டாக நல்ல முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சமாதானத் திட்டம்.

இத்திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அதன் படி அலீ (ரலி) தரப்பில் அபூ மூஸா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) தரப்பில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் இருந்த நன்மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அலீ (ரலி) அவர்கள் அணியில் கலந்திருந்த கொலையாளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டால் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்ற நாம் தப்பிக்க முடியாது என அவர்கள் அஞ்சினார்கள்.

அதே நேரத்தில் சமாதான முயற்சியை நேரடியாக எதிர்த்தால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனவே சமாதான முயற்சியை வேறொரு முகமூடி அணிந்து எதிர்க்கத் திட்டமிட்டார்கள். இஸ்லாமிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குக் கொள்கைச் சாயம் பூச வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சமாதான உடன்படிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எடுத்து வைத்து அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர இவர்கள் எதிர்க்கலானார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரிஜிய்யாக்கள் (கலகக்காரர்கள்) எனப்படுகின்றனர்.

இந்த விஷக் கருத்துக்கு இவர்கள் எப்படி மார்க்கச் சாயம் பூசினார்கள் என்பதையும் விபரமாக அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை. திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67

இந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சமாதான உடன் படிக்கையை இவர்கள் எதிர்த்தனர். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று குர்ஆன் கூறும் போது இரண்டு நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களின் முடிவை ஏற்பது குர்ஆனுக்கு முரண் என்பது இவர்களின் வாதம்.

அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர எதிர்த்த இவர்கள் ஹரூரா என்ற இடத்தில் தளம் அமைத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணித்து மனிதர்களை நடுவர்களாக நியமித்த அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகிய இருவரும், இவ்விருவருடன் இருந்த மக்களும் காஃபிர்கள் எனவும் இவர்கள் ஃபத்வா கொடுத்தனர்.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள். திருக்குர்ஆன் 5:44

இந்த வசனத்தையும் தவறான இடத்தில் பயன்படுத்தி நன்மக்கள் அனைவரையும் காஃபிர்கள் என்றனர். அனைவரையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்ததுடன் காஃபிர்களுடன் போர் செய்ய வேண்டும்; காஃபிர்களைக் கொல்ல வேண்டும்; அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகியோரைக் கொல்வது ஜிஹாத் என்றெல்லாம் அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.

ஜிஹாத் பற்றிய வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டி இதை நியாயப்படுத்தினர். இவர்கள் குர்ஆனுக்குத் தம் இஷ்டம் போல விளக்கம் கூறி ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொல்லத் துணிந்ததால் ஹிஜ்ரீ 38ஆம் ஆண்டில் அலீ (ரலி) அவர்கள் ஹரூராவின் மீது படையெடுத்துச் சென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் மீது போர் தொடுத்து அவர்களை முற்றிலுமாக அழித்தார்கள். இப்போது கவனியுங்கள்!

காரிஜிய்யாக்கள் எப்படி மனிதர்களின் தீர்ப்பை ஏற்பது இறை மறுப்பு என்று வாதிட்டார்களோ அது போலவே நவீன காரிஜிய்யாக்களான இவர்கள் நவீன இணை வைப்பு எனக் கூறுகின்றனர். அவர்கள் எந்த வசனங்களைத் தவறான இடத்தில் பயன்படுத்தினார்களோ அதே வசனங்களை அதே இடத்தில் இவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் வாதமும் இவர்களின் முன்னோடிகளான காரிஜிய்யாக்களின் வாதமும் சரியா என்பதை ஆராய்வோம்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.

எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.

மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர்.

இவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:35

தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:58

அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர்ஆன் 5:42

மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒரு போதும் முரண் கிடையாது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். திருக்குர்ஆன் 5:95

உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர்! நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக! என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 38:21, 22

ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம். திருக்குர்ஆன் 21:78

தாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர்ஆன் 49:9

மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றது.

இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.

ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர். உண்மையில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதே அவனது பகுத்தறிவால் தான். அவனது அறிவைப் பயன்படுத்தி பல நல்ல விஷயங்களைக் கண்டு கொள்ள முடியும்.

மேலும் பல வசனங்கள் சிந்திக்குமாறு நமக்குக் கட்டளை இடுகின்றன. சிந்தனையின் மூலம் நல்லது கெட்டதை மனிதன் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தான் இறைவன் அவ்வாறு கூறுகிறான். ஒரு மனிதன் சிந்தித்து எடுக்கும் நல்ல முடிவுகளை மற்றவர்கள் ஏற்கலாம் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது.

மறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் ஆகிய சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பற்றியே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். இதைத் தவிர உள்ள அதிகாரங்கள் மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆன் மேற்கண்ட வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.

மறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்ட அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த ஞானமும் அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே எனக் கூறினார்கள். மதீனாவாசிகள் இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். ஆனால் இதனால் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நபித் தோழர்கள் நினைவு படுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள். நூல் முஸ்லிம் 4358

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நன் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூல் முஸ்லிம் 4357

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைக் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள். ஆனால் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூல்: முஸ்லிம் 4356

எது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம்? எது மனிதனுக்கு உள்ள அதிகாரம்? என்பது இந்த நபி மொழியில் மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

உலகின் ஜன நாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவு செய்வதில்லை. எப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம் பயன்படுகிறது.

சில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி விடுவார்கள். அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, காரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழி கெடுப்பதற்காகத் திசை திருப்புகின்றனர்.

இந்த இடத்தில் இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, தவறான கருத்தைக் குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரமே மனிதர்களுக்கு இல்லை என்று வாதிடும் இவர்கள் எந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளதோ அந்த அதிகாரத்தை மனிதர்களுக்கு வழங்குகின்றனர்.

மறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவாக அறிவித்திருக்க இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்; பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் என்ன? வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானே?அல்லாஹ்வுக்கு இல்லை என்பது தானே?

இவர்கள் மத்ஹப் அடிப்படையில் தான் தொழுவார்கள். மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப் கூறும் முறையில் தான் செய்வார்கள்.

உலக விஷயங்களிலேயே மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது ஷிர்க் என்ற இவர்களின் கொள்கைப்படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது கொடிய ஷிர்க் ஆக வேண்டுமல்லவா?

மீலாது விழா உள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் செய்யாதவற்றைச் செய்வது தானே பித்அத். அதாவது மனிதர்கள் உண்டாக்குபவையும் வணக்கமாகும் என்பது தானே இதன் பொருள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம் இப்போது ஏன் மறந்து போனது?

இதிலிருந்து தெரிய வருவது என்ன? எந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள்.

எந்த விஷயத்தில் அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்கின்றனர். இதிலிருந்து இவர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வருகின்றது.

இந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப் படுத்துவதை நாம் காணலாம்.

இவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.

ஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும்.

இந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாதத்தைச் செய்யும் ஒரே ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்களோ அந்த அதிகாரத்துக்கு இவர்களே கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.

இது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ, அல்லது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.

கட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.

இப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன் என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை அப்படியே பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.

இவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.

மனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை அப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின் படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். மனிதச் சட்டங்களின்படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். மனிதச் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை என்று கூற வேண்டியது தானே?

இவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.

அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்து கொண்டிருந்த வாதம் இப்போது என்னவானது?

ஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.

மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா? அல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா?

இவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.

தங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருட்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.

அல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.

ஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது. 1000ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான். அதாவது 1000ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு! அந்த ரூபாய் செல்லாது என்று அரசு அறிவித்து விட்டால் அது காது குடைவதற்குத் தான் பயன்படும்.

அரிசி பருப்பு தங்கம் வெள்ளி செல்லாது என்று அறிவித்தால் அந்த அறிவிப்புத் தான் செல்லாமல் போகும்.

மனிதச் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம் என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.

ஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே, மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.

குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

யாரும் சொல்லாத தத்துவத்தைச் சொன்னால் கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.

தேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.

தமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.

மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.

மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.

அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.

ஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.

முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை!

வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக
இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே! அது எப்படி?

தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வர வேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே! இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம்
இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.

அது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம்.

நமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக்
கைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.

மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு.

நம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.

யூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான். யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள். இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 12:55

மேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். அல்குர்ஆன் 12:76

இவ்வசனங்களில் (12:74-76) முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது.

யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமது நாட்டில் உள்ள சட்டப்படி தமது சகோதரரை அவர்கள் கைப்பற்ற இயலவில்லை.

எனவே தான் தமது சகோதரர்களிடம் உங்கள் நாட்டில் திருடர்களுக்குரிய தண்டனை என்ன என்று
கேட்கிறார்கள். அவரைப் பிடித்துக் கொள்வதே அதன் தண்டனை என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தம் சகோதரரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

மன்னரின் சட்டப்படி சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது என்ற வாசகம் ஒரு மன்னரின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கலாம் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.

மேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத் தான் யஃகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.

எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.

அல்லாஹ்வின் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியவையாகும். எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர்.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.

அடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் உள்ளிட்ட மறுமை வெற்றிக்கான வழிமுறைகளில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்பது தான் இதன் பொருள். கொள்கையில் முரண்பட்டவர்களுக்கு கொள்கையை விளக்கும் போது தான் பெரும்பானமையைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறப்படுகிறது. உலக நடை முறையில் அல்ல.

பெரும்பாலான மக்கள் கோதுமை உணவு உட்கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை. பெரும்பாலான மக்கள் நோய் வரும் போது சிகிச்சை செய்து கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை.

பெரும்பாலோர் ஆடை அணிந்ததால் அவர்களுக்கு எதிராக நிர்வாணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதிக்கவில்லை.

இன்றும் கூட பெரும்பான்மையோர் செய்யும் காரியங்களை நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் எந்த ஜனநாயக நாட்டிலும் இரண்டு ரக்அத் தொழுவதா? நான்கு ரக்அத் தொழுவதா என்று வாக்கெடுப்பு நடத்துவதில்லை. மார்க்கம் தொடர்பு இல்லாத விஷயங்களில் பெரும்பாலோர் நடப்பது போல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்துள்ளதால் நாமும் நடக்கலாம். ஆனால் இவர்கள் மார்க்க விஷயங்களில் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக மக்கள் செய்யும் பித்அத்களை ஆதரிப்பதைக் காண்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தாக இருந்தாலும், வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் தான் அதன் தலைவர் தேர்வு செய்யப்பட முடியும். தப்லீக் தரீக்கா போன்ற இயக்கங்களில் மக்கள் தேர்வு செய்யாவிட்டாலும் நியமனத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் தான் தலைமை உருவாகிறது. அதன் உறுப்பினர்களின் அதிகமானோர் ஏற்க மறுத்தால் தலைவராக முடியாது. உங்கள் இயக்கத்துக்கு நீங்கள் எப்படி தலைவரானீர்கள். அல்லாஹ் வஹீ மூலம் நியமித்து தலைவரானீரா? அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா? இக்கேள்விக்கு அவர்கள் அளிக்கும் விடையில் இருந்தே ஜனநாயகம் இணை வைத்தல் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

வெற்றி பெற்றோர் யார்?

வெற்றி பெற்றோர் யார்?

இந்த உலகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணை வைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கை கொண்டு அவனது தூதருக்குக் கீழ்ப் படிந்து வருகிறார்கள். இந்தச் சொற்பக் கூட்டத்தைச் சார்ந்தவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும் !

இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்குக் கற்றுத் தந்த நபி (ஸல்) அவர்கள், சில காரியங்களைத் தங்கள் வாழ்நாளில் செய்தவர்களைக் குறித்து வெற்றியாளர்கள் என்று கூறியுள்ளார்கள். மறுமையில் வெற்றி பெறுவதற்கு அந்த முக்கியமான காரியங்களை நபிமொழிகளி­ருந்து தொகுத்துத் தருகிறோம். அக்காரியத்தைச் செயல் படுத்தி நாமும் வெற்றி பெற்றோராக மாறுவோம்.

கடமையான காரியங்களைச் சரியாக நிறைவேற்றுவோர்

நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவர் பரட்டைத் தலையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒ­த்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இஸ்லாம் (என்பது) இரவிலும் பக­லும் ஐவேளைத் தொழுகைகள்'' என்றார்கள். உடனே அவர், ''அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?'' என்று கேட்டார். அதற்கவர்கள், ''நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு எதுவும் இல்லை'' என்றார்கள். ''அடுத்து ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் ''அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) கடமையுண்டா?'' என்றார். அதற்கவர்கள், ''நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை'' என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பற்றியும் சொன்னார்கள். அதற்கவர், ''அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?'' என்றார். அதற்கவர்கள் ''நீராக விரும்பிச் செய்தாலேத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை'' என்றார்கள். உடனே அந்த மனிதர், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன்'' என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது, ''இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ர­லி), நூல்: புகாரீ 46

இந்த நபிமொழியின் இறுதியில், இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும். குறைந்தபட்சம் கடமையான காரியங்களையாவது சரிவர நிறைவேற்ற வேண்டும். அதில் குறை வைத்தால் அவர் வெற்றியடைய முடியாது என்பதை இந்த ஹதீஸி­ருந்து விளங்கலாம்.

இது போன்றே மற்றோரு சம்பவமும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அ­ஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக'' என்று கூறினார்கள். அதற்கு அவர், ''நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகி விட்டது'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ''ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது!'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் ''சப்பஹ அல்லது யுசப்பிஹு என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக!'' என்று கூறிய போதும் அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். பிறகு அவர், ''அல்லாஹ்வின் தூதரே! (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், 'இதா ஸுல்­த்தில் அர்லு ஸில்ஸாஹா' என்ற சூராவை முழுமையாக ஓதிக் காண்பித்தார்கள். அம்மனிதர், ''உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒரு போதும் நான் அதிகமாக்க மாட்டேன்'' என்று கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு நபியவர்கள், ''ருவைஜில் வெற்றி பெற்று விட்டார்'' என்று இரு முறை கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­) நூல்: அபூதாவூத் 1191, அஹ்மத் 6287

மார்க்கத்தின் கட்டளைகளைப் பின்பற்றுவதில் ருவைஜில் (ர­லி) அவர்கள் எவ்வளவு ஆர்வப் பட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வயதான காலத்திலும் தொழுகையை நிறைவேற்றியவர்களாக இருந்த ருவைஜில் (ரலி­) அவர்கள் தொழுகையில் அதிகம் ஓத முடியவில்லை என்பதற்காக அதை விட்டு விடாமல், அதை நிறைவேற்ற முயற்சி எடுத்ததும், நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையை அப்படியே பின்பற்றுவேன் என்று கூறியதும் அவர்களை வெற்றியாளராக மாற்றியுள்ளது. எனவே நாமும் கடமையான காரியங்களை சரிவர நிறைவேற்றவும் அதைச் செயல்படுத்த ஆர்வமும் கொள்ள வேண்டும்..

நபிவழியை மட்டும் பின்பற்றியவர்

''ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். (நற்காரியங்களில் கொள்ளும்) அனைத்து ஆர்வத்திற்கும் ஒரு வரையறை உள்ளது. யாருடைய வரையறை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ அவர் வெற்றி பெற்று விட்டார். எவருடைய வரையறை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ அவர் அழிந்து விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­), நூல்: அஹ்மத் (6664)

இஸ்லாத்தின் வழிமுறையைத் தெளிவாகக் கூறும் நபிமொழி இது! மார்க்கத்தின் பெயரால் எத்தனை அனாச்சாரங்கள் நடக்கிறதோ அவை அனைத்தையும் கடுமையாகக் கண்டிக்கும் நபிமொழி. இன்று இஸ்லாமியர்கள் முதன்மையாகக் கடைப்பிடிக்க வேண்டிய தொழுகை என்ற அமல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி நடைபெறுகிறதா? ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வித்தியாசப்படுவதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்? நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை விட்டு விட்டு முன்னோர்கள் சொன்னது, பழக்கத்தில் உள்ளது என்று கூறி அவற்றை பின்பற்றுவது தான். இவ்வாறு பின்பற்றுபவர்கள் வெற்றியாளர்களா? என்பதை மேற்கூறிய நபிமொழியைக் கவனித்து முடிவு செய்யுங்கள்!

இறந்தவர்களுக்கு 1,3,7,40 மற்றும் வருட பாத்திஹாக்கள், மவ்­துகள், தர்ஹா வழிபாடுகள் போன்ற காரியங்கள் நபிவழியைச் சார்ந்ததா? அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறதா? ஒன்றும் கிடையாது. இருந்தும் நாம் அவற்றைப் பின்பற்றி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத எந்த மார்க்க அமலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைச் செய்பவர்கள் நிச்சயம் நன்மை பெற முடியாததோடு தண்டனையும் பெறுவார்கள்.

(திருக்குர்ஆன், நபிகளார் காட்டித்தராத) ஒவ்வொரு புதிய காரியங்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560

எனவே மார்க்க கடமைகளில் திருக்குர்ஆன், நபிமொழிகளை மட்டும் முன்மாதிரியாகக் கொண்டு அமல்களைச் செய்து வெற்றியாளர் ஆவோம்.

உள்ளதை வைத்து போதுமாக்கிக் கொள்பவர்

நமது இஸ்லாமியப் பெண்கள் பலரிடத்தில் இந்தப் பண்பு இருப்பதில்லை. கண்ணில் காணும் பொருட்கள் அனைத்தையும் விரும்பி அதை வாங்கித் தருமாறு தங்கள் கணவனை நச்சரிப்பார்கள். அவன் நல்ல முறையில் அவர்களைக் கவனித்து, தேவையானதை வாங்கித் தந்தாலும் இது போதாது இன்னும் வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள். தனது குடும்ப வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் பிறப்பதில்லை. ஆடம்பரமான வாழ்க்கையையே விரும்புவார்கள். பக்கத்து வீட்டில் உள்ளப் பெண்மணி வசதியுள்ளவராக இருப்பார். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் போன்றே நம் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் அதை வாங்குவதற்காக வட்டி உட்பட மார்க்கம் தடை செய்த காரியங்களை செய்வதும் இன்று வாடிக்கையாகி விட்டது. இருப்பதை பொருந்திக் கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் நிச்சயம் மறுமையில் வெற்றியடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதைப் பின்வரும் பொன்மொழி நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான அளவு செல்வம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வெற்றி பெற்று விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­), நூல்: முஸ்­ம் 1903

உறுதியுள்ளவர்கள்

இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அதில் உறுதியாக இருப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இஸ்லாத்தை ஏற்பதில் முனைப்பு காட்டியதைப் போல் அதைப் பின்பற்றுவதிலும், அதன் கொள்கை கோட்பாடுகளைப் பற்றிய நம்பிக்கையிலும் மிக உறுதியாக இருக்க வேண்டும். இன்பங்கள் வரும் போது ஏற்றுக் கொள்வதைப் போல் துன்பங்கள் வரும் போது அதையும் ஏற்று, பொறுமையுடன் இருப்பதும் இறைவனைப் பற்றி தவறாக எண்ணாமல் இருப்பதும் அவசியமாகும்.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நம் நம்பிக்கை அசைத்துப் பார்க்கவரும், அப்போது நமது நம்பிக்கை உறுதி பெற வேண்டும். பிரச்சனைகள் தொடர்ந்து வருதால் இறைவனை மறந்து மார்க்கத்தின் சட்டங்களை பின்பற்றாமல் வழி தவறி விடக் கூடாது. அல்லாஹ் சிலருக்கு குழந்தை தராமல் சோதனை செய்யும் போது படைத்தவனிடம் கேட்காமல் தர்ஹாக்களுக்குச் சென்று இணை வைத்தல் என்ற பெரும் பாவத்தில் சிக்கி விடுகிறோம். இது படைத்தவனின் மீது கொண்டுள்ள உறுதியின்மையைக் காட்டுகிறது. இவ்வாறு நடந்து கொள்பவர்கள் நிச்சயம் வெற்றியடைய மாட்டார்கள். கொள்கையில் உறுதி தான் வெற்றிக்கு அடிப்படை என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.

உறுதியாக இருங்கள். வெற்றியடைவீர்கள். உங்களுடைய நற்காரியங்களில் சிறந்தது தொழுகையாகும். நம்பிக்கைக் கொண்டவனைத் தவிர வேறு எவரும் உளூவைப் பேண மாட்டார்கள். அறிவிப்பாளர்: சவ்பான் (ரலி) நூல்: அஹ்மத் 21380

தொழுகையைப் பேணியவர்

ரமலான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல்களில் அலை மோதும் கூட்டத்தைக் காணலாம். தொழுவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் தொழுவதற்கு ஆர்வப்பட்டு பள்ளியை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால் ரமலான் முடிந்து விட்டால் பள்ளிவாசல் வெறிச்சோடிக் கிடக்கும்.

தொழுகையை ரமலானில் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று நினைப்பதே இதற்குக் காரணம். காலையில் எழுந்து வேலைக்குச் செல்பவர்கள் இரவு வீடு திரும்புவார்கள். 24 மணி நேரத்தையும் இந்த அற்ப உலகத்திற்காக செலவிடுவார்கள். ஆனால் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிறிது நேரம் கூட ஒதுக்க மனம் வருதில்லை.

ஆண்களுக்கு ஜமாஅத் தொழுகையை இஸ்லாம் வ­யுறுத்திச் சொன்னதைப் போல் பெண்களுக்கு வ­யுறுத்திச் சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே தொழ அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற்றும் பலப் பெண்கள் தொழுவதில்லை. வீடுகளில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு காலத்தை விரையமாக்கு கிறார்கள். இல்லையென்றால் தெருக்களில் அமர்ந்து கொண்டு வீண் பேச்சுக்களை பேசுகிறார்கள். பாங்கு சொல்லப்பட்டால் பாங்கிற்கு மரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டு தலையில் துணியைப் போடுவார்கள். ஆனால் அவர்கள் பாங்கிற்கு செய்ய வேண்டிய உண்மையான மரியாதை தொழுகையை நிறைவேற்றுதல் என்பதை விளங்குவதில்லை.

வயதானவர்கள் தான் தொழ வேண்டும், நமக்கென்ன வயதா ஆகிவிட்டது? என்று நம்மில் பலர் நினைக்கின்றார்கள். இறைவனை வணங்குவதற்கு வயதாக வேண்டும் என்று திருக்குர்ஆனோ, ஹதீúஸா சொல்லவில்லை. பருவ வயதை அடைந்து விட்டால் ஐவேளை தொழுவது கடமையாகும். சிலர் ஒரு நாளைக்கு நான்கு வேளை தொழுவார்கள். ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்கு வராமல் உறங்கி விடுவார்கள். ஐந்து நேரம் தொழுபவர்கள் கூட அதற்குரிய நேரத்தில் முறையாக நிறை வேற்றுவதில்லை. காலம் தவறாமல் எந்தத் தொழுகையையும் விடாமல் தொழுபவர்கள் சமுதாயத்தில் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் முதன் முத­ல் இந்தத் தொழுகையைப் பற்றித் தான் நம்மிடம் விசாரிப்பான். தொழுகையில் எந்தக் குறையும் வைக்காமல் நாம் நிறைவேற்றி இருந்தால் அதன் பின் வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலை அவர் கூறி விட முடியும். முதல் கேள்வியிலேயே நாம் தோற்று விட்டால் அதன் பின் வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலை கூற முடியாமல் நஷ்டமடைந்த வர்களாக ஆகி விடுவோம்.

அடியானிடம் முத­ல் விசாரிக்கப்படுவது அவனது தொழுகையைப் பற்றித் தான். அத்தொழுகை சரியாக அமைந்திருந் தால் அவன் வெற்றி பெறுவான். ஈடேற்றம் அடைந்து விடுவான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான். கைசேதப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: நஸயீ 461, திர்மிதீ 378

மனத்தூய்மையுடன் நல்லறங்கள் புரிந்தவர்

ஒரு மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் ஆவதற்கு முக்கிய காரணமாக அவனுடைய உள்ளம் இருக்கின்றது. உட­லுள்ள மற்ற உறுப்புக்கள் நற்செயல்களைச் செய்யவும் தீமை புரிவதற்கும் உள்ளமே காரணம். ஆகையால் நல்ல உள்ளம் உடையவராக ஒருவர் ஆகி விட்டால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் நல்லதாக ஆகி விடுகின்றது. உள்ளம் கெட்டு விட்டால் உட­லுள்ள பிற உறுப்புக்கள் நற்காரியங்களைப் புரிந்தாலும் அதில் எந்தப் பலனும் இல்லை. ஆகையால் தான் உள்ளத்தை நல்லுள்ளமாக ஆக்கியவர் வெற்றி பெற்று விட்டதாகவும் அதை தீய உள்ளமாக ஆக்கியவர் தோல்வியுற்று விட்டதாகவும் அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்.

உயிரின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நஷ்டப்பட்டார். (அல்குர்ஆன் 91:7,10)

உதாரணமாக ஒருவர் தான் கொடை வள்ளல் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகத் தர்மங்களைச் செய்கின்றார். இவர் செய்யக் கூடிய செயல் நற்செயலாக இருந்தாலும் இவரது உள்ளத்தில் தவறானதை எண்ணிய காரணத்தினால் அந்த செயலுக்கு அணுவளவும் நன்மை கிடைப்பதில்லை. அத்தோடு அவருக்கு தண்டனையும் வழங்கப்படும். அதே நேரத்தில் ஒருவர் அதிகம் தர்மம் செய்ய நினைக்கின்றார். ஆனால் தர்மம் செய்வதற்கு எதுவும் அவரிடம் இல்லை. இப்பொழுது அவர் இந்த நற்செயலை செய்யாவிட்டாலும் அவர் எண்ணிய நல்லெண்ணத்திற்காக அவருக்கு நன்மை வழங்கப் படுகின்றது.

100 கொலைகளை செய்தவர் இறுதியில் மனம் திருந்துகிறார். அவர் தன் உள்ளத்தை திருத்திக் கொண்டதைத் தவிர வேறு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்நிலையில் அவருக்கு மரணம் வருகிறது. இப்பொழுது அல்லாஹ் இவர் செய்த தீமையான காரியங்களைப் பார்க்காமல் அவரது உள்ளத்தைப் பார்த்து மன்னித்தான் என்ற செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரீ 3470)

அல்லாஹ் நிறத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மனிதர்களை நேசிப்பதில்லை. உள்ளத்தையே பார்க்கின்றான். பார்ப்பதற்கு அருவருப்பான, கருப்பு நிறத்தில் உள்ள ஒரு நீக்ரோவின் உள்ளம் சரியானதாக இருக்கின்றது. அதே சமயம் ஆப்பிள் பழத்தைப் போன்று சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக உள்ள ஒருவனின் உள்ளம் மோசமானதாக இருந்தால் இவ்விருவரில் சிவப்பானவரை விட நீக்ரோவே அல்லாஹ்விடம் மதிப்பிற் குரியவராகவும் சிறப்பிற்குரியவராகவும் ஆகின்றார்.

இதற்கு உதாரணமாக அபூஜஹ்லையும் பிலால் (ர­லி) அவர்களையும் குறிப்பிடலாம். அபூஜஹ்ல் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய தலைவன். ஆனால் அவன் எண்ணங்களும், செயல்களும் சரியில்லை. ஆனால் நீக்ரோவாக இருந்த பிலால் (ர­) அவர்களின் உள்ளமும் செயல்களும் சிறந்ததாக இருந்தது. எனவே அவர்களை சுவர்க்கவாதி என்று இந்த உலகத்திலேயே நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். (புகாரீ 1149)

யார் தனது உள்ளத்தை ஈமானுக்காகத் தூய்மையாக்கி, மேலும் தன் உள்ளத்தை தவறுகளி­ருந்து பாதுகாப்பாக்கி (ஈமானில்) மன நிறைவு பெற்றதாக்கி தனது நாவை உண்மை பேசக் கூடியதாகவும் தனது சரீரத்தை சீரானதாகவும் தனது செவிப்புலனை (நல்லவற்றை) கேட்கக் கூடியதாகவும் தனது கண்ணை (நல்லவற்றை) காணக் கூடியதாகவும் ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார். யார் தனது உள்ளத்தை (நல்லவற்றை) ஏற்றுக் கொள்ளக் கூடியதாக ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர­லி) நூல்: அஹ்மத் (20348)

ஈமான் கொண்டு விட்டால் மறு உலக வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி நடந்தால் வெற்றி பெறுவார்கள் என்பதை இதே அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர. தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:1,11)

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் வெற்றியடையும் கூட்டத்தில் ஆக்குவானாக.

நன்றி: துபை TNTJ