ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

இஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு கணக்கு


இஸ்லாத்தில் சொத்து பங்கீடு கட்டாய கடமை:

لِلرِّجَالِ نَصِيۡبٌ مِّمَّا تَرَكَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَوَلِلنِّسَآءِ نَصِيۡبٌ مِّمَّا تَرَكَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ مِمَّا قَلَّ مِنۡهُ اَوۡ كَثُرَ ​ؕ نَصِيۡبًا مَّفۡرُوۡضًا

குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. திருக்குர்ஆன் 4:7

இந்த கட்டாயக் கடமையான சொத்து பங்கீடு பற்றி எளிதாக அறிந்து கொள்ளும் வண்ணம் சொத்து பங்கீடு முறைக்கான நிபந்தனைகள், பங்கிடும் கணக்கு முறை மற்றும் ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

சொத்து பங்கீடு முறைக்கான நிபந்தனைகள்:
  • சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகே அவருடைய சொத்தை பங்கீடு செய்ய அனுமதி உண்டு.

  • ஒருவர் மரணிக்கும் நேரத்தில் அப்போது உயிருடன் இருக்கும் வாரிசுகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு உண்டு.

  • மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே சொத்தை பங்கீடு செய்ய வேண்டும்.

  • மூன்றிலொரு பங்கை விட அதிகமாக மரண சாசனம் செய்ய அனுமதி இல்லை.

  • வாரிசுரிமைப் பங்கு பெறுபவர்களுக்கு மரண சாசனம் செய்ய அனுமதி இல்லை.

  • சொத்து பங்கிடும் போது நிர்ணயம் செய்யப்பட்ட பாகங்களை முதலில் அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்து விட்டு பிறகு எஞ்சியிருப்பது இறந்தவரின் மிக நெருக்கமான ஆண் உறவினருக்கு உரியதாகும் (மகன், தந்தை, சகோதரன், ...)

  • வளர்ப்பு பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கிடையாது. கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம். அல்லது உயிருடன் இருக்கும் போதே எதையாவது கொடுக்கலாம்.

  • இறை நம்பிக்கையாளர், இறை மறுப்பாளரின் சொத்திற்கு வாரிசாக மாட்டார்.

  • சொத்து பங்கீட்டில் அல்லாஹ்வின் வரம்பிற்கு கட்டுப்படுபவர்களை சொர்க்கத்திலும் மீறுகிறவர்களை நரகிலும் அல்லாஹ் நுழையச் செய்வான்.

  • வெளிநாடுகளில் வசிக்கின்ற அதிகமான சகோதரர்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த தொகைகளை கொண்டு வாங்குகின்ற சொத்துகளை பாச மிகுதியாலும் / நேரில் செல்ல முடியாத காரணத்தினாலும் தங்கள் பெற்றோர்கள் பெயரில் வாங்குகின்ற நிலையை காண்கிறோம். குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் / பெண்களுக்கும் பங்கு உண்டு என இஸ்லாம் வழி காட்டுகிறது. பெற்றோர்கள் மரணத்திற்கு பிறகு அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் பெற்றோர்களின் சொத்துக்களாகவே கருதப்பட்டு பங்கீடப்படும், சம்பந்தப்பட்டவர்கள் விட்டுகொடுத்தாலே ஒழிய என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சொத்து பங்கீடு கணக்கு:

கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் தனியாக கூகுள் சீட் (Google Sheet) ஓபன் ஆகும். அதில் யாருடைய சொத்தை பிரிக்க வேண்டுமோ அவருடைய உறவினர்களின் எண்ணிக்கை விபரம் மற்றும் அவரின் சொத்து மதிப்பை பதிவிட்டால், அவரவர்களுக்குரிய பங்கை கணக்கிட்டுக் காட்டும்.

Shorten URL: goo.gl/vRrpt7


சொத்து பங்கீடு கணக்கு மாதிரி:

ஆதாரம்:
  • குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. திருக்குர்ஆன் 4:7

  • (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:11

  • மூன்றிலொரு பங்கு (போதும்) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். புஹாரி 3936 (ஹதீஸ் சுருக்கம்)

  • அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில்) நிர்ணயிக்கப்பெற்றுள்ள பாகங்களை, (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான ஆண் உறவினருக்கு உரியதாகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 6732

  • எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான். திருக்குர்ஆன் 33:4

  • நபி(ஸல்) அவர்கள், 'இறை நம்பிக்கையாளர், இறை மறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார்; அவ்வாறே இறை மறுப்பாளரும் இறை நம்பிக்கையாளருக்கு வாரிசாக மாட்டார்' என்று கூறினார்கள். புஹாரி 4282,4283 (ஹதீஸ் சுருக்கம்)

  • இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. திருக்குர்ஆன் 4:13-14
ஆக்கம்: அஹ்மத் ஃபைஸல், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்

குறிப்பு: பிற மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு பயன்படும் வகையில் இந்த கட்டுரை மற்றும் பங்கீடு கணக்கு ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.