ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தர்மத்தின் சிறப்பு


தர்மத்தின் சிறப்பு

இஸ்லாம் மனிதசமுதாயத்தின் ஓர் ஒப்பற்ற வாழ்க்கை நெறியாகும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்காக ஏனைய மார்க்கங்கள் செய்யாத வலி­யுறுத்தாத தர்மத்தை, மனித நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் வழங்குவதை இஸ்லாம் கட்டாயமாக்கி இருக்கிறது.

இஸ்லாத்தின் பார்வையில் ஒரு மனிதனுக்கு பொருளாதாரம் வழங்கப்படுவது என்பது அவன் அந்த பொருளாதாரத்தில் தனக்கும் தன்குடும்பத்தாருக்கும் செலவு செய்தது போக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும், அனாதைகளுக்கும், வரியவர்களுக்கும், ஏழைகளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக தர்மம் வழங்குவது அவசியமாகும்.

செல்வம் இறைவனின் அருள்

பொருளாதாரம் என்பது இறைவனின் அருள். இவ்வுலகில் பொருளாதாரம் வழங்கப்பட்டவர்களின் நிலைமையையும், பொருளாதாரம் வழங்கப்படாதவர்களின் நிலைமையையும் இவ்விடத்தில் நாம் சற்று சிந்தித்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். வசதி படைத்தவர்களைவிட வசதி அற்றவர்கள் கல்வி, அறிவு, திறமை கூர்மையான சிந்தனை போன்றவற்றில் உயர்ந்து இருக்கிறார்கள். இருந்த போதிலும் அவர்கள் ஏழைகளாகவும் அன்றடாம் பணத்திற்கு திண்டாடுபவர்களாவும் இருக்கிறார்கள். எனவே தான் பொருளாதாரம் என்பது தங்களின் திறமையால் கிடைப்பது என்று சொல்வதைவிட இறைவனின் அருளால் தான் கிடைக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அதனால்தான் நபித்தோழர்கள் தர்மம் வழங்கும் விஷயத்தில் நான் நீ என்று போட்டி போட்டார்கள். அவர்களில் செல்வம் படைத்தவர்கள், அதிகமதிகமாக தர்மம் செய்தார்கள், செல்வம் இல்லாதவர்கள் அதை செய்வதற்கு இயலாமல் போனார்கள். தர்மம் செய்ய இயலாத ஏழை நபித்தோழர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு துஆவை கற்றுக்கொடுக்கிறார்கள். அந்த துஆவையும் வசதி படைத்த சஹாபாக்களும் கற்றுக் கொண்டு ஓதத் துவங்கிவிடுகிறார்கள். இதை கண்ட ஏழை சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ்வின் அருள்கொடையாகும். அதை அவன் தான் நாடியவருக்கு கொடுப்பான் என்று குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) நூல் : முஸ்லிம் 1044)

அழகான தர்மமும் அழகிய சொர்க்கமும்

அல்லாஹ் வழங்கிய செல்வத்தை வசதியற்றவர்களுக்கு வழங்குவது ஒவ்வொரு முஸ்­லிமின் மீதும் கடமையாகும். அப்படி வழங்கும்போது இறைவனும் நமக்கு பொருளாதாரத்தை வழங்குவான்.

ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்) என்று அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (5352)

வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 272)

ஏழைகளுக்கு உதவுபவர்கள் ஸதகா என்ற வாயில் வழியாக சுவர்க்கத்திற்கு செல்வார்கள். இந்தவழியில் தர்மம் செய்தவர்கள் மட்டுமே செல்ல முடியும். இந்த சிறப்பையும் தர்மம் செய்பவர் பெறுவார்.

எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து அல்லாஹ்வின் அடியாரே இது சிறந்ததாகும் (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்) என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குறிய வாசலி­­ருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலி­­ருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாச­­லிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாச­­லிருந்தும் அர்ரய்யான் என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிருந்தும் அழைக்கப்படுவார் என்று சொன்னார்கள். உடனே அபூபக்கர்(ரலி­) அவர்கள் இந்த வாச­­லிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் ஏதும் இருக்காது (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்) என்று கூறிவிட்டு அவை அனைத்தி­லிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் அபூபக்கரே! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்.அபூஹுரைரா(ரலி) நூல். புகாரீ (3666)

அல்லாஹ்வின் நிழலை பெறுபவர்

தர்மம் செய்தவர் மறுமை நாளில் சூரியன் ஒரு மைல் பக்கத்தில் வந்து கடுமையான வெப்பத்தில் சிரமப்படும் போது தர்மம் செய்தவர் அல்லாஹ்வின் நிழலைப் பெற்று நிம்மதியடைவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழ­ல் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள் :

1. நீதி மிக்க அரசன்
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்
3. பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்
4. அல்லாஹ்வுக்காகவே ஒன்றிணைந்து அவனுக்காகவே பிரிந்த இருவர்
5. அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்த போது நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன் எனக் கூறியவன்
6. தனது இடது கரத்திற்குத் தெரியாமல் வலது கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்
7. தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோர் ஆவார்கள்.

அறிவிப்பவர்.அபூஹூரைரா(ரலி)

வலது கரம் செய்ததை இடது கரம் அறியாத விதத்தில் இரகசியமாக செய்வது சிறப்பிற்குரியதாகும். தர்மம் செய்யும் போது அல்லாஹ்வின் திருப்தி மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். "அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்" (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கிலி­ருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன் 76 : 8,12)

சொல்லிக்காட்டுதல், நோவினை செய்தல் கூடாது

ஒருவருக்கு நாம் உதவி செய்தால் அந்த உதவியை சொல்லி­க்காட்டக்கூடாது! மேலும் உதவிக்கு பகரமாக அவரிடம் வேலை வாங்கி துன்புறுத்தவும் கூடாது! இவ்வாறு செய்தால் நாம் செய்த தர்மத்தின் பலன் இல்லாமல் போய்விடும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் : 2 : 264)

இவ்வாறு தான் செய்த உதவியை சொல்­லிக்காட்டியவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்கவும் மாட்டான், பேசவும் மாட்டான், பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். மேலும் கடுமையான வேதனை அல்லாஹ் வழங்குவான். (நூல் : முஸ்லிம் : 171)

ஒன்றை கொடுத்தால் பலதை பெறலாம்

நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலி­யாக வழங்கப்படும். தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 261)

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ - அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரை குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைப்போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரீ (1410)

சிறந்ததை தர்மம் செய்வோம்

நாம் செய்யும் தர்மப்பொருட்களில் பெரும்பாலானவை நாம் யாசகம் கேட்கும் நிலையில் அல்லது அதை பெறக்கூடியவனின் நிலையில் இருந்து எதை வாங்கமாட்டோமோ அதுவாகத்தான் இருக்கும். இதுமாதிரியான பொருளை தர்மம் செய்வது கூடாது. நாம் செய்யும் தர்மப் பொருட்கள் ஓரளவாவது நல்ல பொருட்களாக இருக்கட்டும்! மனிதன் சாப்பிட முடியாத அளவு அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருட்களை தர்மம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் விரும்புவதை (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் 3 : 92)

இந்த வசனம் இறங்கியவுடன் அபூதல்ஹா(ர­லி) அவர்கள் தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா என்ற தோட்டத்தை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார்கள் (ஹதீஸ் சுருக்கம்) நூல்: புகாரீ (4554)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியி­லிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலி­ருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 267)

தர்மம் தலைக்காக்கும்

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலி­ருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63 : 10)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பேரித்தம்பழத்தின் துண்டளவேனும் (தர்மம் செய்வதை) கொண்டு நீங்கள் உங்களை நரகை விட்டும் காத்துக்கொள்ளுங்கள்! அறிவிப்பாளர்: அதிய்யு இப்னு ஹாதம்(ரலி) நூல்: புகாரீ (1417)

ஒரு மனிதன் தான் செய்யும் சில தவறுகளின் காரணத்தினால் மறுமையில் நரகத்திற்க்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும். அந்த நேரத்தில் அவன் தன்னை நரகைவிட்டும் காத்துக்கொள்வதற்கு தர்மத்தை ஒரு துணைச்சாதனமாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறான். ஒரு பேரிச்சம் பழம் துண்டுகூட சில நேரங்களில் நம்மை நரகை காப்பாற்றும் கேடயமாக இருந்துவிடும். எனவே அற்பானது என்று எண்ணி தர்மம் செய்யாமல் இருந்துவிடாமல் நம்மால் முடிந்த அளவு தர்மம் செய்து மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையி­ருந்து தப்பித்துக் கொள்வோம்.

நன்றி: துபை TNTJ

தொடர்புடையவை: தர்மத்தின் சிறப்புகள்