பெருமை!
அல்லாஹ் கூறுகிறான் : ஆதமுக்குப் பணிந்து சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது, அனைவரும் பணிந்து சுஜூது செய்தனர். இப்லீஸைத் தவிர. அவன் விலகிக் கொண்டான். பெருமை அடித்தான். இன்னும் காஃபிர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். (அல்குர்ஆன்: 2:34)
இதே கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன. அல்குர்ஆனை முழுமையாக உற்று நோக்கினால் இறைக் கட்டளைக்கு எதிராக முதல் புரட்சி ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் “பெருமை”தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இப்லீஸ் காஃபிராக-ஷைத்தானாக-தீயசக்திகளின் தலைவனாக ஆனதற்குக் காரணம் “பெருமை’ தான். ஷைத்தானுடைய குணமாகிய “பெருமை’ பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவான முறையில் விளங்கி வைத்திருக்க வேண்டும்.
ஆனால்…. பெருமை என்றால் என்ன? என்னென்ன செயல்கள் பெருமையில் கொண்டுபோய்ச் சேர்க்கும்? பெருமையின் விளைவுகள் என்ன? என்பது பற்றி எல்லாம் தெளிவான கண்ணோட்டம் நம்மிடத்தில் இல்லை. எனவே பெருமை பற்றி மார்க்கம் இடும் கட்டளைகளைப் பார்ப்போம்.
அல்லாஹ் கூறுகிறான் : போர்த்திக்கொண்டு இருப்பவரே! எழுந்து (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக! உமது ரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக. (அல்குர்ஆன் : 74:1,2,3)
வானங்களிலும், பூமியிலும் உள்ள பெருமைகள் (அனைத்தும் அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியது. அவன்தான் (யாவற்றையும்) மிகைத்தவன் நுண்ணறிவு மிக்கவன். (அல்குர்ஆன் : 45:37, 59:23)
கண்ணியம் எனது கீழாடையாகும். பெருமை எனது மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றோடு ஒருவன் என்னிடம் தர்க்கம் செய்தால் (போட்டியிட்டால்) அவனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் என்று அல்லாஹ் எச்சரிப்பதாக, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) ஆதார நூல்: முஸ்லிம் 2620)
தூதுச் செய்தி
நபி(ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் 96வது அத்தியாயத்தின் ஐந்து வசனங்கள் இறக்கப்பட்டன. அதன் பிறகு சில காலம் வஹீ வரவில்லை. பின்னர் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த முதல் கட்டளையே இறைவனைப் பெருமைப்படுத்துவீராக என்பதுதான்.
யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருப்பதால், அனைத்துப் பெருமைகளும், தனக்கே சொந்தம் என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறான்.
பெருமை என்னும் பண்பில், தன்னோடு எவரேனும் போட்டியிட்டால்-தர்க்கம் செய்தால், கடுமையாகத் தண்டிப்பேன் என்று எச்சரிக்கவும் செய்கிறான். பெருமைப் பற்றிப் பார்ப்போம்.
நெருக்கம்
அல்லாஹ் கூறுகிறான் : வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களெல்லாம் அவனுக்கே உரியவர்கள். இன்னும் அவனிடம் (நெருங்கி) இருப்பவர்கள் அவனுக்கு அடிபணிவதை விட்டும் பெருமை அடிக்கமாட்டார்கள். சோர்வடையவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 21:19, 7:206)
உயிர்ப் பிராணிகளில் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்கே “”சஜ்தா” (சிரவணக்கம்) செய்கின்றன. இன்னும் வானவர்களும் (அவ்வாறே செய்கின்றனர்) அவர்கள் பெருமை அடிப்பது இல்லை. (அல்குர்ஆன் : 16:49)
நம் வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்றால், அவற்றின் மூலம் நினைவூட்டப்படும் போது, விழுந்து சஜ்தா (சிரவணக்கம்) செய்தவர்களாக, தங்களது ரட்சகனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 32:15)
பெருமை அடிக்காதீர் !
அல்லாஹ் கூறுகிறான்: நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம். (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல்குர்ஆன் 17:37)
நேசிப்பதில்லை
அல்லாஹ் கூறுகிறான்: உபகாரம் செய்யுங்கள். கர்வம் உடையவர்களாக, பெருமை அடிப்பவர்களாக இருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பது இல்லை. (அல்குர்ஆன் 4:36, 57:23, 16:23)
உயிர்ப் பிராணிகளும், வானவர்களும் பெருமை அடிக்காததால் இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் எனவும், பெருமை அடிப்பவர்கள் இறை நெருக்கத்தைப் பெற முடியாது எனவும் கூறும் அல்லாஹ், நம்மை நோக்கி, “”பெருமை அடிக்காதீர்கள்” என்றும், “பெருமை அடிப்பவர்களை நேசிக்க மாட்டேன்” என்றும் எச்சரிக்கை விடுக்கிறான்.
பெருமை அடித்தால்!
அல்லாஹ் கூறுகிறான்; எவ்விதமான நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, எனது கட்டளைகளை விட்டும் திருப்பிவிடுவேன். அவர்கள் எல்லா அத்தாட்சிகளைக் கண்டபோதிலும், அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால், அதனை (தங்களுக்குரிய) வழியயன ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் தவறான வழியைக் கண்டால் அதனை (நேர்) வழி என எடுத்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் : 7:146)
(பெருமை அடிக்கும் மவ்லவிகள் இந்த இறை வாக்கை மீண்டும் மீண்டும் படித்துப் படிப்பினை பெறுவார்களா? (ஆ-ர் )
நரகமே
ஹாரிஸா இப்னு வஹப்(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகள் யார் என உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று எங்களை நோக்கிக் கேட்டுவிட்டு, அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள், பணிவானவர்கள். (ஆனால்) அவர்கள் அல்லாஹ்மீது ஆணையிட்டு (எதையேனும்) கூறிவிடுவார்களேயானால், அல்லாஹ் அதனை நிறைவேற்றி வைப்பான் என்று கூறினார்கள். பிறகு. நரகவாசிகள் யாரென உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று கேட்டு விட்டு, அவர்கள் இரக்கமற்றவர்கள் அகம்பாவம் பிடித்தவர்கள் பெருமை அடிப்பவர்கள் என்று கூறினார்கள். (புகாரீ 4918, 6071, 6657)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமை அடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது. எனக்கு என்ன நேர்ந்ததோ, மக்களில் பலவீனர்களும், அவர்களில் கீழ் நிலையினருமே என்னுள் நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது. (ஆதார நூல்: புகாரி : 4850)
அல்லாஹ் கூறுகிறான்: அந்த மறுமையின் வீட்டை, இந்தப் பூமியில் (தங்களை) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும், விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக ஆக்கி வைப்போம். (அல்குர்ஆன் : 28:83)
அல்லாஹ்(ஜல்)தஆலா பெருமை அடிப்பவர்களைத் தன்னுடைய கட்டளையை விட்டுத் திருப்பி விடுவான். நேர்வழியைத் தவறான வழியாகவும், தவறான வழியை நேர்வழியாகவும் நம்பவைத்து முடிவில் நரகத்தில் தள்ளிவிடுவான். பெருமை அடிக்காதவர்களுக்குத்தான் சொர்க்கம் என்பதையும் அல்லாஹ் வரையறுத்துக் கூறி உள்ளான்.
எது பெருமை
மனிதர்களை நரகம் என்னும் அதலபாதாளத்தில் தள்ளக்கூடிய பண்புதான் பெருமை என்பது. எந்த விதமான நடைமுறைகள் எல்லாம் பெருமையில் சேரும் என்பது பற்றி, ஒவ்வொருவரும் மனோ இச்சையைப் பின் பற்றுகிறார்களே தவிர, மார்க்கத்தைப் பேணுவது இல்லை.
பெருமையின் இலக்கணம் தெரியாததால், வசதி இருந்தும் பலர் உணவு-உடை விஷயத்தில் கஞ்சத்தனத்தைப் பேணுகின்றனர். வசதிக்குறைவு உள்ள பலர், கடன் வாங்கியாவது படோபமாக, தம்மைக் காட்டிக் கொள்ளுகின்றனர். பெருமை என்றால் என்ன? என்பதற்கு இஸ்லாம் அழகான இலக்கணத்தை வரையறுத்துள்ளது.
இப்னுமஸ்ஊத்(ரழி) அறிவிக்கிறார்கள்: எவனுடைய உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்கிறதோ, அவன் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி) கூறிய போது, ஒரு மனிதர் யாரசூலுல்லாஹ் தனது ஆடை மற்றும் காலணிகள் போன்றவை அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். அது பெருமை ஆகுமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ் மிகவும் அழகானவன். அழகாக இருப்பதை விரும்பக்கூடியவன். எனவே, இவை பெருமை ஆகாது என்று பதில் கூறிவிட்டு, பெருமை என்றால் என்னவென்று தெரியுமா? “சத்தியத்தை மறுப்பதும்-மற்றவர்களை இழிவாக எண்ணுவதுமே (பெருமை ஆகும்) என்றும் கூறினார்கள். (ஆதாரநூல்: முஸ்லிம்-திர்மிதி-அபூதாவூத் )
மொத்தத்தில் பெருமையின் இலக்கணம் இரண்டு தான். 1. சத்தியத்தை ஏற்க மறுப்பது, 2. மற்ற மனிதர்களை இழிவாக எண்ணுவது.
சத்தியத்தை மறுப்பது
அல்லாஹ் கூறுகிறான்: உங்களது இறைவன் ஒரே இறைவன்தான். எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய உள்ளங்கள் (இதை) மறுப்பவையாக உள்ளன. மேலும் இவர்கள், பெருமை அடிப்பவர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 16:22)
நிச்சயமாக தங்களிடம் வந்துள்ள, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி, எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் தர்க்கம் செய்கிறார்களே, அத்தகையவர்களுடைய உள்ளங்களில் பெருமையைத் தவிர (வேறெதுவும்) இல்லை.
இவ்வாறு பெருமை அடித்து ஆணவம் கொள்ளும், ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரை இட்டு விடுகிறான். (அல்குர்ஆன்: 40:35,56)
உங்கள் ரட்சகன் கூறுகிறான். என்னிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். நான் உங்களுக்குப் பதில் அளிக்கிறேன். நிச்சயமாக எவர்கள் எனக்கு அடிபணிவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களோ, அவர்கள் சிறுமை அடைந்தவர்களாக நரகில் நுழைவார்கள். (அல்குர்ஆன் : 40:60)
எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து (அவற்றை ஏற்காமல்) பெருமை அடிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 7:36-40)
ஓரிறை கோட்பாட்டை மறுப்பது. அல்குர்ஆன் வசனங்கள் பற்றி தர்க்கம் செய்வது. அல்லாஹ்வுக்கு அடி பணிய மறுப்பது, அல்குர்ஆன் வசனங்களை பொய்ப் பிக்க முயற்சிப்பது ஆகியவை எல்லாம் சத்தியத்தை மறுப்பது ஆகும்.
அது மட்டுமல்ல, அல்லாஹ் கூறுகிறான் : அவனுக்கு நமது வசனங்களை ஓதிக் காண்பிக்கப்பட்டால்,அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல தனது இரு காதுகளிலும் செவிட்டுத்தனம் இருப்பது போல பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான். (அல்குர்ஆன் : 31:7)
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமேயானால், அவன் நம்மிடமே பிரார்த்தனை செய்கிறான். பிறகு நம்மிட மிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினோமேயானால், இதுவெல்லாம் எனது அறிவின் காரணமாகவே வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். (அல்குர்ஆன் : 39:49)
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப்பின், நாம் நமது அருட்கொடைகளை அவனுக்குச் சுவைக்கச் செய்தால், என்னைவிட்டு கேடுகள் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெரு மகிழ்ச்சியும், பெருமையும் அடிப்பவனாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 11:10)
கஷ்டம்-துன்பம் ஏற்படும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதும், அல்லாஹ் கஷ்டத்தை நீக்கியதும், அவனுக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது அவனது வசனத்தை புறக்கணிப்பது ஆகியவையும் சத்தியத்தை மறுப்பது ஆகும்.
இழிவாக எண்ணுதல்
அல்லாஹ் கூறுகிறான்: (பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! தற்பெருமை உடையவர், ஆணவம் கொண்டவர் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 31:18)
பிறப்பு
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணில் இருந்தே படைத்துள்ளோம். நீங்கள் ஒருவரை மற்றவர் அறிந்து கொள்வதற்காகவே, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியுள்ளோம். உங்களில் எவர் இறை அச்சம் உள்ளவரோ, அவரே அல்லாஹ்விடம் கண்ணியம் மிக்கவர்.
(அல்குர்ஆன்: 49:13)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அரபியை விடை அரபியில்லாதவருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை; அரபியல்லாதவரை விட அரபியருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை. கருப்பரை விட வெள்ளையருக்குச் சிறப்பு இல்லை. வெள்ளையரை விட கருப்பருக்கு எவ்விதச் சிறப்பு இல்லை. அறியாமைக்கால மூட பழக்க வழக்கங்களை என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன். (ஆதார நூல்: முஸ்லிம்)
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது என்று மார்க்கம் கூறி இருக்கும்போது, குலம், கோத்திரம், சாதி அடிப்படையில் ஒருவர் மற்றவரை இழிவாகக் கருதுவது பெருமை ஆகும். நான் ராவுத்தர், நீ மரக்காயர், நான் ஸையது வம்சம். நீ லெப்பை, நான் உருது, நீ தமிழ் என்றெல்லாம் பிறப்பின் அடிப்படையில் மொழியின் அடிப்படையில் இழிவாகக் கருதுவது பெருமை ஆகும்.
செல்வம்
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் தான் நாடியவருக்கும் செல்வத்தை அதிகமாக வழங்குகிறான். (தான் நாடியவர்க்கு) அளவாகவும் வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:245)
செல்வந்தர்களாக இருப்பவர்கள், தனக்குக் கீழே இருப்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும், பேசுவதும், ஆடைகள் விஷயத்தில் கரண்டைக் காலுக்கும் கீழே ஆடை அணிந்து மற்றவர்களைக் கேவலமாகப் பேசுவதும் பெருமையின் அடையாளமே ஆகும். இது போலவே கல்வி கற்றுள்ளோம் என்று எண்ணுபவர், படிப்பறிவு இல்லாதவரை இழிவாக எண்ணுவது, பதவி பொறுப்புக்களைக் கொண்டு பெருமை அடிப்பது மற்றும் தனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களை இழிவாக எண்ணுவது அதிகமதிகம் உள்ளது. இவை எல்லாம் பெருமையின் அடையாளமே.
விளைவு
வசதிக் குறைவு உள்ளவன் வசதி உள்ளவன் போல பகட்டுக் காட்டி பெருமை அடிக்கிறான். படிப்பறிவு இல்லாதவன் படித்தவன் போல நடித்து பெருமைப்பட்டுக் கொள்கிறான்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மறுமையில் மூவருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்கவும் மாட்டான். கருணைக் கண்கொண்டு பார்க்கவும் மாட்டான். அவர்கள் யாரெனில்
- முதுமையில் விபச்சாரம் செய்தவர்
- பொய்யுரைக்கும் அரசன்
- பெருமை அடிக்கும் ஏழை
ஆகியவர்கள் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதார நூல்: முஸ்லிம், நஸாயீ
முடிவாக
அல்லாஹ் கூறுகிறான்: அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம், பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள், அவர்களுடன் வாதாட முற்பட்டால் “”சாந்தி உண்டாகட்டும்” என்று கூறி (விலகி) சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன் : 25:63)
நன்றி : தவ்ஹீத், செப்டம்பர் 2013