உறவோடு உறவாடுவோம்
நம்மில் சிலர் உறவினர்கள் விஷயத்தில் பாரபட்சமாகவும், பாராமுகமாகவும் இருப்பதை காண்கிறோம். உறவிலேயே பணக்காரர் என்றால் அவர்களுக்கென்று ஒரு தனி மரியாதை, அதுவே ஏழை என்றால் அப்படியே கண்டும் காணதது போல் விட்டுவிடுவது போன்ற செயல்கள் நடந்து வருவதை பார்க்கிறோம். எனவே உறவைப் பேணுவதின் முக்கியத்துவத்தை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அறிந்து கொள்ளவே இந்த வெளியீடு அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணியமும், மகத்துவமும் பொருந்திய அல்லாஹ் தன் திருமறையில்...
'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிருத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.' ஸுரா அன்னிஸா(4:1)
மேற்கண்ட வசனத்தில் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்களை புரியக்கூடிய அடியார்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான் பாருங்கள். சுவனத்திற்குச் செல்லக்கூடிய அவர்கள் தங்களுடைய உறவினர்களுடன் அன்பு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறான். அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமியார், மாமனார், சித்தி, சித்தப்பா போன்ற நெருங்கிய உறவினர்களுடன் உறவைப் பேண வேண்டும் என்றும், அவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் மேற்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.
'நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்த தனது அடியார்களுக்கு இதையே அல்லாஹ் நற்செய்தியாகக் கூறுகிறான். 'உறவின் அடிப்படையில் ஏற்படும் அன்பைத் தவிர இதற்காக(வேறு) கூலியை நான் உங்களிடம் கேட்கவில்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! நன்மை செய்வோருக்கு அதில் நன்மையை அதிகரிப்போம். அல்லாஹ் மன்னிப்பவன். நன்றி செலுத்துபவன்.' ஸுரா அஷ்ஷுரா(42:23)
ஏழை, எளிய உறவினர்கள் தங்களுடைய அவசியமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் வாய் திறந்து கேட்பதற்குக் கூச்சமுடையவர்களாக இருக்கலாம். நாம்தான் அவர்களுடைய நிலையைக் கவனித்து நம்முடைய தேவைக்கு அதிகமாக உள்ள செல்வத்தைக் கொண்டு உதவுவது நம்முடைய முக்கியமான கடைமையாகும். அல்லாஹ் தன் திருமறை குர்ஆனில்...
'உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.'ஸுரா அர்ரூம் (30:38)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
'ஆதமின் மகனே! (உன்னுடைய தேவைக்கு) மேலதிகமானதை நீர் செலவிடுவதே உமக்குச் சிறந்ததாகும். அதனைச் செலவிடாமல் தடுத்து வைத்திருப்பது உமக்குக் கெடுதியாகும். தேவைக்கெனத் தடுத்து வைத்திருப்பதற்காக நீர் சபிக்கப்பட மாட்டீர். எனவே (செலவிடும்போது) சுற்றத்தினரைக் கொண்டு ஆரம்பம் செய்வீராக! உயர்ந்து நிற்கும் கரமே தாழ்ந்திருக்கும் கரத்தினை விடச் சிறந்ததாகும்.' அறிவிப்பவர்: அபூஉமாமா ( ரலி) நூல்: முஸ்லிம்
எனவே, நம்முடைய தேவைக்காக தடுத்து வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், தேவைக்கு மேலதிகமாக உள்ள செல்வத்தை தர்மம் செய்வது மிகவும் நல்லதாகும். நம்முடைய மறுமை வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவும். அப்படி தர்மம் செய்யும்போது நம்முடைய உறவினர்களுடைய தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
ஏழைக்குச் செய்யும் தர்மம் ஒன்று மட்டுமேயாகும். ஆனால், அது உறவினருக்குச் செய்யப்பட்டால், தர்மமும் உறவினரை ஆதரித்தல் ஆகிய இரண்டு (நன்மைகள் செய்தது) ஆகும்.அறிவிப்பவர்: சுலைமான் இப்னு ஆமிர் (ரலி) நூல்: திர்மிதீ
மேற்கண்ட நபிமொழி மூலம், உறவினருக்கு பொருளாதார உதவிகள் செய்வது தர்மத்தின் நன்மை மட்டுமின்றி, உறவினரை ஆதரித்ததற்கான கூலியையும் பெறலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஏழை உறவினர்களுடன் பழகினால் அவர்கள் அடிக்கடி வந்து தங்களுடைய தேவைகளுக்காக உதவி கோருவார்களோ என்று பயப்படுகிறார்கள். முன்பு வறுமையில் வாடியவர்கள் இன்று புதுப் பணக்காரனாக மாறியவுடன் பழைய உறவுகளை எல்லாம் மறந்துவிடுகிறார்கள். ஒரு பணக்காரன் உறவில்லாத மற்ற பணக்காரர்களுடன் தான் நெருங்கிப் பழகுவதைப் பார்க்கலாம். விருந்துகளில் கூட நெருங்கிய ஏழை உறவினர்களை ஏழை என்ற ஒரே காரணத்திற்காக கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்! அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் உறவினரைச் சேர்த்துக் கொள்ளட்டும்... அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
இரத்த பந்த உறவு அல்லாஹ்வின் அர்iஷப் பிடித்துக் கொண்டு கூறும்: 'என்னை யார் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் என்னைத் துண்டிக்கிறாரோ, அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.' அறிவிப்பவர்: ஆயிஷh (ரலி) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு நபிமொழியில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொள்வதோடு உறவைப் பேணுவதை சம்பந்தப்படுத்துகிறார்கள்.
மற்றொரு நபிமொழியில்,
'யார் உறவைத் துண்டிக்கிறாரோ, அவருடன் அல்லாஹ்வும் தன் உறவைத் துண்டித்து விடுவதாக' கூறுகிறார்கள். அல்லாஹ்வுடைய உறவை துண்டித்துவிட்டு நாம் இம்மையிலும், மறுமையிலும் என்ன பலனை பெற்றுவிட முடியும்? இவ்வாறு கண்டிக்கும் இறைவன் உறவைப் பேணுபவர்களுக்கு இவ்வுலகில் சில சலுகைகளைத் தருகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.' அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புஹாரி
எல்லா மனிதர்களும் தனக்கு அதிக செல்வம் கிடைக்க வேண்டும் என்பதையும், தாங்கள் அதிக நாட்கள் வாழவேண்டும் என்பதையும் விரும்புவார்கள். அப்படி விரும்பக்கூடியவர்கள், உறவினர்களைப் பேணுவதன் மூலம் செல்வத்தையோ அல்லது அதிக ஆயுளையோ பெறலாம். இது அல்லாஹ்வின் அருட்கொடை, இந்த உலகில் மனிதர்கள் தங்களுடைய இரத்த உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான அன்பளிப்புகள். மறுமையிலும் அவர்கள் அல்லாஹ்விடம் நிறைய வெகுமதிகளை இன்ஷா அல்லாஹ் பெறமுடியும்.
இன்னும் சிலர் தங்களுடைய உறவினர்களுடன் நல்லமுறையில் நடந்து வந்தபோதும், அவர்கள் நமக்கு தீங்கு செய்கிறார்கள் என்று கூறி உறவுகளை துண்டித்துக் கொள்கிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பகரத்துக்கு பகரம் செய்பவர், உறவினரைச் சேர்த்துக் கொள்பவர் அல்லர். மாறாக, உறவு துண்டித்து விட்டால், அதைச் சேர்த்துக் கொள்பவரே, உறவைச் சேர்த்துக் கொள்பவர் ஆவார்.'அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) நூல்: புஹாரி
ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் திருத்தூதரே! எனக்குச் சில உறவினர்கள் உள்ளனர். அவர்களை நான் சேர்த்துக் கொள்கிறேன். (ஆனால்) அவர்கள் என்னைத் துண்டித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன். (ஆனால்) அவர்கள் எனக்கு தீங்கு செய்கிறார்கள். அவர்களை நான் பொறுத்துக் கொள்கிறேன். (ஆனால்) அவர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீர் கூறுவதைப் போல் இருந்தால், நீர் அவர்களைச் சுடு சாம்பல் உண்ண வைத்தவர் போன்றவராவீர். (இப்பண்புகளுடன்) நீர் இருக்கும் காலமெல்லாம் உமக்கு உதவுபவர் (வானவர்) இறைவனின் புறத்திலிருந்து உம்முடன் இருப்பார்' என்று பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி
இறுதியாக ஏக இறைவன் தன் திருமறையில்...
'நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.' ஸுரா அத்தஹ்ரீம் (66:6)
எனவே, எந்தவித சாக்குப் போக்குகளையும் சொல்லாமல் நாம் இரத்த உறவினர்களுடன் உறவுகளை பேண முன்வர வேண்டும். நாம் அனைவரும் உறவினர்களுடன் முழுமையான உறவினைப் பேணி வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!
நன்றி: துபை TNTJ
நன்றி: துபை TNTJ