சனி, 15 அக்டோபர், 2016

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) என்பதில் அடங்கியுள்ள கருத்துக்கள்


இஸ்லாம் மார்க்கம் பிரதானமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒன்று லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை - என்ற கொள்கையாகும்.

மற்றொன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் - முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் - என்ற கொள்கையாகும்.


இவ்விரு கொள்கைகளையும் ஏற்று வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் சேர முடியும்.

இஸ்லாத்தின் அடிப்படையாக அமைந்துள்ள இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். இவ்விரு கொள்கைகளையும் அரைகுறையாகவே நம்புகின்றனர்.

முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதர் என்று குருட்டுத்தனமாக முஸ்லிம்கள் நம்புவதில்லை; அப்படி நம்பவும் கூடாது. பலவகையிலும் ஆய்வு செய்து அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை விளங்கியே நம்புகின்றனர்.

தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று வாதிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்குத் தக்க சான்றுகளை முன்வைத்தே வாதிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்ற அடிப்படையில் திருக்குர்ஆன் என்ற செய்தியை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அந்தக் குர்ஆனை நீங்கள் ஆய்வு செய்தால் அது மனிதனின் கூற்றாக இருக்க முடியாது என்பதையும், அல்லாஹ்விடமிருந்து தான் வந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்வீர்கள். திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்றால் அதைக் கொண்டு வந்த நான் அல்லாஹ்வின் தூதரே என்பது அவர்கள் எடுத்து வைத்த முதல் சான்றாகும்.

எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இதுபோல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று திருக்குர்ஆன் 2:23, 10:38, 11:13, 17:88, 52:34 ஆகிய வசனங்கள் அறைகூவல் விடுகின்றன.

இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர்கொள்ள முடியாது எனவும் 2:23 வசனத்தில் திருக்குர்ஆன் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

முஹம்மது நபியின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதைவிடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறைவேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழு நூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த முஹம்மது நபி எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆனைப் பொருத்தவரை அது ஆன்மிகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது. எந்தத் துறையைப் பற்றிப் பேசினாலும் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் பேசுவது போல் அது அமையவில்லை. மாறாக இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை திருக்குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒருசேரச் சிந்திக்கும் யாரும் “இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்‘’ என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் கூட திருக்குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு திருக்குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

தமது நாற்பதாண்டு கால வாழ்க்கையை அடுத்த சான்றாக முன்வைத்தார்கள். இது எந்த மனிதனாலும் எடுத்து வைக்க முடியாத சான்றாகும்.

நாற்பது ஆண்டுகள் நான் உங்களுடன் வாழ்ந்துள்ளேன். நான் ஒரு பொய் சொன்னதாகவோ, யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதியிழைத்ததாகவோ தீயபழக்கங்கள் உள்ளவனாகவோ, கர்வம் கொண்டவனாகவோ, பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படுபவனாகவோ என்னை நீங்கள் பார்த்ததுண்டா?

என்று மக்களை நோக்கி கேட்கும் அளவுக்கு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இதுபற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்!

“அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:16


சொந்த ஊரில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து விட்டு அந்த வாழ்க்கையை ஆதாரமாக எடுத்துக்காட்டி தனக்கு ஆள் சேர்ப்பது எவருக்கும் இயலாததாகும்.

இப்படி ஒரு வாதத்தை இறைத்தூதர் அல்லாத எந்த மனிதராலும் செய்ய முடியாது.

நாற்பது ஆண்டுகள் சொந்த ஊரிலேயே ஒருவர் தங்கி இருந்தால் அவரது இளமைப் பருவத்தில் பல சேட்டைகள் செய்திருப்பார். அந்த சமுதாய மக்கள் எந்தத் தீமைகளை உறுத்தல் இல்லாமல் செய்து வந்தார்களோ அவற்றை அவரும் செய்பவராக இருப்பார். அதிலும் அதிகப்படியான சொத்துக்களும், பண வசதிகளும் உள்ளவராக இருந்தால் அதைப் பயன்படுத்தி மற்றவர்களை விட அதிகத் தீமைகளைச் செய்திருப்பார்.

இப்படி எல்லா மனிதர்களைப் போலவும் வாழ்ந்திருந்த ஒருவர் தனது நாற்பதாம் வயதில் அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னால் என்னவாகும்? நீர் நேற்று எங்களுடன் சேர்ந்து என்னவெல்லாம் செய்தீர் என்பது தெரியாதா? உம்மைத் தான் அல்லாஹ் தூதராக நியமித்து விட்டானா? என்று கேட்டு அவர்களை நிராகரித்து இருப்பார்கள்.

தன்னை தினமும் பார்த்துப் பழகிய சொந்த ஊர் மக்களிடம் நான் உங்களுடன் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேனே சிந்திக்க மாட்டீர்களா என்று முஹம்மது நபி கேட்டார்கள். அவர்களைத் தனது தூதராக நியமிக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானித்து இருந்தால் தான் நாற்பது ஆண்டுகள் அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும்.

எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையைப் பார்த்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை எவரும் கூறவே முடியாது. இப்போது நான் சொல்வதை மட்டும் பாருங்கள்! கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள் என்று தான் எந்தத் தலைவரும் சொல்வார்கள்.

இவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார் என்றும், இவருக்கு இதைச் சொல்வதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது என்றும் நம்பியதால் தான் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பின்பற்றும் மக்களாக ஆனார்கள்.

இறைத்தூதர் என்று ஒருவர் வாதிட்டால் அவர் கொண்டு வந்த செய்தி இறைவன் கூறுவது போல் அமைந்திருக்க வேண்டும். அப்படித் தான் அவர்கள் கொண்டு வந்த செய்திகள் அமைந்து உள்ளன. அவர்களுக்கு எந்த ஆதாயத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத வகையிலும் இறைவனை மட்டும் பெருமைப்படுத்தும் வகையிலும் தான் அந்தச் செய்திகள் அமைந்துள்ளன.

எந்தக் கொள்கையைச் சொன்னால் இவ்வுலகில் பதவியையும், பெருமையையும் பெறமுடியாதோ அந்தக் கொள்கையைத் தான் அவர்கள் சொன்னார்கள். படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான். உலகத்தை அழித்த பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து எல்லா மனிதர்களையும் அல்லாஹ் எழுப்புவான். அந்த வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் என்பதுதான் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் முன்வைத்த செய்தி.

அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான்; அவன் கண்கானிக்கிறான் என்று கருதியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். என்று சொன்னவர் மற்றவர்களை விட அதற்கேற்ப வாழ்ந்தாக வேண்டும். இது கடைப்பிடிக்க மிகவும் கஷ்டமானதாகும். நிஜமாகவே அல்லாஹ்வின் தூதராக இருந்தால் மட்டுமே தனக்கு கடுகளவும் உலக ஆதாயத்தைப் பெற உதவாத இந்தக் கொள்கையை அவர் முன்வைத்திருக்க முடியும்.

நியாயத்தீர்ப்பு நாள் குறித்து அவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்தது போல் அந்த நாளை அதிகம் பயந்து தன் மேல் அளவு கடந்த சிரமங்களைச் சுமத்திக் கொண்டார்கள்.

நான் ஒரு சபைக்கு வரும் போது நீங்கள் அமர்ந்து இருந்தால் என்னைக் கண்டதும் எழக் கூடாது என்று அவர்கள் கூறியதும், என் காலில் யாரும் விழக் கூடாது என்று அவர்கள் எச்சரித்ததும், இயேசுவை கிறித்தவர்கள் எல்லை மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்புமீறி புகழாதீர்கள்; நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதருமே என்று மட்டும் சொல்லுங்கள் எனச் சொன்னதும் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இறைத்தூதர் என்று கூறவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. மெய்யாக இறைத்தூதராக அவர்கள் இருந்ததால் தான் இப்படிக் கூற முடிந்தது.

என் அடக்கத்தலத்தில் விழா நடத்தாதீர்கள். என் அடக்கத்தலத்தை வழிபாட்டுத்தலமாக ஆக்காதீர்கள் என்றும் சொன்னார்கள்.

ஆன்மிகத்தைச் சொல்லி மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்களின் பின்னே திரண்ட பின்பும் என்னிடம் கடவுளின் எந்த சக்தியும் இல்லை. நான் நினைத்ததை எல்லாம் கடவுள் செய்து தருவான் என்பதும் இல்லை. நானே தவறு செய்தால் என் இறைவனிடம் நான் தப்பிக்க முடியாது என்று சொன்னார்கள்.

மற்றவர்களிடமிருந்து தம்மைத் தனித்துக் காட்டும் வகையில் வித்தியாசமான கெட்டப்புகளில் மதகுருக்கள் சீன் போடுவது போல் அவர்கள் சீன் போட்டதில்லை. ஒரு சபையில் அவர்கள் இருக்கும் போது வெளியூர்வாசி ஒருவர் வந்தால் உங்களில் முஹம்மது யார்? என்று கேட்டு அறிந்து கொள்ளும் வகையில் தான் அவர்கள் மக்களடு மக்களாகக் கலந்து இருந்தார்கள்.

பின்னர் மக்களின் பேராதரவு பெற்று மாபெரும் சக்கரவர்த்தியாக ஆன போதும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.

இறைவனுக்கும், மறுமை வாழ்க்கைக்கும் அதிகம் அஞ்சி அவர்கள் நடத்திய வாழ்க்கை அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை உறுதி செய்தது.

அவர்கள் இறைத்தூதர் என்று வாதிட்ட பின்னர் வாழ்ந்த வாழ்க்கையைக் கவனித்தால் இந்த மனிதர் வாதிடுவது போல் இவர் இறைவனின் தூதராகத் தான் இருக்க முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓர் ஆட்சியை நிறுவிய பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்குத் திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.

இந்த நிலையிலும் அவர்கள் தமக்காகச் செல்வம் திரட்டவில்லை.

அரண்மனையில் வசிக்கவில்லை.

கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.

அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிட்டதில்லை.

ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வதற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.

வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.

தமது கவச ஆடையைச் சிறிதளவு கோதுமைக்காக அடைமானம் வைத்து அதை மீட்காமலே மரணித்தார்கள்.

நானும், எனது குடும்பத்தினரும் பொது நிதியிலிருந்து எதையும் பெறுவது ஹராம் - இறைவனால் தடுக்கப்பட்டது - என்று பிரகடனம் செய்து அதன்படி வாழ்ந்து காட்டினார்கள்.

ஒரு நிலப்பரப்பு, ஒரு குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்; தமது குடும்பத்தினர் அவற்றுக்கு வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.


அதிக அதிகாரம் படைத்த மன்னர்கள் எப்படி ஆணவமாகவும் செருக்கொடும், சுக போகங்களில் திளைத்தும் நடப்பார்களோ அதில் கோடியில் ஒரு பங்கு கூட அவர்கள் நடக்கவில்லை. தன்னைத் தூதராக அனுப்பிய அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்று அவர்கள் அஞ்சியதால் தான் அவர்களால் இப்படி நடக்க முடிந்தது. இதுவும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை உறுதி செய்கிறது.

நாற்பது வயது வரை வெற்றிகரமான வியாபாரியாக இருந்து, அதன் மூலம் ஊரில் பெரிய செல்வந்தர் என்ற நிலையை அடைந்தவர் அதை மேலும் பெருக்கவே ஆசைப்படுவார். அல்லது இருக்கின்ற செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே போராடுவார். செல்வத்தை அனுபவித்தவர்கள் அவ்வளவு எளிதாக அதை விட்டுக் கீழே இறங்க மாட்டார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் இக்கொள்கையைச் சொன்னதற்காக சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத்தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.

அந்தச் சமுதாயம் இதைத்தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்ததற்கு அவர்கள் இறைத்தூதர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

அனைவருக்கும் சமநீதி, கொள்கை உறுதி, உலகே திரண்டு எதிர்த்த போதும் கொண்ட கொள்கையில் எள் முனையளவும் வளைந்து கொடுக்காத நெஞ்சுரம், பிறமத மக்களையும் மனிதர்களாக மதித்த மாண்பு, உயர் குலத்தில் பிறந்திருந்தும் குலத்தால் பெருமை இல்லை என்று அடித்துச் சொல்லி செயல்படுத்திக் காட்டியது, மன்னராக இருந்தும் தாமே தளபதியாக களத்தில் இறங்கிப் போராடிய வீரம் ஆகிய நற்பண்புகளின் சிகரமாக அவர்கள் திகழ்ந்தார்கள். வரலாற்றில் இவற்றில் ஒன்றிரண்டு பண்புகள் சிலருக்கு இருக்கலாம். அனைத்தும் ஒரு சேர முஹம்மது நபியிடம் அமைந்திருந்தது இறைவனின் தூதர் என்பதால் தான்.

தலைவர்களாகக் கருதப்படுவோர் ஏதோ சில துறைகளில் சில வழிகாட்டுதலை வழங்குவார்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வழிகாட்டுகிறேன் எனக் கூறி அவ்வாறு வழிகாட்டிய ஒரு தலைவரையும் உலகில் காண முடியாது. ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இதிலும் விதிவிலக்காகத் திகழ்ந்தார்கள்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி அரசியல், பொருளாதாரம், குடும்பவியல், சிவில் கிரிமினல் சட்டங்கள் உண்ணுதல் பருகுதல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வு வழங்கினார்கள். அந்தத் தீர்வுகளும் இன்றும் பொருந்தக் கூடியதாக உள்ளன.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள இன்னொரு கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (முஹம்மது அல்லாஹ்வின் தூதர்) என்ற கொள்கை முழக்கத்தில் அவர்கள் கடவுள் அல்ல; கடவுளின் தன்மை பெற்றவரோ அல்ல என்பதே அந்தக் கருத்தாகும்.


ஆன்மிகவாதிகள் அனைவரும் வாழும் காலத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ கடவுளாகவோ, கடவுளின் அம்சம் கொண்டவராகவோ, நினத்ததைச் சாதிக்கும் அளவுக்கு கடவுளுக்கு வேண்டப்பட்டவராகவோ கருதப்படுகின்றனர்.

அவர்கள் அனைவரும் மலஜலத்தைச் சுமந்து கொண்டு எல்லா மனிதர்களைப் போலவே உணவு உண்பவர்களாகவும், மனைவி மக்களின் பால் தேவையுடைவராகவும், நோய்வாய்ப்படுவோராகவும், இறுதியில் மரணிப்பவர்களாகவும் உள்ளனர் என்று தெளிவாகத் தெரிந்த போதும் குருட்டு பக்தியின் காரணமாக அவர்களைக் கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர்.

நபிகள் நாயகம் அவர்கள் தம்மைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் என்று அறிவித்தது இந்த ஆன்மிக மோசடியை சவக்குழிக்கு அனுப்பியது.

அல்லாஹ்வின் தூதர் என்பதால் மனிதத் தன்மைக்கு நான் அப்பாற்பட்டவன் என்று என்னைப் பற்றி நினத்து விடாதீர்கள் என்று தெள்ளத் தெளிவாக அவர்கள் அறிவித்தார்கள்.

முஹம்மது நபி அல்லாஹ்வின் அடிமைதான்; அல்லாஹ் அல்ல என்று திருக்குர்ஆனின் 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10 வசனங்கள் மூலம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் எனக்கு இல்லை என்று திருக்குர்ஆனின் 6:50, 7:188 வசனங்கள் மூலம் தெளிவுபடுத்தினார்கள்.

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் அறவே இல்லை என்று திருக்குர்ஆனின் 3:127, 6:50, 7:188, 10:49, 10:107 வசனங்கள் மூலம் அறிவிப்பு செய்தார்கள்.

எனக்கே நான் நன்மை செய்ய முடியாது என்று திருக்குர்ஆனின் 6:17, 7:188 வசனங்கள் மூலம் தமது நிலையைத் தெளிவாக்கினார்கள்..

என்னையும் அல்லாஹ் காப்பாற்றினால் தான் உண்டு என்று திருக்குர்ஆனின் 4:106, 9:43, 23:118, 48:2 வசனங்கள் மூலம் மக்களுக்கு விளக்கினார்கள்.

என்னை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் என்னைக் காப்பாற்ற முடியாது என்பதுதான் எனது நிலை என்று திருக்குர்ஆனின் 6:17, 67:28 வசனங்கள் மூலம் தெளிவாக்கினார்கள்..

ஒரு மனிதனை நேர்வழியில் சேர்ப்பது கூட என் கையில் இல்லை; எடுத்துச் சொல்வது மட்டுமே என் பணி என்று திருக்குர்ஆனின் 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74, 28:56 வசனங்கள் மூலம் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதன் அர்த்தத்தை அழகாக விளக்கினார்கள்.

இறைவனின் அதிகாரத்தில் எனக்கு எந்தப் பங்குமில்லை என்று திருக்குர்ஆனின் 3:128, 4:80 வசனங்கள் மூலம் கொள்கைப் பிரடகனம் செய்தார்கள்.

நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று திருக்குர்ஆனின் 3:144, 11:12, 18:110, 41:6 வசனங்கள் மூலம் மக்களுக்கு மெய்யான ஆன்மிகத்தைக் காட்டினார்கள்.

அற்புதங்கள் செய்து காட்டுமாறு மக்கள் கோரிக்கை வைத்த போது நான் மனிதனாகவும், அல்லாஹ்வின் தூதராரகவும் தான் இருக்கிறேன். அல்லாஹ்வின் அம்சம் பொருந்தியவனாக இல்லை என்று திருக்குர்ஆன் 17:90-93 வசனங்கள் மூலம் பதிலளித்தார்கள்.

என்னால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியமுடியாது. எனக்கு மறைவாக இருப்பவைகளை என்னால் அறிய முடியாது என்று திருக்குர்ஆனின் 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43 ஆகிய வசனங்கள் மூலம் அல்லாஹ்வின் தூதர் என்பதன் அர்த்தத்தை விளக்கினார்கள்.

நான் மனிதனாகவும், அல்லாஹ்வின் தூதராகவும் தான் இருக்கிறேன் என்ற பிரகடனம் செய்த காரணத்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவர்கள் கடவுளாக்கப்படவில்லை. அவர்களுக்குச் சிலை இல்லை. கோவில் கட்டப்படவில்லை.

ஆன்மிகத்தின் பெயரால் மற்றவர்களைப் போல் மக்களை ஏமாற்றாமல் தூய கொள்கையைச் சொன்னதால் தான் அவர்களை முஸ்லிம் சமுதாயம் தன் பெற்றோரை விடவும் தன்னை விடவும் பெரிதாக மதிக்கிறது.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வில் அடங்கியுள்ள மற்றொரு கருத்து இதுதான்:

அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அனைத்தும் அவர்களின் சொந்தக் கருத்து அல்ல; அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவையே. அவர்களின் போதனைகள் அவர்களின் சொந்தக் கருத்தல்ல என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.


தலைவர்களைப் பாராட்டி விழாக்கள் நடத்திவிட்டு, அவருக்குச் சிலை எழுப்பி, மணிமண்டபங்கள் கட்டிவிட்டு அவரது அறிவுரைகளைப் புறக்கணிக்கும் ஏராளமான சமுதாயங்களை நம் பார்க்கிறோம்.

ஆனால் முஹம்மது நபியை இப்படி நாம் கருதக் கூடாது. அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது தான் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதன் சரியான பொருளாகும்.

முஹம்மது நபியவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் சொன்னவை, செய்தவை அனைத்தும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவை தான். அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காத எந்த ஒன்றையும் மார்க்கத்தின் பெயரால் அவர்கள் வழிகாட்ட மாட்டார்கள்.

முஹம்மது நபி தன் மனோ இச்சைப்படி பேசமாட்டார். அவர் பேசுபவை அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவை தான் என்று திருக்குர்ஆன் 53:2,3,4 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

முஹம்மது நபி அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் சுயமாக எதையாவது சொல்லி இருந்தால் அவரை வலக்கரத்தால் பிடித்து அவரது நாடி நரம்பைத் துண்டித்திடுவேன் என்று 69:44,45, 47 வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு எதனையும் நான் கூறுவதில்லை என்று மக்களிடம் தெரிவிக்குமாறு 6:50, 10:15, 46:9 ஆகிய வசனங்களில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

முஹம்மது நபியின் பணி அல்லாஹ் சொல்வதை எடுத்துச் சொல்வது தானே தவிர சொந்தக் கருத்தைச் சொல்வதல்ல என்று 5:92, 5:99, 13:40, 16:82, 24:54, 29:18, 64:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது போல் அவர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று 3:32, 3:132, 4:13, 4:59, 4:64, 4:69, 4:80, 4:115, 5:92, 8:1, 8:20, 8:46, 9:71, 24:47, 24:51, 24:52, 24:54, 24:56, 33:33, 33:66, 33:71, 47:33, 48:17, 49:14, 58:13, 64:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது எந்த அளவு கட்டாயக் கடமையோ அதே அளவு அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதும் கட்டாயக் கடமையாகும். தூதருக்குக் கட்டுப்படாதவர்கள் முஸ்லிம்களே அல்லர் என்ற அளவுக்கு கடுமையான இவ்விஷயம் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நம்மிடம் பல்லாண்டுகளாக ஊறிப்போன கொள்கைகளும் சடங்குகளும் முஹம்மது நபியால் தடை செய்யப்பட்டவை என்று தெரிய வந்தால் அந்த வினாடியே அவற்றை விட்டு விலகினால் தான் அவர்களை அல்லாஹ்வின் தூதராக மதிக்கிறோம் என்று பொருளாகும்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வில் அடங்கியுள்ள இன்னொரு கருத்து இதுதான்:

இஸ்லாம் என்ற மார்க்கத்துக்கு அதிபதி அல்லாஹ்வே. தனது அடியார்கள் மறுமையில் வெற்றிபெற எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே முஹம்மது நபியை தனது தூதராக அல்லாஹ் நியமித்தான். அவர்கள் வழியாக அல்லாஹ் எதை அறிவித்துக் கொடுத்தானோ அது மட்டுமே இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளதாகும். அவர்கள் அறிவிக்காமல் மற்றவர்களால் உருவாக்கப்பட்டவை இஸ்லாத்தில் இல்லாததாகும் என்பதும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வின் கருத்தாகும். அவர்கள் காட்டித்தராத அனைத்தும் பித்அத் எனும் வழிகேடாகும்.


இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக பல கட்டளைகளை நமக்குப் பிறப்பித்துள்ளார்கள்.

எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல் : முஸ்லிம், 3442

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடாத ஒன்றை யார் கட்டளயிட்டாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்பட்டு விடும்.

இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல் : புகாரி, 2697

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது ``செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; வழிகளில் சிறந்தது முஹம்மது காட்டிய வழி; (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டவை; மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்கள்) அனைத்தும் வழிகேடு என்று குறிப்பிடுவது வழக்கம்.

நூல் : முஸ்லிம், 1435


இஸ்லாம் மார்க்கம் என்ற பெயரில் நாம் செய்யும் எந்தக் காரியமானாலும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா? செய்துள்ளார்களா? அனுமதித்துள்ளார்களா என்று கவனிக்க வேண்டும். அவர்கள் சொன்னதாகவோ, செய்ததாகவோ, அனுமதித்ததாகவோ ஆதாரம் இல்லாவிட்டால் அதை விட்டு விலகுவது தான் முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதன் அடையாளமாகும்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வில் அடங்கியுள்ள மற்றொரு கருத்து இதுதான்:

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றால் அவர்களுக்குத் தான் மார்க்கம் சம்மந்தமான வஹீ எனும் இறைச்செய்தி வரும். இந்த உம்மத்தில் அவர்களைத் தவிர யாருக்கும் வஹீ வராது என்பதும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதன் கருத்தாகும்


இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறாத அறிஞரையோ, நபித்தோழரையோ பின்பற்றக் கூடாது என்பதை இந்த அடிப்படைத் தத்துவத்தில் இருந்து அறியலாம்.

இது குறித்து இறைவன் மிகத் தெளிவான வார்த்தைகளால் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்தியுள்ளான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:170, 3:103, 6:106, 6:114,115, 7:3, 10:15, 33:2, 39:3, 39:58, 46:9, 49:16, 24:51,52, 5:3, 16:116, 42:21, 5:87, 6:140, 7:32, 9:29, 9:37, 10:59, 5:48 49

அதிகமான முஸ்லிம்கள் மத்ஹப் எனும் கோட்பாட்டின் படியே தங்களின் தொழுகை, நோன்பு உள்ளிட்ட வணக்கங்களையும் கொடுக்கல் வாங்கல், திருமணம் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள்.

ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி ஆகிய நான்கு மத்ஹபுகளின் ஒன்றைத் தான் பின்பற்ற வேண்டும் எனவும் நம்புகின்றனர். இதுதான் நேர்வழி எனவும் வாதிடுகின்றனர். மேலே நாம் எடுத்துக் காட்டிய அனைத்து வசனங்களுக்கும் எதிராக இந்த நம்பிக்கை அமைந்துள்ளன.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதற்கு எதிராகவும் மத்ஹபுகளைப் பின்பற்றுவது அமைந்துள்ளது. முஹம்மது நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் வஹீ வராத இமாம்களை எப்படி பின்பற்ற முடியும்? நான்கு இமாம்கள் எனக்குப் பின்னால் வருவார்கள்; அவர்களைப் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார்களா? இந்த நான்கு பேரும் பின்பற்றத்தக்கவர்கள் என்று மக்களாக முடிவு செய்துள்ளார்களே தவிர இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இமாம்கள் என்று சொல்லப்படும் இவர்களை விட அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ஆகிய நபித்தோழர்கள் பெயரால் மத்ஹபு உருவாக்கப்பட்டவில்லை. நான்கு இமாம்களும் அந்த நபித்தோழர்களை விட மேலானவர்களா?

மத்ஹபில் உள்ள சில சட்டங்கள் குர்ஆனுக்கு நேரெதிராக இருப்பதையும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டலுக்கு நேரெதிராக இருப்பதையும் நாம் எடுத்துக்காட்டினால் அப்போது கூட மத்ஹபைத் தான் பின்பற்றுவோம் என்று மத்ஹபுவாதிகள் கூறுகின்றனர். மத்ஹபு எனும் நச்சுக் கொள்கை காரணமாக அல்லாஹ்வின் தூதருடைய மரியாதை குறைக்கப்படுகிறது.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கூறுவார்கள். “எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்’’ எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!’’ எனவும் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 33:66...68


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று உண்மையாக நம்பக்கூடிய யாரும் மத்ஹப் எனும் வழிகேட்டில் விழ மாட்டார்கள்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதில் அடங்க்கியுள்ள இன்னொரு கருத்து இதுதான்:

முஹம்மது நபி அவர்கள் திருக்குர்ஆனை விளக்குவதற்காக அனுப்பபட்டார்கள். எனவே அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் திருக்குர்ஆனை ஒட்டியதாகவும், அதற்கு முரணில்லாத வகையிலும் தான் இருக்கும். அப்படித்தான் அதிகமான ஹதீஸ்கள் இருக்கின்றன.

ஆயினும் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும் சில நபிமொழிகள் குர்ஆனுடன் முரண்படும் வகையில் உள்ளன. இப்படி திருக்குர்ஆனுடன் மோதும் செய்திகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல என்பதும் முஹம்மதுர் ரசூலுல்லாவின் கருத்தாகும்.


முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் அல்லாஹ்வின் செய்தியைத் தான் மக்களுக்குச் சொல்வார்கள். அல்லாஹ்வுக்கு எதிரான கருத்தை அவர்கள் சொல்ல மாட்டார்கள். திருக்குர்ஆனுக்கு மாற்றமாக அவர்கள் சொன்னதாகவோ, செய்ததாகவோ பதிவு செய்யப்பட்டவைகளை அவர்கள் சொன்னதாக அல்லது செய்ததாக நம்பினால் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பிபயவர்களாக மாட்டோம்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் (16 : 44)


நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுடன் முரண்படாது. குர்ஆனிற்கு முரண்படும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது என்று கூறுவதற்கு இறைவனுடைய இந்த வாக்கே போதுமானது.

குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வருவதற்கு எள்ளளவும் சாத்தியமில்லை.

தன் பெயரால் அறிவிக்கப்படும் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல் : முஸ்லிம் 1

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள மற்றொரு கருத்து இதுதான்:

நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்பதால் தூதர் என்ற முறையில் அவர்கள் காட்டிய வழி மட்டுமே மார்க்கத்தில் உள்ளதாகும். இறைத்தூதர் என்ற முறையில் அல்லாமல் மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை மார்க்கத்தில் அடங்காது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் இவ்வாறு சாப்பிட்டவில்லை.

இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்கள் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ``உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4358

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4357

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4356

வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது ``இது உடும்பு இறைச்சி என்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ``அல்லாஹ் வின் தூதரே! இது ஹராமா? எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ``இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லை என்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹதீஸின் கருத்து)

நூல் : புகாரி 5391, 5400, 5537


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை என்பதால் தான். எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச்செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.

இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.


இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இவ்வாறு இருக்கும் போது இறைவன் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படாத நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, மத்ஹபுகளைப் பின்பற்றுவது எவரது கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணைவைப்பாக ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள மற்றொரு கருத்து இதுதான்:


முஹம்மது நபி அவர்கள அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதுடன் இந்த சமுதாயத்துக்கு அவர்கள் மட்டுமே இறைத்தூதராவர்கள். அவர்களுக்குப்பின் இறைத்தூதர்கள் வர மாட்டார்கள். அவர்கள் தான் கடைசி நபியாவார்கள்.

இதை 4:79, 6:19, 7:158, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

முதல் நபியான ஆதம் (அலை) அவர்கள் முதல் தொடர்ந்து நபிமார்களை அனுப்பிக் கொண்டே வந்த இறைவன், முஹம்மது நபியுடன் ஏன் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்? நபிமார்கள் வருவது நன்மை தானே என சிலர் நினைக்கலாம்.

எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதற்கான தேவை இருந்தால்தான் அறிவுடையோர் அதைச் செய்வார்கள்.

மாபெரும் பேரறிவாளன் அல்லாஹ் தேவையற்ற எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் தொடர்ந்து நபிமார்களை அனுப்பியதற்குத் தக்க காரணங்கள் இருந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் அந்தக் காரணங்களில் ஒன்று கூட இல்லை.

மனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக ஒரு வேதத்துடன் தூதரை இறைவன் அனுப்பி, அந்த வேதமும் அந்தத் தூதரின் விளக்கமும் பாதுகாக்கப்படாத நிலையில் தான் அடுத்து ஒரு தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும்.

அல்லது ஒரு தூதர் மரணித்தபின் அவர் கொண்டு வந்த வேதத்தையும், அவரது போதனைகளையும் கூட்டி, குறைத்து, மாற்றி, மறைத்து மனிதர்கள் கைவரிசையைக் காட்டி இருக்கும்போதும், அவற்றைச் சரி செய்வதற்காக இன்னொரு தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இந்தக் காரணங்கள் அறவே இல்லை. அவர்களுக்கு இறைவன் வழங்கிய திருக்குர்ஆன் எனும் வேதம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதில் எந்த ஒன்றும் கூட்டப்படவும் இல்லை. குறைக்கப்படவும் இல்லை. மனிதக் கருத்து ஒன்று கூட அதில் நுழைக்கப்படவில்லை. இதைத் தனது தனிச் சிறப்பாக திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

“இதை நாமே அருளினோம்; இதை நாமே பாதுகாப்போம்‘’ என்று இறைவன் உத்தரவாதம் அளிப்பதை 15:9 வசனத்தில் காணலாம். இவ்வசனத்தில் கூறப்பட்டதற்கு இணங்க அன்று முதல் இன்று வரை திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதில் இடைச்செருகல்களை சில அறிவீனர்களும், கயவர்களும் நபிகளாரின் காலத்திற்குப் பின் சேர்த்திருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்து, களையெடுத்து, சரியானதைப் பிரித்துக் காட்டும் அரும் பணியை நபிகள் நாயகம் (ஸல்) மரணித்து நூறு வருடங்களுக்குள் அறிஞர்கள் வழியாக இறைவன் நிறைவேற்றி விட்டான்.

நபிமொழிகளில் ஏதேனும் இடைச்செருகல் இருந்தால் திருக்குர்ஆனுடன் உரசிப் பார்த்து அவற்றைக் கண்டுபிடித்து விட முடியும்.

திருக்குர்ஆன் 100 சதவிகிதமும், நபிமொழிகள் தேவையான அளவுக்கும் பாதுகாக்கப்பட்டிருக்கும் போது இன்னொரு நபி வரவேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் போய் விடுகிறது.

ஒவ்வொரு காலத்திலும் தூதர்களை இறைவன் அனுப்பும்போது, அந்தச் சமுதாயத்தினரின் நிலையைக் கவனித்து அதற்கேற்ற சட்டங்களுடன் அனுப்பினான். இதனால் ஒரு காலத்து மக்களுக்கு இறைவன் அனுப்பிய வேதமும், தூதரின் போதனையும் அடுத்த காலத்தவருக்குப் பொருந்தாமல் போய் விடலாம்.

ஒரு நபி மரணித்த பின், அந்த நபியின் போதனை அடுத்து வரும் தலைமுறைக்குப் பொருந்தாது என்ற நிலை ஏற்படும்போது இன்னொரு வேதம் அருளப்படும் அவசியம் ஏற்படுகிறது.

அதுபோல், ஒரு தூதரின் காலத்தில் அருளப்பட்ட சட்டங்களை விட அதிகச் சட்டங்களை அடுத்து வரும் சமுதாயத்திற்குக் கூற வேண்டிய நிலை வந்தால் அப்போதும் இன்னொரு தூதரின் வருகை அவசியமாகும்.

திருக்குர்ஆனைப் பொறுத்தவரை இந்த நிலை இல்லை.

அது அருளப்படும் போதே உலகம் முழுவதற்கும் பொருந்தும் வகையிலும், அனைத்துக் கட்டளைகளும் முழுமைப்படுத்தப்பட்ட நிலையிலும் அருளப்பட்டது.

அதில் எந்த ஒன்றையும் சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ அவசியமில்லாத அளவுக்கு நிறைவாக உள்ளது.

இப்போது ஓர் இறைத்தூதர் வந்தால், அவர் கொண்டு வரும் வேதம் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கும்போது இன்னொரு வேதமும், தூதரும் வரவேண்டிய தேவையில்லை.

1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு படிக்காத மேதை மூலம் வழங்கப்பட்ட சட்டங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறும் நாட்டவராலும் போற்றப்படும்போது இன்னொரு தூதருக்கு என்ன வேலை இருக்கிறது?

எக்காலத்திற்கும் உரிய சட்டங்கள் ஒரு வேதத்தில் இருக்கும் பொழுது இன்னொரு வேதத்திற்கு எந்தத் தேவையுமில்லை. அதனால் தூதருக்கும் தேவை இல்லை.

இறைவனால் வழங்கப்பட்ட வேதம் அனைத்து மக்களிடமும் சென்றடையாமல் குறிப்பிட்ட சாராருடன் முடக்கப்பட்டிருந்தால் அதைப் பரவலாக்குவதற்காக ஒரு தூதரின் வருகை அவசியமாகும்.

திருக்குர்ஆனைப் பொறுத்த வரை இந்த நிலையும் இல்லை. திருக்குர்ஆன் சென்றடையாத நாடு இல்லை. அனேகமாக உலகின் எல்லா மொழிகளிலும் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இறைத்தூதர் இப்போது இருந்தால் எவ்வளவு மக்களை அவரது போதனை சென்றடையுமோ அதைவிடப் பலப்பல மடங்கு மக்களை திருக்குர்ஆன் சென்றடைந்திருக்கும் போது எதற்காக இன்னொரு தூதர்?

திருக்குர்ஆன் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாலும், அதன் போதனைகள் இறுதிக் காலம் வரை பொருந்துவதாக இருப்பதாலும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு அதிலிருந்தே கிடைப்பதாலும் உலக மாந்தர் அனைவரையும் அது சென்றடைந்திருப்பதாலும் குர்ஆனுக்குப் பிறகு இன்னொரு வேதமோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு இன்னொரு தூதரோ வர முடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி; இறுதித் தூதர். உலகம் முழுமைக்கும் இறுதி நாள் வரை அவர்களே தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும், தூதரும் வரவே முடியாது என்பதற்கு 4:79, 4:170, 6:19, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3 ஆகிய வசனங்கள் சான்றுகளாகவுள்ளன.

எனக்கும், எனக்கு முன்சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் இது தான். ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டினான். அதை அழகுபடுத்தினான். ஒரு மூலையில் ஒரு செங்கல் தவிர மற்ற அனைத்தையும் அழகுற அமைத்தான். மக்கள் அதைச் சுற்றிப்பார்த்து அதில் வியப்படைந்தார்கள். இந்த ஒரு செங்கல்லையும் வைத்திருக்கக் கூடாதா என்றும் அவர்கள் பேசிக்கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் நான்தான் அந்த ஒரு செங்கல். நான்தான் நபிமார்களுக்கு முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 3535

இஸ்ரவேலர் சமுதாயத்தை நபிமார்கள் வழிநடத்தி வந்தனர். ஒரு நபி மரணித்ததும் அடுத்த நபி வழிநடத்துவார். எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நூல் : புகாரீ 3455, 3249


இதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் அவர்களுக்குப் பின் எந்த நபியும் ரசூலும் வரமாட்டார் என்பதை தெள்ளத் தெளிவாக கூறுகின்றன.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வின் மேற்கண்ட எட்டு கருத்துக்களையும் நாமும் விளங்கி பிற மக்களுக்கும் நபிகள் நாயகத்தை பற்றி சரியான முறையில் எடுத்துச் சொல்லி மறுமையில் நன்மைகளைப் பெறுவோமாக!

சனி, 8 அக்டோபர், 2016

ஆஷூரா நோன்பு


வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.

(அல்குர்ஆன் 9:36)


ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதமும் புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும்.

இப்புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பை நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்களிடம் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக சிறந்த தொழுகை எது? ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக சிறப்பிற்குரியது இரவின் நடுப் பகுதியில் (எழுந்து) தொழுகின்ற தொழுகையாகும். ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பிற்குரிய நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1983


ஆஷூரா நோன்பு

அல்லாஹ்வுடைய மாதமாகிய புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பு தான் முஹர்ரம் பத்தாவது நாள் நோற்கின்ற ஆஷூரா நோன்பாகும். ஆஷூரா என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் பத்தாவது என்று பொருளாகும். முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் இந்நோன்பு வைக்கப்படுவதால் இதற்கு ஆஷூரா நோன்பு அதாவது பத்தாவது நாள் நோன்பு என்று பெயர் வைக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1592

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1901


மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன்?

நபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்தவர்கள் திருவிழாக்களின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்களையும் அவர்கள் திருவிழாவாக, கந்தூரியாகக் கொண்டாட வேண்டும் என்று கருதிய நாட்களையும் அது நமக்கும் சிறப்பிற்குரியதாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்பதைத் தான் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.

யூதர்களில் ஒருவர் உமர் (ரலி)யிடம், "அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்''என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அது எந்த வசனம்?'' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்: "இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக் கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் (5:3) என்ற திரு வசனம் தான் அது)''

அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவ்வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ்வசனம் இறங்கியது)'' என்றார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல்: புகாரி (45)


யூதர்கள் பெருநாளாக கொண்டாடி யிருப்போம் என்று கருதிய அரஃபா நாளன்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு நோன்பு நோற்பதை வழிகாட்டி யிருக்கிறார்கள். அது போன்று யூதர்கள், ஆஷூரா நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆஷூரா நாளை யூதர்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 2005, 2006

கைபர் வாசிகளான (யூதர்கள்) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். இன்னும் அதனைப் பெருநாளாகவும் கொண்டாடினார்கள். அந்நாளில் அவர்களுடைய பெண்களுக்குத் தங்களுடைய நகைகளையும் தங்களுக்குரிய அழகூட்டும் ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு வையுங்கள் என (எங்களுக்குக்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: முஸ்லிம் 1913


ஆஷூரா நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவது யூதர்களுடைய கலாச்சாரமாகும். இத்தகைய யூதர்களுடைய கலாச்சாரம் நம்முடைய இஸ்லாமியர்களையும் பீடித்து இன்றைக்கு இஸ்லாமிய கலாச்சாரமாகவே மாறி விட்டது.

முஸ்லிம்கள் ஆஷூரா நாளில் முஹர்ரம் பண்டிகை என்ற பெயரில் அதனைப் பெருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். அத்தகைய வழி கேடுகளை விட்டும் சமுதாயத்தவர்களை எச்சரிக்கை செய்வது அறிந்தவர்களின் மிக முக்கியக் கடமையாகும்.

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3397


நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.

நூல்: புகாரி 2006


நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம் மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான் பாவமன்னிப்புத் தேடுகின்றோம். இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக் கொண்டே வருகின்றன.

இது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ் மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா நோன்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1976

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1977


அல்லாஹ் அளவற்ற அருளாளன் என்பதற்கு மேற்கண்ட செய்தியும் ஒரு சான்றாகும்.

யூதர்களுக்கு மாறு செய்வோம்

ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று,நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1916, 1917


நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா?

சிலர் 9,10 அல்லது 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: அஹ்மத் 2047, பைஹகீ

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

முஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள் நோன்பு நோற்பது கூடாது.

குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தல்

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் இது போன்ற சுன்னத்தான நோன்புகளில் குழந்தைகளுக்கும் நோன்பு நோற்க பயிற்சி அளித்துள்ளனர்.

ருபய்யிவு பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் 10வது) நாளன்று காலையில் மதினா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி (இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர் தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள்.

நாங்கள் அதன் பின்னர், அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் அல்லாஹ் நாடினால் நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும் போது, நோன்பு திறக்கும் வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

நூல்: முஸ்லிம் 1919


சிறப்பு மிக்க இந்த ஆஷூரா நோன்பை நோற்று இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

- ஏகத்துவம் ,பிப்ரவரி 2005