நபிவழித் திருமணம் எங்கே?
திருமணம் என்பது ஓர் ஆணும் ஓர் பெண்ணும் வாழ்க்கையில் இணையும் ஓர் ஒப்பந்தம். ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் சந்தோஷமான நிகழ்ச்சியாகும். இந்த சந்தோஷம் காரணமாகத் தங்கள் மீதுள்ள பொறுப்பை, கடமையை மறந்து விடுகின்றனர். இஸ்லாமியத் திருமணங்கள் குர்ஆன் மற்றும் நபிவழிக்கு மாற்றமாகவே நடக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் தும்முபவருக்குப் பதில் சொல்வதிருந்து திருமணம் மற்றும் ஜனாஸா வரைக்கும் அனைத்தையுமே கற்றுத் தந்துள்ளார்கள். திருக்குர்ஆன் கூட நபி (ஸல்) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
இறை நம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் உள்ளவர்கள் நபி (ஸல்) அவர்களையே முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டுமென திருக்குர்ஆன் கட்டளையிட்டுள்ளது. திருமண விஷயத்தில் யாரும் இவ்வசனத்தின் கருத்தைக் கண்டு கொள்வதில்லை.
இன்றைய இஸ்லாமியத் திருமணங்கள் ஆடம்பரமாகவும், பகட்டாகவும் நடக்கின்றன. இவை இஸ்லாமியத் திருமணத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.
''ஆடம்பரமின்றி எளிமையாக நடக்கும் திருமணமே இறையருள் நிறைந்த திருமணம்'' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றை முஸ்லிம்கள் ஏன் கண்டு கொள்வதில்லை?
பத்திரிக்கை அடித்தல், பந்தல் போடுதல், வாழை மரம் கட்டுதல், வீடியோ எடுத்தல், கருகமணி கட்டுதல் இன்னும் இது போன்ற பல செயல்கள் திருமணத்தில் நடக்கின்றன. இவற்றையெல்லாம் இஸ்லாம் அனுமதிக்கிறதா? நாம் செய்யலாமா? என்று யாரும் சிந்திப்பதில்லை. இவையெல்லாம் மாற்று மதத்தவர்களின் செயலாகும். இதைப் பின்பற்றி நடப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்று கூறுகிறது ஒரு நபிமொழி.
யார் மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறார்களோ அவர்கள் அம்மதத்தைச் சார்ந்தவர்களே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பஸ்ஸார்)
நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏராளமான திருமணங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றில் கூட பந்தல் போடவில்லை, வாழைமரம் கட்டவில்லை, வீடியோ எடுக்கவில்லை. மிக மிக எளிமையாகவே நடந்துள்ளது.
நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் திருமணம் நபி (ஸல்) அவர்களுக்கே சொல்லப்படாமல் நடந்துள்ளது. அவர்களின் மீது படிந்திருந்த நறுமணத்தைப் பார்த்தே நபி (ஸல்) அவர்கள் திருமணம் நடந்ததைக் கண்டுபிடித்து, ''உமக்குத் திருமணம் முடிந்து விட்டதா?'' என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் என்றால் அந்தத் திருமணங்கள் எவ்வளவு எளிமையாக நடந்திருக்கும்?
மணப் பெண்ணை ஓர் அந்நிய ஆடவன் உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து வீடியோ எடுக்கின்றான். ஒரு பெண்ணை முழுவதுமாகப் பார்ப்பதற்கு, கணவனுக்கு மட்டும் தான் உரிமை உள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன் யாரோ ஒருவனை ரசிக்க விடுவது எவ்வளவு பெரிய கேவலமான காரியம் என்பதை முஸ்ம்கள் சிந்திக்க வேண்டும்.
திருமணம் என்ற பெயரில் எவ்வளவு பெரிய ஆடம்பர விருந்துகள் கொடுக்கின்றனா? நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டின் படி திருமண விருந்து என்பது மணமகன் தரும் வலீமா விருந்து மட்டும் தான். பெண் வீட்டார் போடும் விருந்திற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இரு வீட்டாரும் போட்டி போட்டுக் கொண்டு விருந்தளிப்பதும் அதில் பகட்டைக் காட்டுவதும் நபிவழிக்கு எதிரானதாகும். இந்த விருந்துக்காக வட்டிக்கு வங்குவதும், வீட்டை விற்பதும், கடன் வாங்குவதும் என்ற நிலையை நாம் பார்க்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் காட்டிய வலீமா விருந்து கூட அவரவர் வசதிக்கேற்ப அளித்துக் கொள்ளலாம். ஊர் முழுக்க விருந்து தர வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
நபி (ஸல்) அவர்கள் தமது திருமணத்தின் போது இரண்டு கையளவு மட்டமான கோதுமையில் வலீமா விருந்து கொடுத்தார்கள். (புகாரி 5172)
நபி (ஸல்) அவர்களின் திருமண விருந்தில் மிகப் பிரம்மாண்டமான விருந்தாகக் கொடுத்தது ஸைனப் (ரலி) அவர்களை மணமுடிக்கும் போது கொடுத்த வலீமா விருந்து தான். அதில் அவர்கள் கொடுத்தது ஒரே ஒரு ஆட்டை அறுத்து விருந்தளித்தது தான். (புகாரி 5168)
இவ்வாறு திருமணத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக மிக எளிமையாக காட்டிய திருமணத்தை மாற்று மதத்தவர்களின் திருமண முறையைக் காப்பியடித்து, திருமணம் என்பதை மிக மிகக் கடினமானதாக ஆக்கிய நம் சமுதாயம் திருந்த வேண்டும். எல்லா விஷயங்களிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும்.
நன்றி: துபை TNTJ
நன்றி: துபை TNTJ