தவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்
உணர்வற்ற ஜடங்கள் என்று உயிரோடு புதைக்கப்பட்டும், இழிவாக நடத்தப்பட்டும் வந்தது பெண் சமுதாயம்.
பெண்கள் என்றாலே போகப் பொருளாகவும், பொழுது போக்கு சாதனமாகவும்பயன்படுத்திய அவலங்கள் அரங்கேறியது அன்றைய அரபுலக தேசத்தில்! சமீபத்திலோபெண்களுக்கு ஆன்மா உண்டா?
என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து விவாதம் நடத்தியது இன்றைய ஐரோப்பிய நாடுகள்.பெண் சமுதாயத்தை இவ்வளவு இழிவாகக் கருதும் மக்கள் மத்தியில் இஸ்லாம்சொல்லும் தீர்வைக் கொஞ்சம் செவி தாழ்த்திக் கேளுங்கள்!
''ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால்... (அல்குர்ஆன்16: 58)
எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் கற்பனை கூட செய்ய இயலாத சுவனத்தின் நற்செய்தியைச் சொல்ல எந்த அரபிச் சொல்லை இறைவன் பயன்படுத்தினானோ அதே 'பஷர' என்ற மூலச்சொல்லைப் பயன்படுத்தியே பெண் குழந்தையை 'நற்செய்தி' என பிரகடனப் படுத்துகின்றான்.
அல்லாஹ்வின் தூதரான அண்ணல் நபியோ, கடுமையான முறையில் பெண்ணடிமைத் தனத்தைப் போற்றி வந்த அறியாமை அரபு மக்களிடம், ''இந்த உலகம் முழுவதும் செல்வம், அந்த செல்வத்திலேயே சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண் தான்'' (நூல்: முஸ்லிம் 1467) என்று கூறி பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்தார்கள்.
பேச்சுரிமையும், பெண் கல்வி கற்றால் குடும்பமே பயன் பெறும் எனக் கூறிகல்வியுரிமையும் காட்டித் தந்தார்கள். மேலும் ஒரு பெண்ணை நல்லொழுக்கத்தோடுவளர்த்து திருமணம் முடித்துக் கொடுக்கும் பெற்றோரும் நானும் மறுமையில் ஒன்றாக இருப்போம் எனக் கூறி பெண்ணடிமையை ஒழிக்கப் பாடு பட்டார்கள்.
எனவே, தன் குழந்தைக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்து இம்மையிலே நல்லமல்களை விளைச்சட்டு மறுமையிலே 'சுவனம்' என்ற சிறந்த பயிரை அறுவடை செய்யத் தயாரான தாய்மார்கள் எத்தனை பேர்?
பெண்களைப் பெருமைப்படுத்தும் இஸ்லாத்தைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் இறைப் பொருத்தம் பெற விரும்பும் வாபப் பெண்கள் தான் எத்தனை பேர்?
எத்தனை மதரஸாக்கள் உருவானாலும் கான்வென்டிற்குக் கிடைக்கும் மவுசே தனி தான். எம்.பி.பி.எஸ். எல்லாம் தோற்றுப் போகும் அளவுக்கு எல்.கே.ஜி படிக்க, பல ஆயிரம் ரூபாய்கள் கூட செலவு செய்யத் தயங்காத பெற்றோர், தன் குழந்தைக்கு பல் கூட துலக்காமல் மதரஸாவிற்கு அனுப்பும் அவலங்களைப் பார்க்கிறோம்.
டியூஷன் செல்ல முகம் கழுவி, பவுடர் போட்டு விடும் தாய்மார்கள், சுத்தத்தைக் கற்றுக் கொள்ள மதரஸாவிற்கு வரும் குழந்தைகளை ஏனோ தானோவென்று அனுப்புவது ஏன்?என்று தெரியவில்லை.
ஸ்கூலுக்கே செல்லாத சின்னப் பிஞ்சுக்கு ஏ.பி.சி.டி சொல்லிக் கொடுத்து ரசிப்பவர்கள் அலிஃப், பா, தா, சொல்க் கொடுக்க வேண்டாம். நமது இறைவன் அல்லாஹ்வையாவது அறிமுகப்படுத்தி வைக்கலாமல்லவா? இணை வைப்பின் கொடுமையை சொல்க் கொடுக்கலாம் அல்லவா! திருக்குர்ஆன் இதற்கு வழி காட்டவில்லையா?
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ''என் அருமை மகனே!அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்''என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வயுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றிசெலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும்உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில்அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அதுபாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன். என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாகநடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்பமாட்டான். ''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்). (அல்குர்ஆன் 31:13,19)
குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வசனங்கள் பெண்களுக்கு சிறந்த வழிகாட்டி இல்லையா?
பெருமை பொருந்திய பெண்களோ, ஓய்வு நேரங்களை டி.வி.யிலும், சீரியல் வருபவரின் வாழ்க்கையைப் பற்றியுமே சிந்தித்து, கடமையைச் செய்ய மறப்பதால் கணவன்மார்களின் நிம்மதி கெட்டுப் போவதைக் கண்டு கொள்வதில்லை.
கணவனை கண்ணியப்படுத்தியும், கல்வி கற்க ஒரு நாளையும் ஒதுக்கிக் கேட்ட ஸஹாபியப் பெண்மணிகள் எங்கே? நாமெங்கே?
கஷ்டப்படும் ஸஹாபாக்களுக்கு அவர்களின் மனைவிமார்கள் தோளோடு தோள்கொடுத்ததால் தோல்வி காணாமலும், தோல்வி கண்டால் துவண்டு விடாமலும்வாழ்ந்தார்கள் என்ற சரித்திரத்தை அறியும் நாம், சரித்திரம் படைக்கப் பயணிக்க வேண்டாமா?
கொடுமைக்கார மன்னனின் மனைவியாக இருந்தும் மூஸா நபிக்கு உற்சாகமூட்டி வெற்றி காணச் செய்த ஆஸியா அம்மையார் அவர்களை மறக்க முடியுமா?
அல்லாஹ்வின் சோதனைகளை எல்லாம் சகித்து வாழ்ந்து, கணவனுக்கு உறுதுணையாகஇருந்து 'அல்லாஹ்வின் உற்ற நண்பன்' என்ற அந்தஸ்தை அல்லாஹ்வே தருமளவுவாழ்ந்த ஹாஜரா அம்மையாரின் தியாகம் தரும் படிப்பினையை நாம் புரிய வேண்டாமா?
உயிருக்குப் பயந்து ஓடி வந்த உலகத் தூதரை அரவணைத்து ஆறுதல் கூறி, மாபெரும்சிறப்பை அடையச் செய்த அன்னை கதீஜா (ரலி) அவர்கள் நம் மனங்களை விட்டு மறைய முடியுமா?
எதிரிகளால் மட்டுமல்லாமல் ஏழ்மையாலும் சோதனை ஏற்பட்ட போது நபிகளாருடனேயே பொறுமை காத்த பன்னிரெண்டு மனைவிகளும், மகளார் பாத்திமா நாயகியும் பெண் இனம் தானே!
தவ்ஹீத் வளர குடும்பத்தோடு தியாகம் செய்த சுமைய்யா (ரலி) அவர்கள் என்னஆரோக்கியமானவரா? வயதான நிலையிலே இஸ்லாத்திற்காக இன்னுயிரை இம்மண்ணுலகில் வைத்த முதல் பெண்மணியாக விளங்கினார் அல்லவா?
நமது பெண்மணிகளின் வீட்டில் தினமும் போர் போன்ற போராட்டம் தான். என்னவித்தியாசம், ஸஹாபியப் பெண்களெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டப்போராடினார்கள். நம் பெண்களோ அடுத்தவரை விட அற்பமான துன்யாவில் ஆடம்பரமாக வாழப் போராடுகிறார்கள்! இதயத்தில் தீனையும் கையில் துன்யாவையும் ஏந்திய ஸஹாபியப் பெண்கள் தீனுக்குத் துன்பம் வந்தால் துன்யாவை வீசி விடுவார்கள்.
நாமோ துன்யாவிற்கு துன்பம் வந்தால் தீனை ஓரங்கட்டி விட்டு இம்மண்ணுலகை முத்தமிடுகிறோம். இதுவா மறுமைக்கான வெற்றியைப் பெற்றுத் தரும்?
உயிரினும் மேலான பெருமானாரின் மீது காயப்படாமல் போரில் பாதுகாத்த உம்முஅம்மாரா (ரலி) அவர்களும் மறுமை வெற்றிக்காகப் பல போர்க் களங்களைக் கண்டஉம்மு ஸலமா (ரலி) அவர்களும் பெண் இனத்திற்கு உரியவர்கள் தானே!
எனினும் இவர்களெல்லாம் தியாகப் பெண்மணிகளாக வாழ்ந்தது, மக்கள் பாராட்ட அல்ல. மலக்குகள் பாராட்ட! இறைப் பொருத்தம் பெற! இறை மார்க்கமான தவ்ஹீத் வளர தோள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான்.
எனவே எப்படி மூஸா நபிக்குப் பின்னால் ஆஸியா அம்மையார் அவர்களும், இப்ராஹீம் நபிக்குப் பின்னால் ஹாஜரா அம்மையார் அவர்களும், முஹம்மத் நபிக்குப் பின்னால் கதீஜா மற்றும் அவர்களின் ஏனைய மனைவிமார்களும் இருந்தது போல் ஒவ்வொரு பெண்களும் ஏகத்துவக் கொள்கையைப் பரப்ப உறுதி கொள்வோம்.
நன்றி: துபை TNTJ