மலிவாகிப் போன மனித உயிர்கள்
மகத்தான படைப்பாளனும் கருனைமிக்க அதிபதியுமாகிய அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான்.அவன் மிகைத்தவன்,மன்னிப்பவன்.(69:2)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இது துல்ஹஜ் மாதமல்லவா? என்றார்கள். நாங்கள் ஆம் என்றோம். அடுத்து (புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோல உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்கள் மானம் மரியாதைகளும் புனிதம் வாய்ந்தவைகளாகும் என்று கூறி விட்டு, இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியை கூறிட வேண்டும் (அறிவிப்பவர்: அபுபக்ரா(ரலி) புகாரி 67)
அமைதிப் பூங்கா என்று பெயர் பெற்ற தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்து வருகின்றன. மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லாமல் ஆகி வருகின்றது. எந்த ஒரு நாளிதழைப் புரட்டினாலும் மாதந்தோறும் நூறு கொலைகளுக்குக் குறையாமல் நடப்பதை அறிந்து நாம் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.
தமிழக முதல்வரிடம் கேட்டால் ஏதாவது ஒரு மாநிலத்தை தேடிப்பிடித்து உதாரணம் காட்டி அங்கே 101 கொலைகள் நடக்கின்றன. அதை விட தமிழகத்தில் ஒன்று குறைவுதான் என்பதைப் பதிலாகத் தந்தாலும் தருவார்.
இது புள்ளி விபரங்களால் சமாளிக்கும் பஸ் கட்டண உயர்வு போன்ற பிரச்னை அல்ல. மனிதர்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை.இது குறித்து அதிகாரிகளை கேட்டால் ரவுடிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கிறோம் என்று வழக்கமான பதிலைச் சொல்லி வருகின்றனர். இவ்வாறு பதில் சொல்வார்களானால் இவர்கள் பிரச்னையைப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நாம் நிணைக்க வேண்டியுள்ளது.
ரவுடிகள் மாத்திரம்தான் கொலை செய்கிறார்கள் என்ற அளவில்தான் இந்த பிரச்னையைப் புரிந்து கொண்டுள்ளனர். ரவுடிகள் மாத்திரம் கொலை செய்து கொண்டிருந்தால் இந்த அளவுக்கு கொலைகள் அதிகரித்திருக்காது.மாறாக ரவுடிகள் அல்லாதவர்களும் அற்ப காரணத்துக்காக கொலையாளிகளாக மாறி விட்டதுதான் கொலைகள் அதிகரித்து வருவதற்குக் காரணமாகும்.
முன்பெல்லாம் ரவுடி எனப் பெயர் பெற்றவர்களும் இயல்பாகவே மனித உயிர்களைப் பற்றி கவலைப்படாத வர்களும்தான் கொலையாளிகளாக இருந்தனர்.
ஆனால் இன்ற நடக்கும் கொலைகள் கள்ளக் காதல் காரணமாகவும், கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த காரணத்துக்காகவும், சொத்து தகராறுக்காகவும், ஒரு தலைக் காதல் தொடர்பாகவும் நிலப்பிரச்னை காரணமாகவும் நடக்கின்றன.
இயல்பிலேயே கொடூர குணம் இல்லாத இவர்கள் கொலையாளிகளாக உருவெடுத்திருக்கும் காரணத்தால் தான் கொலைகள் அதிகமாகியுள்ளன. இவர்கள் இதற்கு முன் எந்தக் கொலையிலும் ஈடுபடாத புதுக் கொலையாளிகளாக உள்ளனர்.
33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்கும் பெண்கள் கூட இது போன்ற கொலைகளில் 33 சதவிகிதத்தைத் தாண்டி இருப்பதையும் நாம் அறிய முடிகிறது.தண்டனைகள் பற்றி கவலைப்படாத ரவுடிகளின் கொலைச் செயல்களில் இருந்து இவர்களின் கொலைகளைப் பிரித்துப் பார்த்து அதற்கேற்ற திட்டங்களை வகுத்தால்தான் கொலைகளை தடுக்க முடியும். மனித உயிர்கள் புழு பூச்சி களின் உயிருக்கு சமமாக மதிக்கப்படும் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஒரு நல்லரசின் கடமையாகும்.
சிறைச்சாலைப் பற்றியோ, நீதிமன்றம் பற்றியோ சிறிதும் பயம் இல்லாத ரவுடிகளைக் கண்டறிந்து ஒடுக்குவது காவல்துறை நிணைத்தால் சாத்தியமாகக் கூடியதுதான். அதைச் செய்வதன் மூலம் ரவுடிகளால் நிகழ்த்தப்படும் கொலைகளைதான் தடுக்க முடியும்.
ஆனால் எட்டு கோடி தமிழர்களில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொலையாளிகளாக மாறுவார் கள் என்றால் அதைத் தடுப்பதற்கு ரவுடிகளை ஒழிப்பது மட்டும் போதாது. மாறாக இது குறித்து தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும். சட்டத்துக்குப் பயப்படக்கூடிய பொதுமக்கள் எப்படி கொலை செய்யும் அளவுக்குத் தைரியம் பெறுகிறார்கள்? அந்த தைரியம் அவர்களுக்கு வராத வகையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்தித்தால் மட்டுமே இதை ஒழித்துக் கட்ட முடியும்.
இரண்டே இரண்டு காரியங்களை ஒரு அரசு உறுதியுடன் செயல்படுத்தினால் பொதுமக்கள் கொலையாளிகளாக மாறுவதைத் தடுக்க முடியும். மக்களின் மனப்போக்கில் இந்த மாறுதல் எப்போது முதல் ஏற்பட்டது? எப்போது முதல் இதுபோல் பொது மக்களும் கொலையாளிகளாக மாறும் அளவுக்கு மூளை கெட்டுப் போனார்கள்?
எப்போது தனியார் தொலைக்காட்சிகள் அனுமதிக்கப்பட்டு நெடுந்தொடர்கள் மக்கள் வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறியதோ அப்போது முதல்தான் மக்களின் மனநிலையில் கொலை செய்வது சாதாரணமான ஒன்று என்ற எண்ணம் உருவானது. அற்ப காரணங்களுக்காகக் கூட கொலை செய்யலாம் என்ற எண்ணம் வளர்ந்ததற்கு நெடுந்தொடர்கள் தான் காரணம்.
திமுக ஆட்சியானாலும் அதிமுக ஆட்சியானாலும் இதுபோன்ற கொலைகள் அதிகரித்தே வந்துள்ளன. நெடுந்தொடர் நோய் ஏற்படுவதற்கு முன்னர் பொது மக்களே இந்த அளவுக்கு கொலையாளிகளாக மாறியதில்லை.
சினிமாக்களிலும் கொலைக் காட்சிகள் காட்டப்பட்டன. ஆள் கடத்தல் காட்சிகள் காட்டப்பட்டன. ஆனால் ரவுடிகள் தான் அதில் கொலையாளிகளாகக் காட்டப்பட்டனர். இதனால் கொலை செய்தவன் ரவுடி என்ற மனநிலைதான் சினிமாக்களால் மக்களுக்கு ஏற்பட்டன.
ஆனால் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்களில் குடும்பத் தலைவி கண்களை உருட்டி மிரட்டுவதும், அடுத்தவளின் கணவனைக் கடத்தி வருவதும் அடியாட்களை வைத்து கொலை செய்வதும் தொடர்ந்து காட்டப்படுகறது. எல்லா நெடுந்தொடர்களுக்கும் இதுவே இலக்கணமாக மாறி விட்டது. இப்படி பொதுமக்களைக் கொலையாளிகளாக தொடர்ந்து காட்டப்படால் நாமும் கொலை செய்வது தவறல்ல என்ற எண்ணம் தானாகவே மக்கள் மனதில் ஆழப் பதிந்து விடும்.
பொதுமக்களும் கொலையாளிகளாக மாற இந்த நெடுந் தொடர்கள் செய்யும் மூளைச் சலவை தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. எந்த உளவியல் நிபுணர்களிடம் கேட்டாலும் இதுபோன்ற காட்சிகள் மக்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுவார்கள்.
- கள்ளக்காதலியுடன் உல்லாசம் வாலிபர் கொலை (நவம்பர் 28)
- அன்னியுடன் கள்ளத்தொடர்பு – தம்பி கொலை(டிசம்பர் 9)
- ஒருதலை காதல் பேராசிரியை கொலை (டிசம்பர்10)
- மனைவி கொலை – கணவன் கைது (நவம்பர் 7)
போன்ற செய்திகளுக்குப் பின்னால் நெடுந்தொடர்களின் தாக்கம் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
எதிர்காலத்தில் இதுபோன்ற கொலைகள் நடக்கக்கூடாது என்பதில் அரசாங்கத்துக்கு அக்கறை இருந்தால் நெடுந்தொடர்களில் பொது மக்களும் குடும்பத் தலைவர்களும் தலைவிகளும் கொலையாளிகளாகவும் குழந்தைகளைக் கடத்துவோராகவும் சித்தரிக்கும் காட்சி களுக்குத் தடை போட வேண்டும்.
இப்படி செய்யாதவரை இது போன்ற கொலைகள் நடப்பதை எந்த அதிகாரிகளாலும் தடுத்து நிறுத்த முடியாது. நாளுக்கு நாள் இதுபோன்ற கொலைகள் மேலும் அதிகரிப்பதையும் தடுக்க முடியாது.
ஆனால் இதை திமுக அரசோ எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் அதிமுக அரசோ அல்லது விஜயகாந்தோ யாராக இருந்தாலும் தடுப்பார்களா என்பது சந்தேகத்துக்கு உரியதுதான். ஏனெனில் இந்தச் சேவையை இவர்கள்தான் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
நாம் சுட்டிக் காட்டியது போன்ற காட்சிகளை மட்டும் தடுப்பதால் இவர்களின் தொழிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உணர்ந்து கொள்வார்களானால் மனித உயிர்களைப் பாதுகாப்பதற்காக நெடுந்தொடர்களுக்கு இந்தக் கட்டுபாட்டை விதிக்க தயங்க மாட்டார்கள். இது முதலாவது செய்ய வேண்டிய காரியம்.
இத்துடன் மற்றொன்றையும் அரசாங்கம் உடனே செய்தாக வேண்டும்.நமது நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையினரின் எண்ணிக்கை இல்லை. மக்களின் தொகைக்கேற்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் நீதிபதிகளின் எண்ணிக்கையும் இல்லை. குற்றங்களின் எண்ணிக்கை;கு ஏற்பவும் நீதிமன்றங்களின் எண்ணிக்கை இல்லை.
இதன் காரணமாக ஒவ்வொரு வழக்குகளும் புலன் விசாரணை செய்யவும் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆயிரக்கணக்கான வாய்தாக்கள் போட்டு தீர்ப்பு வழங்கப்படுவதற்கும் இருபது முப்பது ஆண்டுகள் ஓடி விடுகின்றன.
ஒருவன் கொலை செய்து உடனே மாட்டிக் கொண்டாலும் அவன் 90 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவான். அதன் பின் ஜாமினில் வந்து விடலாம். அதன் பின்னர் விசாரித்து தீர்ப்பளிக்கப்படுவதற்குள் பல சாட்சிகள் செத்து விடுவார்கள். பல நீதிபதிகள் மாறி விடுவார்கள். நமது குற்றம் நிரூபணமாகாது என்று ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வைத்துள்ளார்.
அப்படியே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும் அதற்கு முன்பே நமக்கு இயற்கை மரணம் வந்து விடும் என்றும் தெரிந்து வைத்துள்ளார்.அல்லது இல்லற சுகத்துக்கும் இன்ன பிற இன்பங்களுக்கும் ஆசைப்படாத பருவத்தை அடைந்து விடுவோம். அப்போது சிறைக்குப் போவது நமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளதால் கொலை உள்ளிட்ட குற்றங்களைச் சாதரணமாகச் செய்ய முடிகிறது.
எந்தக் குற்றமாக இருந்தாலும் அந்தக் குற்றம் நடந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கும் அளவுக்கு நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் நீதிபதிகளின் எண்ணிக் கையும் அதிகரிக்க வேண்டும். காவல்துறை எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் இதை உடனே செய்ய முடியாது எனக் கூறி நிதி ஆதாரத்தை அரசாங்கம் காரணம் காட்டலாம். ஏத்தனையோ தேவையற்ற வழிகளில் செலவழிக்கும் நிதியை நிறுத்தினாலே மக்களுக்கு நீதி வழங்குவதற்கு அதைச் செலவழிக்கலாம்.ஆனாலும் அரசியல்வாதிகள் இது போன்ற ஊதாரித்தனங்களை விட மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.
ஒட்டு மொத்தமாக அனைத்து குற்றங்களுக்கும் விரைந்து நீதி வழங்க விருப்பமில்லா விட்டால் கொலைக் குற்றத்தை மட்டும் விரைந்து முடிக்க தனியாக ஏற்பாடு செய்வது அரசுக்குச் சிரமமானது அல்ல.
தமிழகத்தில் நடக்கும் எந்தக் கொலையாக இருந்தாலும் அதை மட்டும் விசாரிக்க தனி அமைப்பை உருவாக்கலாம். கொலை வழக்கை மட்டும் விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்கலாம். கொலை வழக்கை விரைந்து விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். மற்ற வழக்குகளை இழுத்தடிப்பது போல் கொலை வழக்கை இழுத்தடிக்கும் குறுக்கு வழிகள் அனைத்தையும் அடைக்கலாம்.
இப்படி உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கப்படுவதால் பெரும்பாலும் குற்றவாளிகள் தப்ப முடியாது. உடனுக்குடன் தண்டிக்கப்படும் செய்திகள் மக்கள் மத்தியில் வரவும் போது மக்களுக்கு அச்சம் ஏற்படும். பொது மக்களால் நிகழ்த்தப்படும் கொலைகள் முற்றாக ஒழிந்து விடும்.மற்ற குற்றங்களில் சமரசம் செய்து கொள்வதுபோல் மனித உயிர்கள் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று மாநில அரசாங்கம் நினைத்தால் இது மிக எளிதானது தான்.
இலவசங்களையும் இன்ன பிற திட்டங்களையும் விட மனிதன் உயிருடன் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். மனிதர்களின் உயிர்வாழும் உரிமையை முதல் உரிமையாக வழங்க அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசாங்கத்தின் காதில் இது விழுகிறதா என்று பார்ப்போம்.
(இறைவனை)அஞ்சி, நம்பிக்கைக் கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, நம்பிக்கை கொண்டு பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்வற்றை முன்னர்) உட்கொண்டதற்காக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான் (அல்குர்ஆன் 5:93)
அவனே உங்களை படைத்தான். உங்களுக்கு செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக! அவனே பூமியில் உங்களை பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 67: 23-23)
நன்றி: துபை TNTJ
நன்றி: துபை TNTJ