நல்லிணக்கம் ஏற்படுத்துதல்
அன்றாட வாழ்வில் மனிதன் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறான். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் சில வேளை அவனுக்குப் பிரச்சனைகள் எழுகிறது. ஒரே தெருவில் வசிக்கின்ற அண்டை வீட்டாருடனும் சில பிரச்சனைகளை அவன் சந்திக்க நேரிடுகிறது.நெருங்கிப் பழகும் நண்பர்கள், நம்மிடம் வியாபாரம் செய்யும் நுகர்வோர் இன்னும் இது போன்று பலதரப்பட்டவர்களிடம் அடிக்கடி பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
இந்நேரங்களில் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக யாரும் முன் வராவிட்டால் சில நேரங்களில் தன்னுடைய சுயநினைவு இழந்து ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று கூட சிந்திக்காமல் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன.
தினந்தோறும் பிரச்சனைகளைச் சந்திக்கின்ற நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற அமைப்புக்கள் முதன் முதல் இணக்கத்தை ஏற்படுத்தவே முனைகின்றன. இதனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்தச் செயல் மனிதர்களுக்குப் பலன் தருவதால் இஸ்லாம் இணக்கத்தை ஏற்படுத்துவதை வயுறுத்திச் சொல்கிறது. சச்சரவுகள் தோன்றும் போது, 'நாம் ஏன் சிக்கல் மாட்டிக் கொள்ள வேண்டும்?' என்று நினைத்து ஒதுங்கிக் கொள்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.
இறைவனை நம்பியவர்கள் இவர்களைப் போன்று சுயநலம் கொண்டவர்களாக இல்லாமல் பிறர் நலம் பேணும் பொதுநலம் கொண்டவர்களாகத் திகழ வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமியர்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனால் இந்த உலகத்தில் பயன் ஏற்படுகிறதோ இல்லையோ! மறு உலக வாழ்வில் பயன் கிடைக்குமா? என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதால் இந்த உலகத்தில் நன்மை கிட்டாவிட்டாலும் மறுமை நாளில் நிச்சயம் இதற்குக் கூ உண்டு என்று கூறி இஸ்லாம் இதில் ஆர்வமூட்டுகிறது. இச்செயலைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வுடைய அருளை நம்மால் பெற முடியும் என்று திருக்குர்ஆன் உணர்த்துகிறது.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:9,10)
இந்த வசனம் நபித் தோழர்களுக்கிடையே பிரச்சனைகள் எழுந்த போது தான் அருளப்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், ''தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்'' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லி ம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்த போது அவன், ''தூர விலகிப் போவீராக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்தி விட்டது'' என்று கூறினான். அப்போது அவர்களுடன் இருந்த (அன்சாரித்) தோழர் ஒருவர், ''அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனை உடையதாகும்'' என்று கூறினார்.
அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங்குச்சியாலும் கைகளாலும் செருப்புக்களாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது 'இறை நம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்' (49:9) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது எனும் செய்தி எங்களுக்கு எட்டியது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (2691)
இணக்கத்திற்காக இரகசியம் பேசலாம்
இரகசியமாக மக்கள் பேசுகின்ற பெரும்பாலான பேச்சுக்களில் எந்த விதமான நன்மையும் இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது. தேவையற்ற விஷயங்களை இரகசியமான முறையில் பேசுவதை வெறுக்கவும் செய்கிறது.
ஆனால் இருவருக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இரகசியம் பேசலாம் என்று அனுமதி தருகிறது. அத்துடன் இல்லாமல் இந்தச் செயலை சுயலாபங்களுக்காக இல்லாமல் அல்லாஹ்விற்காகச் செய்தால் மகத்தான பரிசும் கிடைப்பதாக குர்ஆன் நற்செய்தி கூறி இந்தச் செயல் ஆர்வமூட்டுகிறது.
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம். (அல்குர்ஆன் 4:114)
தர்மம் என்றால் வறியவர்களுக்குப் பொருளுதவி செய்வது மாத்திரம் தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு வகையில் நம் மூலம் பிறருக்கு நன்மை கிடைக்குமானால் அதுவும் தர்மம் தான்.
பிரச்சனைக்கு நியாயமான முறையில் தீர்ப்பளிப்பது மக்களுக்குப் பலன் தருவதால் நபியவர்கள் இதைத் தர்மம் என்று கூறியுள்ளார்கள். இச்செயலை எல்லோரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நமக்களித்துள்ள மூட்டுகளுக்குத் தர்மம் செய்வதைக் கடமையாக்கி, இச்செயல் புரிவதன் மூலம் அந்தக் கடமையை நிறைவேற்ற முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (2707)
மார்க்கத்தில் நோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களுக்கு ஏராளமான சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வணக்கங்களை விட மக்களுடைய பிரச்சனைகளை சரிசெய்வது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் ''ஆம்! அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். ''(அது) மக்களுடைய பிரச்சனைகளை சீர் செய்வதாகும். மக்களுக்கிடையே குழப்பத்தை விளைவிப்பது (நன்மைகளை) அழித்து விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுத்தர்தாஃ (ரலி) நூல்: திர்மிதி (2433)
பொய் சொல்லலாம்
மார்க்கம் பொய் சொல்வதை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் காரியமாக எச்சரிக்கிறது. நல்ணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒருவன் பொய் சொன்னால் அது பொய்யாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம்) நல்லதை (புனைந்து) சொல் மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன். அறிவிப்பவர்: உம்மு குல்தூம் (ரலி) நூல்: புகாரி (2692)
இறைவனின் மன்னிப்பு கிடைக்காது
சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் பிரிந்து வாழும் சகோதரர்களுக்கு இறைவனுடைய மன்னிப்பு கிடைப்பதில்லை. நல்ணக்கத்தை ஏற்படுத்துபவர்கள் இந்த மோசமான நிலையிருந்து சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கிறார்கள். இறைவனுடைய மன்னிப்பு என்ற பாக்கியத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்ததற்காக அவருக்கும் இறைவனுடைய மன்னிப்பு கிடைக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணைவைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. 'இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்!' என்று சொல்லப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4653)
மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார்கள். இதற்கு ஏராளமான நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன.
ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு குபா வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டுக் கொண்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. ''அவர்களிடம் நம்மை அழைத்துச் செல்லுங்கள்! அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல்: புகாரி (2693)
பனூ அம்ரு பின் அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி) நூல்: புகாரி (1201)
நபி (ஸல்) அவர்களின் பேரனும் அலீ (ரலி) அவர்களின் மகனுமான ஹசன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் சில மாதங்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். இக்காலத்தில் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் முஆவியா (ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் திரண்டது.
தன் சமுதாய மக்கள் இரு பெரும் திரளாகத் திரண்டிருப்பதைக் கண்ட ஹசன் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். மக்களுடைய நலனுக்காக, தான் வகித்த ஜனாதிபதி பதவியைத் துறந்தார்கள். இவரின் மூலம் இந்த சமுதாயத்தில் சீர்திருத்தம் ஏற்படும் என்பதை நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே உணர்த்தினார்கள். ஹசன் (ரலி) அவர்களிடம் இருந்த இந்த உயரிய பண்பு நம் எல்லோரிடமும் இருந்து விடுமேயானால் பிரச்சனைகளுக்கும் சச்சரவுகளுக்கும் வேலையே இல்லை.
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (உரை நிகழ்த்தும் போது) மக்களை நோக்கியும் மற்றொரு முறை ஹஸன் (ரலி) அவர்களை நோக்கியும் ''இந்த எனது புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்கவிருக்கிறான் என்று கூறிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: புகாரி (2704)
விட்டுக் கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும்
பிரச்சனையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வலுவானவராகவும் மற்றொருவர் வலுவற்றும் இருந்தால் பலம் படைத்தவரிடம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கும்படி வயுறுத்தி இருவருக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் இருவரில் ஒருவர் தனக்குரியதை விட்டுக் கொடுத்தால் தான் இணக்கம் ஏற்படும். இருவரும் தனக்குரியதில் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தால் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்லும். இதற்கு எந்த ஒரு தீர்வையும் காண இயலாது. நபி (ஸல்) அவர்கள் இது போன்ற நிலையில் இந்த வழிமுறையை கடைப்பிடித்துள்ளார்கள்.
இப்னு அபீ ஹத்ரத் (ரலி) இடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசல் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டிருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து, ''கஅப் இப்னு மாக்!'' என்று கூப்பிட்டார்கள். ''இதோ வந்தேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். ''பாதியைத் தள்ளுபடி செய்வீராக!'' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். ''அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி)யை நோக்கி, ''எழுவீராக! பாதியை நிறைவேற்றும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: கஃபு பின் மாக் (ரலி) நூல்: புகாரி (471)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும் படியும் மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர் ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, ''நன்மை(யானச் செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், ''நான் தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். கடன் வாங்கிய) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்'' என்று கூறினார். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (2705)
என் தந்தை உஹதுப் போரின் போது ஷஹீதாகக் கொல்லப் பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள் என் தந்தைக்கு கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் (மீதியுள்ள கடனை) மன்னித்து விடும்படியும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை) ஏற்க மறுத்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) நூல்: புகாரி (2601)
நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் மற்றொருவரை கயிற்றால் இழுத்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! இவர் என் சகோதரனைக் கொன்று விட்டார்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ''நீ அவரைக் கொன்றீரா?'' என்று கேட்டார்கள். (குற்றவாளியை கொண்டு வந்தவர்) ''இவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் நான் ஆதாரத்தை அவருக்கெதிராக சமர்பிக்கிறேன்'' என்று கூறினார். (கொன்றவர்) ''ஆம் நான் அவரைக் கொன்றேன்'' என்று கூறினார். நபியவர்கள் ''எவ்வாறு அவரைக் கொன்றாய்?'' என்று கேட்டார்கள்.
''நானும் அவரும் பேரீச்ச மரத்தின் இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்குக் கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையில் இருந்த) கோடாரியால் உச்சந் தலையில் அடித்து விட்டேன். அவர் இறந்து விட்டார். (திட்டுமிட்டு இந்தக் கொலையை நான் செய்யவில்லை)'' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ''உன்னை விடுவித்துக் கொள்வதற்குத் தேவையான பொருள் ஏதும் உன்னிடம் உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், ''என்னுடைய கோடாரி மற்றும் ஆடையைத் தவிர வேறு எந்தப் பொருளும் எனக்கு இல்லை'' என்று கூறினார். நபியவர்கள், ''உனது சமுதாயம் (நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்து) உன்னை வாங்குவார்கள் என்று நினைக்கிறாயா?'' என்று கேட்டார்கள். அவர், ''என்னுடைய சமுதாயத்திடம் இதை விட நான் அற்பமானவன்'' என்று கூறினார். உடனே நபியவர்கள் (அவர் கட்டப்பட்டிருந்த) கயிற்றை (வந்தவரிடம்) எறிந்து, ''இவரை நீ பிடித்துக் கொள்!'' என்று கூறினார்கள். அவரை அம்மனிதர் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்ற போது, ''அவரை இவர் (பழிவாங்குதல் அடிப்படையில்) கொன்று விட்டால் இவரும் அவரைப் போன்றாவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டு விட்ட) அவர் திரும்பி வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் அவரைக் கொன்று விட்டால் நானும் அவரைப் போன்றாகி விடுவதாக நீங்கள் கூறியது எனக்கு எட்டியது. (இவ்விஷயத்தில்) நான் உங்கள் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர் உனது பாவத்துடனும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவத்துடனும் திரும்புவதை நீர் விரும்புகிறீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''அல்லாஹ்வின் நபியவர்களே! ஆம் அது அவ்வாறே ஆகட்டும்!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ''அப்படியானால் அந்தக் குற்றவாளி (உன்னால் மன்னிக்கப்பட்டு) இவ்வாறு (உயிருடன்) இருக்க வேண்டும்'' எனக் கூறினார்கள். ஆகையால் அவர் குற்றவாளியின் வழியில் குறுக்கிடாமல் விட்டு விட்டார். அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல்: முஸ்லிம் (3470)
மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் நபி (ஸல்) அவர்கள் நல்ணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பரிந்துரை செய்கிறார்கள். எனக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறி அவர்கள் ஒதுங்கி விடவில்லை. இவ்வாறு அவர்கள் பரிந்துரைக்கும் போது சிலர் அதை ஏற்றுக் கொண்டார்கள்; சிலர் மறுத்து விட்டார்கள்.
இது போன்ற இடங்களில் பலம் பொருந்தியவர்கள் சற்று விட்டுக் கொடுத்தால் தான் சுமூகமான நிலை ஏற்படும். நம்மிடத்தில் கஞ்சத்தனம் மேலோங்கியிருந்தால் இந்த மோசமான தன்மை நம்மை இணக்கமாக விடாது. இணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் கஞ்சத்தனம் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும். எனவே தான் அல்லாஹ் 'சமாதானம் சிறந்தது' என்று சொல் விட்டு, கஞ்சத்தனம் கொள்ளக் கூடாது என்றும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்றும் பின்வரும் வசனத்தில் அறிவுறுத்துகிறான்.
சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:128)
கணவன் மனைவி பிரச்சனை
கணவன் மனைவிக்கு மத்தியில் அதிகமாகப் பிரச்சனைகள் ஏற்படுவதால் இங்கும் சமாதானப்படுத்துதல் அதிகம் தேவைப்படுகிறது. இன்றைக்குப் பல குடும்பங்களில் பிரச்சனைகள் பெரிதாவதற்குக் காரணமாக மூன்றாவது ஆள் இருக்கிறார். இவர்கள் தம்பதியினருக்கிடையே பிரச்சனைகளை எழுப்பாமல் இருந்தாலே சமாதானப்படுத்துவதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. நன்மை செய்யா விட்டாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும்.
இருவருக்கு மத்தியில் சச்சரவுகள் ஏற்பட்டால் மூன்றாவது நபர் வந்து தான் நல்ணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூன்றாவது ஆள் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் இணக்கமாகிக் கொண்டால் அவர்களும் நல்ணக்கத்தை உருவாக்கிய நல்லவர்களின் பட்டியல் வந்து விடுவார்கள். கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்ணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:35)
தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:128)
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் நபியவர்கள் அதில் தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முனைந்திருக்கிறார்கள்.
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று சொல்லப்படும். அவர் (பரீரா தன்னைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ''அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?'' என்று கேட்டார்கள்.
(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்து விட்ட போது) நபி (ஸல்) அவர்கள், ''முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?'' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா, ''அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு கட்டளை இடுகின்றீர்களா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''(இல்லை!) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்'' என்றார்கள். அப்போது பரீரா ''(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை'' என்று கூறிவிட்டார். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி (5283)
வலீத் பின் உக்பாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! வலீத் என்னை அடிக்கிறார்'' என்று முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நபியவர்கள் எனக்கு பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்' என்று நீ அவரிடம் கூறு!'' என்று சொன்னார்கள். (இதன் பிறகு) சிறிது காலம் கூட கழியவில்லை. மறுபடியும் திரும்பி வந்து, ''அவர் எனக்கு அடியைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தவில்லை'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஆடையின் ஒரு பகுதியை அப்பெண்ணிடம் கொடுத்து ''மீண்டும் அவரிடம் நபியவர்கள் எனக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள்' என்று கூறு'' என்றார்கள். சிறிது காலம் கூட கழியவில்லை. அதற்குள் அப்பெண்மணி மறுபடியும் வந்து, ''அவர் எனக்கு அடியைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தவில்லை'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளையும் உயர்த்தி, ''இறைவா! வலீதை நீ பார்த்துக் கொள்! அவர் எனக்கு (அளித்த வாக்குறுதியை) நிறைவேற்றவில்லை'' என்று இரண்டு முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: அஹ்மத் (1236)
மேற்கண்ட இரு நிகழ்வுகளிலும் கணவன் மனைவி பிரச்சனை ஏற்படுகிறது. இதைத் தீர்த்து வைப்பதற்காக நபியவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களது பரிந்துரையை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்க மறுத்து விடுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் பல நிகழ்ந்தாலும் தன்னுடைய மரியாதையை நபியவர்கள் பெரிதுபடுத்தாமல், பிரச்சனைகள் வெடிக்கும் போது அங்கே நல்லிணக்கத்தை அவர்கள் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை.
நன்றி: துபை TNTJ