புகழுக்கு ஆசைப்பட்டார்களா
எந்தச் சுயநலனும் இன்றி யாரேனும் பொதுச் சேவை செய்ய முடியுமா? என்று நினைப்பவர்களுக்கு வேறு விதமான சந்தேகம் தோன்றலாம். சுயநலவாதிகளையே பார்த்துப் பழகியதால் இந்தச் சந்தேகம் ஏற்படலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் பதவியினால் கிடைக்கும் அதிகாரத்துக்காகவும், புகழுக்காகவும் அந்தப் பதவிகளுக்கு ஆசைப்பட்டிருக்கலாம் அல்லவா?
எத்தனையோ வசதி படைத்தவர்கள் புகழுக்காக பெருமளவு செலவு செய்வதைப் பார்க்கிறோம். எனவே பணம் காசுகள் விஷயத்தில் தூய்மையாக நடந்தாலும் பதவியைப் பயன்படுத்தி புகழையும், பாராட்டையும் பெற்றிருக்கலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.
இந்தச் சந்தேகத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது. தனக்கு முன்னால் நாலு பேர் கைகட்டி நிற்கும் போதும், நாலு பேர் புகழும் போதும் ஏற்படும் போதை சாதாரணமானது அல்ல.
சொத்து சுகம் சேர்ப்பதற்காக அதிகாரத்துக்கு வர பலர் விரும்புகிறார்கள் என்றால் சில பேர் இந்தப் புகழ்ப் போதைக்காக அதிகாரத்தை விரும்புகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழுக்கு ஆசைப்பட்டார்களா? பதவியின் மூலம் கிடைக்கும் மரியாதையைப் பயன்படுத்திக் கொண்டார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைமை, ஆட்சித் தலைமை ஆகிய தலைமைகளில் எந்த ஒன்றையும் அவர்கள் தமது புகழுக்காகப் பயன்படுத்தியதில்லை.
ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2433, 2055, 2431
'கீழே கிடக்கும் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடுவதில் ஏழைகளுக்கான அரசின் கருவூலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ' என்பதைத் தவிர வேறு எந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை' என்று அகில உலகமே மதிக்கும் மாமன்னராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கும் சமயத்தில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள். இவ்வாறு கூறினால் கவுரவம் போய் விடுமே என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை.
நமக்குச் சொந்தமான நாலணா கீழே விழுந்து விட்டால் நாலு பேர் பார்க்கும் போது அதை எடுப்பதற்கு நமக்கே கூச்சமாக இருக்கிறது. 'இந்த அற்பமான பொருளைக் கூட எடுக்கிறானே என்று மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பார்களே' என்று கருதுகிறோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதன் பார்க்கின்ற கௌரவத்தைக் கூட இம்மாமனிதர் பார்க்கவில்லை.
இன்னொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. 'அள்பா' என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராம வாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். (அவரது ஒட்டகத்துக்கும், நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில்) அக்கிராம வாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2872, 6501
எத்தனையோ மன்னர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகள் போட்டியில் தோற்றதற்காக அப்பிராணிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தங்களைச் சேர்ந்த எதுவுமே தோல்வியைத் தழுவக் கூடாது என்ற கர்வமே இதற்குக் காரணம்.
மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் கூட தமது நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தோல்வியடையும் போது அவர்கள் மீது அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் வீசுவதைப் பார்க்கிறோம். சாதாரண மக்கள் கூட தம்மைச் சேர்ந்தவர்கள் விளையாட்டில் தோற்பதைக் கேவலமாக எண்ணுகின்றனர்.
சாதாரண நிலையில் உள்ள ஒரு கிராமவாசி தனது கோழியோ, ஆடோ சண்டையில் தோற்று விட்டால் அது தனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் என்று கருதுகிறான்.
இந்த மாமனிதரைப் பாருங்கள்! இவர் மாமன்னராகவும் திகழ்கிறார். அந்த நிலையில் இவரது ஒட்டகம் போட்டியில் தோற்று விடுகிறது. இவர் அது பற்றி எள் முனையளவும் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளாமல் இருப்பது கூட ஆச்சரியமானது அல்ல. அந்த நேரத்தில் அவர்கள் கூறிய அறிவுரை தான் மிகவும் ஆச்சரியமானது.
'உயருகின்ற ஒவ்வொரு பொருளும் ஒரு நாள் இறங்கியே ஆக வேண்டும்' என்னே அற்புதமான வாசகம்!
தனது ஓட்டகம் தோற்றது தான் சரி. இப்படித் தோல்வி ஏற்படுவது தான் நல்லது என்று போட்டியில் பங்கெடுத்த எவரேனும் கூறுவதுண்டா?
இந்த ஒட்டகத்தை எந்த ஒட்டகத்தினாலும் முந்த முடியாது என்ற நிலையே கர்வத்தின் பால் கொண்டு செல்லும் என இம்மாமனிதர் நினைக்கிறார். கோழிச் சண்டையில் தனது கோழி வெற்றி பெற வேண்டும் என்று சாதாரண மனிதன் விரும்புவானே அந்த விருப்பம் கூட இவருக்கு இருக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. 'எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்' என்று கூறினார்கள். 'இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்' எனவும் கூறினார்கள்.
நூல் : புகாரி 2821, 3148
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலை வராக இருந்த போது நடந்த நிகழ்ச்சியாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்க ளுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடன் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.
'என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாது' என்று கூறவில்லை. மாறாக 'இம்மரங்களின் எண்ணிக்கை யளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்கு வேன்' என்று கூறுவதிலிருந்து புகழையும், மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசுக் கருவூலத்தில் நிதி இல்லாத நேரத்தில் யாராவது உதவி கேட்டு வந்தால் வசதி படைத்தவர்களிடம் கடனாகப் பெற்று வழங்குவார்கள். ஸகாத் நிதி வசூலிக்கப்பட்டு வந்தவுடன் கடனைத் திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு தடவை இங்கிதம் தெரியாத மனிதரிடம் வாங்கிய கடனைக் குறித்த நேரத்தில் கொடுக்க இயலவில்லை. அப்போது நடந்தது என்ன என்பதைப் பாருங்கள்!
அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது' எனக் கூறினார்கள். மேலும், 'அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள்' எனக் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். 'அவருக்கு அதைக் கொடுங்கள். ஏனெனில், அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார்' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 2306, 2390, 2401, 2606, 2609
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிக் கேட்கிறார். நபித்தோழர்கள் அவர் மேல் ஆத்திரப்படும் அளவுக்குக் கடுமையாக நடந்து கொள்கிறார்.
ஆட்சியில் உள்ளவர்களுக்கு யாரேனும் கடன் கொடுத்தால் அதைத் திரும்பிக் கேட்க அஞ்சுவதைக் காண்கிறோம். அச்சத்தைத் துறந்து விட்டு திருப்பிக் கேட்கச் சென்றாலும் ஆட்சியில் உள்ளவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் ஏதோ பிச்சை கேட்பது போல் கெஞ்சித் தான் கொடுத்த கடனைக் கேட்க முடியும். ஆட்சியிலுள்ளவர்களால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்ற அச்சத்தினால் தயங்கித் தயங்கி தனது வறுமையைக் கூறி கூழைக் கும்பிடு போட்டுத் தான் கடனைக் கேட்க முடியும்.
கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கடனை வசூலிப்பது ஒரு புறமிருக்கட்டும் சாதாரண முறையில் கூடக் கேட்க முடியாது.
அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தைக் கடன் கொடுத்தவர் சர்வ சாதாரணமாகச் சந்திக்கிறார். கொடுத்த கடனைக் கேட்கிறார். அதுவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார். உலக வரலாற்றில் எந்த ஆட்சியாளரிடமாவது யாராவது இப்படிக் கேட்க முடியுமா?
இவ்வாறு கடுஞ்சொற்களை அவர் பயன்படுத்தும் போதும், ஏராளமான மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தும் போதும் 'தாம் ஒரு இறைத்தூதர்; மாமன்னர்; மக்கள் தலைவர்; இதனால் தமது கௌரவம் பாதிக்கப்படும் என்று அந்த மாமனிதர் எண்ணவில்லை.
தமது நிலையிலிருந்து இதைச் சிந்திக்காமல் கடன் கொடுத்தவரின் நிலையிலிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கிய கடனைத் தாமதமாகத் திருப்பிக் கொடுப்பதால் கடன் கொடுத்தவருக்கு ஏற்படக் கூடிய சங்கடங்களையும், சிரமங்களையும், மன உளைச்சல்களையும் நினைத்துப் பார்க்கிறார்கள். இதனால் தான் 'கடன் கொடுத்தவருக்கு அவ்வாறு பேசும் உரிமை உள்ளது' எனக் கூறி அவரைத் தாக்கத் துணிந்த தம் தோழர்களைத் தடுக்கிறார்கள்.
தமது மரியாதையை விட மற்றவரின் உரிமையைப் பெரிதாக மதித்ததால் தான் இதைச் சகித்துக் கொள்கிறார்கள்.
மேலும் உடனடியாக அவரது கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். கடனாக வாங்கிய ஒட்டகத்தை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் தம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்த போது அதையே அவருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார்கள்.
கடுஞ்சொற்களை என்ன தான் சகித்துக் கொண்டாலும் இத்தகையவருக்கு வாங்கிய கடனை விட அதிகமாகக் கொடுக்க யாருக்கும் மனம் வராது. முடிந்த வரை குறைவாகக் கொடுக்கவே உள்ளம் தீர்ப்பளிக்கும்.
ஆனால், இந்த மாமனிதரோ தாம் வாங்கிய கடனை விட அதிக மாகக் கொடுக்குமாறு உத்தரவிட்டதுடன் இவ்வாறு நடப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர் எனவும் போதனை செய்கிறார்கள்.
இதனால் தான் முஸ்லிமல்லாத நடுநிலையாளர்களும் இவரை மாமனிதர் எனப் போற்றுகின்றனர்.
பதவியைப் பயன்படுத்தி எந்தவிதமான புகழையும், மரியாதையையும் அவர்கள் விரும்பவில்லை என்பதற்கு அற்புதமான சான்றாக இது அமைந்துள்ளது.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். நஜ்ரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட, ஓரப்பகுதி கடினமாக இருந்த போர்வையை அவர்கள் மேலாடையாக அணிந்திருந்தார்கள். அவர்களை எதிர் கொண்ட ஒரு கிராம வாசி அப்போர்வையைக் கடுமையான வேகத்தில் இழுத்தார். அவர் கடுமையாக இழுத்ததால் நபிகள் நாயகத்தின் தோள் பகுதியில் அந்த அடையாளம் பதிந்ததை நான் கண்டேன். இழுத்தது மட்டுமின்றி அக்கிராமவாசி 'உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்குத் தருமாறு உத்தரவிடுவீராக' என்று கூறினார். அவரை நோக்கித் திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.
நூல் : புகாரி 3149, 5809, 6088
சாதாரண மனிதன் கூட பொது இடங்களில் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதைச் சகித்துக் கொள்ள மாட்டான். தனக்கு ஏற்பட்ட அவமானமாக அதை எடுத்துக் கொள்வான்.
உலகின் மிகப் பெரிய வல்லரசின் அதிபரான நபிகள் நாயகத்தை முன் பின் அறிமுகமில்லாத ஒரு கிராம வாசி சர்வ சாதாரணமாகச் சந்திக்க முடிகிறது. சந்திப்பது மட்டுமின்றி தன்னை விடத் தாழ்ந்த வனிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதை விட அநாகரீகமாக இந்த மாமன்னரிடம் அவரால் நடக்க முடிகின்றது. 'உம்முடைய செல்வத்தைக் கேட்கவில்லை. உம்மிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்தைக் கேட்கிறேன்' என்று கோரிக்கை வைக்க முடிகின்றது.
இவ்வளவு நடந்த பிறகும் மிக மிகச் சாதாரணமாக அந்தக் கிராமவாசியை நோக்கி நபிகள் நாயகத்தால் சிரிக்க முடிகின்றது. அவரது கோரிக்கையை அவர்களால் ஏற்க முடிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) பதவியைப் பெற்ற பின் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும், கௌரவத்தையும் கூட தியாகம் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?.
இந்த நிகழ்ச்சியை ஏதோ ஒரு தடவை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகக் கருதி விடக் கூடாது.
'மக்களிடம் சர்வ சாதாரணமாக முஹம்மது பழகுகிறார்; யாரும் அவரை நெருங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் கோரிக்கையை முன் வைக்கலாம்; நீண்ட நாள் பழகிய நண்பனுடன் எடுத்துக் கொள்ளும் உரிமையை எடுத்துக் கொள்ளலாம்; எப்படி நடந்தாலும் அவர் கோபம் கொள்ள மாட்டார்; தேவைக்கேற்ப வாரி வழங்குவார்' என்றெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் தான் அறிமுகமில்லாத கிராமவாசிக்கு இப்படி நடக்க முடிந்தது.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. 'முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை' என்று அந்த மனிதர் கூறினார். 'இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'நான் விட மாட்டேன்' என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் 'விட மாட்டேன்' என்றார். அந்தக் கிராம வாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். 'நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திருந்த ஒருவரை நோக்கி 'இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக' என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி 'நீங்கள் புறப்படுங்கள்!' என்றார்கள்.
இதை நபிகள் நாயகத்தின் தோழர் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.
நூற்கள்: நஸயீ 4694, அபூதாவூத் 4145
நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவுக்குச் செழிப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்ச்சியை முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். அவர்களின் பெருந்தன்மைக்கும், தன்னடக்கத் திற்கும் இதில் சான்று உள்ளதால் மீண்டும் இதைக் குறிப்பிடுகிறோம்.
பள்ளிவாசலில் நபிகள் நாயகத்தின் உற்ற தோழர்கள் இருக்கும் போது யாரெனத் தெரியாத ஒருவர் சட்டையைப் பிடித்து இழுக்கிறார். பிடரி சிவந்து போகும் அளவுக்கு இழுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) கோபப்படாமல் இருக்கிறார்கள். அவருக்கு இரண்டு ஒட்டகங் கள் உடைமையாக இருந்தும் அவற்றில் ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பொருட்களைக் கேட்டும் அதையும் சகித்துக் கொண்டார்கள்.
பிடித்த சட்டையை விடாமலே தனது கோரிக்கையைக் கேட்கிறார். சட்டையை விடும்படி நபிகள் நாயகம் கேட்ட பிறகும் சட்டையை விடாமல் கோரிக்கையில் பிடிவாதமாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையை எவ்வித அதிகாரமும் இல்லாத நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட சகித்துக் கொள்ள இயலுமா? இவ்வளவு நடந்த பின்பும் 'உமது அப்பன் சொத்தைக் கேட்கவில்லை; பொது நிதியைத் தான் கேட்கிறேன்' என அவர் கூறிய பிறகும் அவரது கோரிக்கையை ஏற்று இரு ஒட்டகங்கள் நிறைய வாரி வழங்க நமது மனம் இடம் தருமா? இந்த மாமனிதரின் உள்ளம் இடம் தருகிறது.
தாம் ஒரு வல்லரசின் அதிபதி என்ற எண்ணம் கூட இல்லாமல் நடந்து கொண்டார்கள்.
சாதாரணக் குடிமக்களுக்குக் கிடைப்பதை விட அதிபர் என்பதற்காக அதிகப்படியான எந்த மரியாதையையும் அவர்கள் பெறவில்லை என்பதற்குப் பின் வரும் நிகழ்ச்சியும் சிறந்த சான்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தன் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, 'வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காகக் குடிதண்ணீர் வாங்கி வா' என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இந்தத் தண்ணீரையே தாருங்கள்' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே' என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்' எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி 'இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 1636
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளின் கடைசியில் தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். இந்தக் காலக்கட்டத்தில் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி நிறைவு செய்திருந்தார்கள் என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தாகம் ஏற்பட்டால் எந்த மன்னரும் குடி தண்ணீரைத் தேடிப் போக மாட்டார். குடி தண்ணீர் தான் அவரைத் தேடி வரும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்கள் தண்ணீர் அருந்துகின்ற பந்தலுக்குச் சாதாரணமாக வருகின்றார்கள். மற்றவர்கள் அருந்துகிற அதே தண்ணீரைத் தமக்கும் தருமாறு கேட்கின்றார்கள். தமது பெரிய தந்தையின் வீட்டிலிருந்து நல்ல தண்ணீர் பெற்றுக் குடிப்பது யாராலும் பாரபட்சமாக எடுத்துக் கொள்ளப்படாது என்ற நிலையிலும் மக்கள் எந்தத் தண்ணீரைப் பருகுகிறார்களோ அதையே பருகுவதில் பிடிவாதமாக இருக்கின்றார்கள். பலரது கைகள் இத்தண்ணீரில் பட்டுள்ளது என்று தக்க காரணத்தைக் கூறிய பிறகும் அந்தத் தண்ணீரையே கேட்டுப் பருகுகின்றார்கள்.
பதவி அதிகாரம் யாவும் சுயநலனுக்குரியது அல்ல; இப்பதவியால் யாரும் எந்த உயர்வையும் பெற முடியாது என்று திட்டவட்டமாக நபிகள் நாயகம் (ஸல்) நம்பியது தான் இதற்குக் காரணம்.
புனிதமான பணிகளில் மக்களுடன் அதிகாரம் படைத்தவர்கள் போட்டியிட்டால், அதிகாரம் படைத்தவருக்காக மக்கள் தங்கள் பங்கை விட்டுக் கொடுப்பதை நாம் காண்கிறோம். ஸம்ஸம் நீரை மக்களுக்கு விநியோகம் செய்வது நல்ல பணி என்று கூறி அப்பணியைச் செய்ய ஆசை இருப்பதை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். தாமும் கிணற்றில் இறங்கி தண்ணீர் விநியோகித்தால் இப்பணியைச் செய்தவர்கள் தமக்காக விட்டுத் தருவார்கள். இது நல்லதல்ல என்ற காரணத்துக்காக இதையும் தவிர்க்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியும் மாமனிதரின் சுயநலன் கலக்காத பண்புக்குச் சான்றாகவுள்ளது.
ஒரு அடக்கத்தலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) கடந்து சென்றார்கள். 'இறைவனை அஞ்சிக் கொள்! பொறுமையைக் கடைப்பிடி!' என்று அப்பெண்ணுக்கு அவர்கள் அறிவுரை கூறினார்கள். அப்பெண் நபிகள் நாயகத்தை அறியாததால் 'உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! எனக்கேற் பட்ட துன்பம் உனக்கு ஏற்படவில்லை' எனக் கூறினார். அறிவுரை கூறியவர் நபிகள் நாயகம் (ஸல்) என்று பின்னர் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பெண் நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு வந்தார். வாசலில் எந்தக் காவலர்களையும் அவர் காணவில்லை. அப்பெண் உள்ளே வந்து 'உங்களைப் பற்றி அறியாமல் பேசி விட்டேன்' எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'துன்பத்தின் துவக்கத்தில் ஏற்படுவது தான் பொறுமை' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 1283, 7154
ஆட்சித் தலைவர்கள் வெளியே வருகிறார்கள் என்றால் வருபவர் ஆட்சித் தலைவர் தான் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தான் வருவார்கள்.
கிரீடம் உள்ளிட்ட சிறப்பு ஆபரணங்கள், முன்னும் பின்னும் அணிவகுத்துச் செல்லும் சிப்பாய்கள், பராக் பராக் என்ற முன்னறிவிப்பு போன்றவை காரணமாக மன்னரை முன்பே பார்த்திராதவர்களும் கூட 'இவர் தான் மன்னர்' என்று அறிந்து கொள்ள முடியும்.
மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி நடக்கும் போது கூட இத்தகைய ஆடம்பரங்கள் இன்றளவும் ஒழிந்தபாடில்லை.
ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுது கொண்டிருந்த பெண்ணுக்கு அறிவுரை கூறுகிறார்கள். தமக்கு அறிவுரை கூறுபவர் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி என்பது அப்பெண்ணுக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதர்களைப் போல் சாதாரண உடையில் நபிகள் நாயகம் இருந்ததும், பல்லக்கில் வராமல் நடந்தே வந்ததும், அவர்களுடன் பெரிய கூட்டம் ஏதும் வராததுமே நபிகள் நாயகத்தை அப்பெண் அறிந்து கொள்ள இயலாமல் போனதற்குக் காரணமாகும்.
'உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ' என்று அப்பெண் கூறும் போது 'நீ யாரிடம் பேசுகிறாய் தெரியுமா?' என்று அப்பெண்ணிடம் அவர்களும் கேட்கவில்லை. உடன் சென்ற அவர்களின் பணியாளர் அனஸ் என்பாரும் கேட்கவில்லை. இதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) சென்று விடுகிறார்கள்.
தமக்கு அறிவுரை கூறியவர் தமது நாட்டின் அதிபதி என்று அறிந்து கொண்டு ஏனைய அதிபதிகளைப் போல வாயிற்காப்போரின் அனுமதி பெற வேண்டியிருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அவர் வருகிறார். ஆனால் நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு எந்தக் காவலாளியும் இருக்கவில்லை. உலகிலேயே காவலாளி யாரும் இல்லாத ஒரே ஆட்சித் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாகத் தான் இருக்க முடியும்.
தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்கத் தான் அப்பெண்மணி வருகிறார். 'உங்களை அறியாமல் அலட்சியமாக நடந்து விட்டேன்' எனக் கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அதைப் பொருட்படுத்தவே இல்லை. மாறாக, இந்த நிலையிலும் அவருக்கு முன்னர் கூறிய அறிவுரையைத் தான் தொடர்கிறார்கள். 'துன்பம் வந்தவுடனேயே அதைச் சகிப்பது தான் பொறுமை' என்று போதனை செய்கிறார்கள். அப்பெண்ணின் அலட்சியம் நபிகள் நாயகத்தைக் கடுகளவு கூட பாதிக்கவில்லை என்பதற்கு இது சான்றாகவுள்ளது.
பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி எந்த மரியாதையையும் அடைய அவர்கள் விரும்பவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
மற்றொரு அற்புத வரலாற்றைப் பாருங்கள்!
என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏமனுக்கு (இன்று இது தனி நாடாகவுள்ளது.) ஆளுநராக அனுப்பினார்கள். நான் ஏமன் நோக்கிப் புறப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள். விடை பெறும் போது, 'முஆதே! இவ்வருடத் திற்குப் பின் அநேகமாக என்னைச் சந்திக்க மாட்டீர்! அல்லது எனது பள்ளிவாசலையோ, எனது அடக்கத்தலத்தையோ தான் சந்திப்பீர்' எனக் கூறினார்கள். இதைக் கேட்டு நான் அழலானேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பி மதீனாவை நோக்கி நடந்தார்கள்.
நூல் : அஹ்மத் 21040, 21042
தம்மால் நியமனம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி வாகனத்தில் இருக்க, அவரை நியமனம் செய்த அதிபர் அவருடன் கூடவே நடந்து சென்ற அதிசய வரலாற்றை உலகம் கண்டதில்லை.
அவரிடம் பேச வேண்டியவைகளை ஊரிலேயே பேசி அனுப்பி இருக்கலாம். சாதாரண நண்பருடன் பேசுவது போல் பேச வேண்டியவைகளைப் பேசிக் கொண்டு செல்கிறார்கள் என்றால் இவர்கள் புகழுக்காக பதவியைப் பெற்றிருப்பார்கள் என்று கற்பனை கூட செய்ய முடியுமா?
சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் தனது ஊழியரிடம் இப்படி நடக்க முடியாது. சிறு நிறுவனத்தின் முதலாளி ஒருவர் தனது தொழிலாளியுடன் இப்படி நடக்க முடியாது.
உலக வல்லரசின் அதிபரால் இப்படி நடக்க முடிந்தது என்றால் இதிலிருந்து நபிகள் நாயகத்திற்குப் புகழாசை எள்ளளவும் கிடையாது என்பதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் கட்டிய பள்ளிவாசலில் தொழுகையின் போது முன்னோக்கும் சுவற்றில் யாரோ மூக்குச் சளியைச் சிந்தியிருந்தனர். இதனைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே அதை நோக்கிச் சென்று தமது கரத்தால் அதைச் சுத்தம் செய்தார்கள்.
நூல் : புகாரி 405, 406, 407, 409, 411, 414, 417, 6111
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இலேசாகச் சாடை காட்டினால் கூட இந்த வேலையை அவர்களின் தோழர்கள் செய்யக் காத்தி ருந்தனர். அல்லது யாருக்காவது உத்தரவு போட்டு அதை அப்புறப் படுத்தியிருக்கலாம். சாதாரண மனிதர் கூட பொது இடங்களில் இந்த நிலையைக் காணும் போது யாராவது அப்புறப்படுத்தட்டும் என்று கண்டும் காணாமல் இருப்பார். அல்லது மரியாதைக் குறைந்த வர்களாகக் கருதப்படும் நபர்கள் மூலம் அதைச் சுத்தம் செய்வார்.
ஆனால், மாபெரும் வல்லரசின் அதிபரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ சாதாரண மனிதன் எதிர்பார்க்கின்ற மரியாதையைக் கூட விரும்பவில்லை. தாம் ஒரு மன்னர் என்பதோ, தமது தகுதியோ அவர்களுக்கு நினைவில் வரவில்லை. தாம் ஒரு நல்ல மனிதராக நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் விருப்பமாக இருந்தது.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) தமது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்.
நான் அதிகமாக நோன்பு நோற்று வரும் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அவர்கள் அமர்வதற்காக எடுத்துப் போட்டேன். அவர்கள் அதில் அமராமல் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்குமிடையே தலையணை கிடந்தது. 'மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உனக்குப் போதுமானதில்லையா?' என்று என்னிடம் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! ஐந்து நாட்கள் நோன்பு வைக்கலாமா?' என்று கேட்டேன். 'ஐந்து நாட்கள் நோன்பு வைத்துக்கொள்' எனக் கூறினார்கள். 'அல்லாஹ் வின் தூதரே! ஏழு நாட்கள் நோன்பு வைத்துக் கொள்ளட்டுமா?' என்று நான் கேட்டேன். 'ஏழு நாட்கள் நோன்பு வைத்துக் கொள்' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! 'ஒன்பது நாட்கள் நோன்பு வைத்துக் கொள்ளட்டுமா' என்று கேட்டேன். 'ஒன்பது நாட்கள் நோன்பு வைத்துக் கொள்' என்றார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! பதினோரு நாட்கள் நோன்பு வைக்கட்டுமா' என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதை விட சிறந்த நோன்பு ஏதுமில்லை' என்ற கூறினார்கள்.
நூல் : புகாரி 1980, 6277
இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல்வேறு குணநலன்கள் பிரதிபக்கின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய ஆன்மீக நெறியில் வரம்புக்கு உட்பட்டே வணக்க வழிபாடுகள் நிகழ்த்த வேண்டும். கடவுளுக்குப் பணி செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு மனைவி மக்களை, மனித குலத்தை மறந்து விடக்கூடாது.
அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற நபித்தோழர் எப்போது பார்த்தாலும் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கிறார். மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இதனால் சரி வரச் செய்யவில்லை. நபிகள் நாயகத்திடம் இவரைப் பற்றிய புகார் வந்ததும் அவர்கள் அவரை அழைத்து வரச் செய்திருக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அழைக்கிறார்கள் என்றால் அவர் ஓடோடி வந்திருப்பார். ஆனால், அவருக்கு அறிவுரை கூறுவதற்காக அவரைத் தேடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமது பதவியைப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) விரும்பியதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
நமது நாட்டின் அதிபதியாகிய நபிகள் நாயகம் நம்மைத் தேடி வந்து விட்டார்களே என்றெண்ணி அவர்கள் அமர்வதற்காக கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அப்துல்லாஹ் பின் அம்ர் எடுத்துப் போடுகிறார். கண்ணியமாகக் கருதப்படுபவர்கள் இவ்வாறு மரியாதை செய்யப்படுவது வழக்கமாகவும் இருந்தது. இன்றைக்கும் கூட நம்மை விட ஏதோ ஒரு வகையில் சிறப்புப் பெற்றவர்கள் நம்மைத் தேடி வந்தால் வெறும் தரையில் அவர்கள் அமர மாட்டார்கள்.
மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தால் பதவிக்காக பெற்ற கவுரவமாகக் கூட அது கருதப்படாது. அவ்வாறு இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள்.
இருவர் அமரும் போது இருவரும் சமநிலையில் அமர வேண்டும் என்பதால் அந்தத் தலையணையில் அவர்கள் அமரவுமில்லை; அதன் மீது சாய்ந்து கொள்ளவுமில்லை; இருவருக்கும் நடுவில் அதை எடுத்துப் போடுகிறார்கள்.
தமக்காகச் சிறப்பான மரியாதை தரப்பட வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விரும்பியதில்லை; அப்படியே தரப்பட்டாலும் அதை ஏற்பதில்லை என்பதையும் இந்நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது போதுமே என்றதும் அவர் அதைக் கேட்டிருக்க வேண்டும். மன்னர்களின் கட்டளையை அப்படியே ஏற்பது தான் மனிதர்களின் இயல்பாகவுள்ளது. ஆனால் இவரோ ஐந்து நோன்பு, ஏழு நோன்பு, ஒன்பது நோன்பு, பதினொன்று நோன்பு என்று ஒவ்வொன்றாகக் கேட்கிறார். இவ்வாறு நம்மிடம் ஒருவர் கேட்டால் நமக்கு ஆத்திரம் வராமல் இருக்காது. 'ஒரேயடியாகக் கேட்டுத் தொலைக்க வேண்டியது தானே' என்று கூறுவோம். அல்லது 'என்னப்பா கேலி செய்கிறாயா?' எனக் கேட்போம். இந்தத் தோழரின் நடவடிக்கைகள் இப்படித் தான் இருந்தன.
ஆனால், இந்த மாமனிதர் குழந்தைகளின் சேட்டையைச் சகித்துக் கொள்ளும் தந்தையைப் போல் பொறுமையாகப் பதில் கூறுகிறார்கள்.
நபிகள் நாயகத்தின் இந்தப் பண்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்ததால் அவரும் இப்படி நடந்து கொள்ள முடிந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டைச் சமையுங்கள்' என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனை வரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராம வாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்' என்று விடையளித்தார்கள்.
நூற்கள் : அபூதாவூத் 3773, பைஹகீ 14430
ஒரு உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்வதை மரியாதைக் குறைவாகவே கருதுவார்கள். பலரும் கைகளைப் போட்டுச் சாப்பிடும் தட்டில் சாப்பிடுவதை அருவருப்பாகக் கருதுபவர்களும் உள்ளனர்.
ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் கைகளைப் போட்டுச் சாப்பிடும் அதே தட்டில் தாமும் சாப்பிட்டார்கள். அது மட்டுமின்றி பொதுவாக சம்மனமிட்டு அமர்வது தான் சாப்பிடுவதற்கு வசதியானது. மண்டியிட்டு அமர்வது வசதிக் குறைவானது என்பதை அறிவோம்.
மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்குரியதாகக் கருதப்பட்டு வந்ததால் தான் கிராம வாசி அதைக் குறை கூறுகிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ, மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்கக் கூடிய ஒரு மனிதராக மட்டும் தான் தம்மைக் கருதினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு வந்த உணவைத் தான் மற்றவர்களுக்கு வழங்கினார்கள். எனவே வீட்டில் தமக்கென எடுத்து வைத்துக் கொண்டு தனியாகச் சாப்பிட்டிருக்க முடியும்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த விதமான கவுரவமும் பார்க்கவில்லை. மண்டியிட்டு அமர்ந்து சாப்பிட்டது மட்டுமின்றி இன்னொருவர் அமரக்கூடிய இடத்தை ஆக்கிரமித்து வசதியாக அமர்வதைக் கூட அடக்குமுறையாக அவர்கள் கருதுகிறார்கள். பெருந்தன்மை மிக்க அடியானாக இருப்பது தான் தமக்கு விருப்பமானது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பண்பாளர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனி மரியாதை பெற்றார் எனக் கூற முடியுமா?
ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்' என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
நூல் : இப்னு மாஜா 3303
உலகம் முழுவதும் அவர்களை மாபெரும் அதிகாரம் படைத்தவராகப் பார்க்கிறது. அவர்களோ, தம்மை ஏழைத்தாயின் புதல்வன் என்றே நினைக்கிறார்கள். இந்தப் பதவி, அதிகாரத்தால் தமக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்கள்.
பதவியைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் இது போன்ற கவுரவத்தையாவது அவர்கள் பெற்றிருக்கலாம். அதைக் கூட விரும்பாத எளிமை அவர்களுடையது.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக் கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் எனவும் கூறினார்கள்.
நூல் : தப்ரானி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையும் மறுத்தால் உறுதியாக மறுப்பார்கள். எனவே தான் குடையாகப் பயன்பட்ட துணியை வாங்கி மடித்து வைத்துக் கொள்கிறார்கள். மறுத்தது மட்டுமின்றி குடையைப் பிடுங்கி வைத்துக் கொண்டதிலிருந்து இந்த மறுப்பு உளப்பூர்வமானது என்பதை அறியலாம். அது மட்டுமின்றி 'நானும் உங்களைப் போன்ற மனிதனே' என்று கூறி பதவி மற்றும் அதிகாரம் காரணமாக எந்த உயர்வும் இல்லை என்பதைப் பிரகடனம் செய்கிறார்கள்.
அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.
அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை ஒரு இளைஞர் உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்' என்றார்கள். தோலுக்கும், இறைச்சிக்குமிடையே தமது கையை அக்குள் வரை விட்டு உரித்தார்கள்.
நூற்கள் : அபூதாவூத் 157, இப்னுமாஜா 3170
ஒருவருக்கு ஆடு உரிக்கத் தெரியாவிட்டால் அவர்கள் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கலாம். அல்லது இப்படித் தான் உரிக்க வேண்டும் என்று வாயால் கூறலாம். போயான எந்தக் கவுரவமும் பார்க்காமல் தாமே ஆட்டுத் தோலை உரித்துக் காட்டிக் கற்றுக் கொடுத்தார்கள்.
அவர்களின் மொத்த வாழ்க்கையே எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது எனலாம்.
வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள்.
நூல் : புகாரி 6247
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் 'உனது குருவி என்ன ஆனது?' என்று விசாரிக்கும் அளவுக்கு சிறுவர்களுடன் பழகுவார்கள்.
நூல் : புகாரி 6129
நான் அபீஸீனியாவிலிருந்து வந்தேன். அப்போது நான் சிறுமியாக இருந்தேன். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடையை அவர்கள் எனக்கு அணிவித்தார்கள். அந்த வேலைப்பாடுகளைத் தொட்டுப் பார்த்து 'அருமை அருமை' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு காலித் (ரலி),
நூல் : புகாரி 3874
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது எதிரில் சிறுவர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் கன்னத்தையும் தடவிக் கொடுத்துக் கொண்டே சென்றனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமூரா (ரலி)
நூல் : முஸ்லிம் 4297
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த நற்குணம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு நாள் என்னை ஒரு வேலைக்கு அனுப்பினார்கள். நபிகள் நாயகம் கூறிய வேலையைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக போக மாட்டேன்' எனக் கூறினேன். நான் புறப்பட்டு கடை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கருகில் வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் பின்புறமாக எனது பிடரியைப் பிடித்தனர். அவர்களை நான் நோக்கிய போது அவர்கள் சிரித்தனர். 'அனஸ்! நான் கூறிய வேலையைச் செய்தாயா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இதோ செய்கிறேன்' என்று கூறினேன். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒன்பது வருடங்கள் அவர்களுக்கு நான் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த ஒரு காரியம் குறித்து ஏன் இப்படிச் செய்தாய்?' என்றோ, நான் செய்யாத ஒரு காரியம் குறித்து இப்படிச் செய்திருக்க மாட்டாயா?' என்றோ அவர்கள் கடிந்து கெண்டதில்லை' என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : முஸ்லிம் 4272
சிறுவர்கள் மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பு செலுத்திய நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. இத்தகைய பண்பாளர் தமது பதவியைப் பயன்படுத்தி மரியாதையையும், புகழையும் எதிர்பார்த்திருக்க முடியுமா?
வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.
நூல் : அஹ்மத் 23756, 24176, 25039
தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.
நூல் : தப்ரானி (கபீர்) 12494
மதீனாவுக்கு வெளியே உள்ள சிற்றூர் வாசிகள் இரவு நேரத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைப்பார்கள். பாதி இரவு கடந்து விட்டாலும் அந்த விருந்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்வார்கள்.
நூல் : தப்ரானி (ஸகீர்) 41
அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.
நூல் : புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.
நூல் : புகாரி 3906
இப்படி எல்லா வகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள். ஒரு தடவை கூடத் தமது பதவியைக் காரணம் காட்டி எந்த உயர்வையும் அவர்கள் பெற்றதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும், புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை. இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது.
மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில் மக்களிடம் 'மக்கா வாசிகளின் ஆடுகளை அற்பமான கூக்காக மேய்த்தவன் தான் நான்' என்பதை அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
நூல் : புகாரி 2262, 3406, 5453
நான் அதிகாலையில் (என் தம்பி) அப்துல்லாஹ்வை நபிகள் நாயகத்திடம் தூக்கிச் சென்றேன். அவர்கள் ஸகாத் (பொதுநிதி) ஒட்டகங்களுக்குத் தமது கையால் அடையாளமிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாக் (ரலி)
நூல் : புகாரி 1502, 5542
பொது நிதிக்குச் செலுத்தப்பட்ட ஒட்டகங்கள் மற்றவர்களின் ஒட்டகங் களுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக அவற்றுக்குத் தனி அடையாள மிடும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) மேற்கொண்டிருந்தார்கள். இந்தப் பணியைத் தமது கைகளால் தாமே செய்துள்ளது அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுகளவு கூட பெருமையையும், புகழையும் விரும்பியதில்லை என்பதற்கு மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்:
நபிகள் நாயகத்துடன் நான் ஒரு போரில் பங்கெடுத்துக் கொண்டேன். என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின்தங்க வைத்தது. (முன்னே சென்று கொண்டிருந்த நபிகள் நாயகம்) என்னிடம் வந்து ஜாபிரா?' என்றனர். நான் ஆம் என்றேன். 'என்ன பிரச்சினை' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னை பின்தங்கச் செய்து விட்டது' என்று கூறினேன். உடனே அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி தமது குச்சியால் குத்தினார்கள். 'இப்போது ஏறிக் கொள்' என்றார்கள். நான் ஏறிக் கொண்டேன். அது விரைவாகச் சென்றதால் நபிகள் நாயகத்தை முந்தக் கூடாது என்பதற்காக அதைத் தடுத்து நிறுத்தலானேன். 'திருமணம் செய்து விட்டாயா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?' எனக் கேட்டார்கள். விதவையைத் தான் என்று நான் கூறினேன். '(நீர் இளைஞராக இருப்பதால்) கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே! இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்களே' என்றனர். 'எனக்குச் சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண் வேண்டும் என்பதற்காக விதவையை மணந்து கொண்டேன்' என்று நான் கூறினேன். 'இதோ ஊருக்குள் நுழையப் போகிறாய். இனி மகிழ்ச்சி தான்' என்று கூறி விட்டு, 'உனது ஒட்டகத்தை என்னிடம் விற்கிறாயா?' என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். நான்கு தங்கக் காசுகளுக்கு அதை வாங்கிக் கொண்டனர். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு முன் சென்று விட்டனர். நான் காலையில் போய்ச் சேர்ந்தேன். பள்ளிவாசலுக்கு வந்த போது பள்ளிவாசலின் வாயிலில் நபிகள் நாயகம் நின்றனர். 'இப்போது தான் வருகிறாயா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'உனது ஒட்டகத்தை விட்டு விட்டு உள்ளே போய் இரண்டு ரக்அத்கள் தொழு' என்றார்கள். நான் உள்ளே போய் தொழுதேன். எனக்குத் தர வேண்டியதை எடை போட்டுத் தருமாறு பிலாலிடம் கூறினார்கள். பிலால் அதிகமாக எடை போட்டுத் தந்தார். அதைப் பெற்றுக் கொண்டு நான் புறப்படலானேன். 'ஜாபிரைக் கூப்பிடுங்கள்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள். ஒட்டகத்தைத் திருப்பித் தருவதற்குத் தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். அது எனக்குக் கவலையாக இருந்தது. 'உமது ஒட்டகத்தையும் எடுத்துக் கொள்வீராக! அதற்காக நாம் அளித்த கிரயத்தையும் வைத்துக் கொள்வீராக' என்றனர்.
புகாரி: 2097, 2309, 2861, 2967, 5245, 5247, 5667
ஜாபிர் என்பவர் முக்கியமான பிரமுகர் அல்ல. ஒரு இளைஞர். அவரது ஒட்டகம் சண்டித்தனம் செய்து உட்கார்ந்து விட்டதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) யாரையாவது அனுப்பி அவருக்கு உதவுமாறு கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவரை நோக்கி தாமே வருகிறார்கள்.
வந்தவுடன் ஜாபிரா? என்று கேட்கிறார்கள். சாதாரணமானவரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கும், பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கும் அவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள் என்பது தெரிகிறது.
தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி அவரது ஒட்டகத்தை எழுப்பி விடுகிறார்கள். எழுப்பி விட்டது மட்டுமின்றி அவருடைய பொருளாதார நிலை, குடும்ப நிலவரம் ஆகிய அனைத்தையும் சாவகாசமாக விசாரிக்கிறார்கள்.
அவரது ஒட்டகம் எதற்கும் உதவாத ஒட்டகம் என்பதை அறிந்து கொண்டு அவர் வேறு தரமான ஒட்டகத்தை வாங்குவதற்காக அதை விலைக்குக் கேட்கிறார்கள்.
அவர் மற்றவர்களுடன் சேரும் வரை கூடவே வந்து விட்டு அதன் பின்னர் வேகமாக அவர்கள் புறப்படுகிறார்கள்.
ஊர் சென்றதும் தாம் கொடுத்த வாக்குப் படி ஒட்டகத்திற்குரிய விலையைக் கொடுப்பதற்காக இவரை எதிர் பார்த்துக் காத்திருக் கிறார்கள். தாம் சொன்ன படி அதற்கான விலையையும் கொடுத்து விட்டு அந்த ஒட்டகத்தையும் அவரிடம் கொடுத்து விடுகிறார்கள்.
இது அவர்களின் வள்ளல் தன்மைக்கும், அவர்கள் ஆட்சி எவ்வளவு செழிப்பாக இருந்தது என்பதற்கும், தேவையறிந்து தாமாகவே உதவி செய்யும் அளவுக்கு அவர்கள் மக்கள் நலனில் அக்கரை செலுத்தினார்கள் என்பதற்கும் சான்றாக உள்ளது.
இவ்வளவு எளிமையாகவும், மிகச் சாதாரண மனிதரைப் போன்றும் நடந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி புகழ் சம்பாதித்திருப்பார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ, அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகிறார்.
நூற்கள்: அபூதாவூத் 3278, இப்னுமாஜா 240 அஹ்மத் 6262
மிகவும் சாதாரண பொறுப்பில் உள்ளவர்கள் கூட தனியாக எங்கும் செல்வதைப் பார்க்க முடிவதில்லை. குறைந்த பட்சம் முன்னால் இருவர், பின்னால் இருவர் இல்லாமல் இவர்கள் வெளியே கிளம்ப மாட்டார்கள். ஆனால், நபிகள் நாயகத்தை அடியொற்றி இரண்டு பேர் சென்றதே கிடையாது.
பலருடன் செல்ல வேண்டிய வேலை இருந்தால் அவர்களும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக்கோ, பகட்டுக்கோ குறைந்தது இருவர் கூட சென்றதில்லை என்பது நபிகள் நாயகத்தின் தன்னடக்கத்திற்கும், துணிச்சலுக்கும் சான்றாக உள்ளது
'நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்ததுண்டா?' என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) இடம் கேட்டேன். அதற்கவர் 'ஆம்' என்றார். மேலும் தொடர்ந்து 'வைகறைத் தொழுகை முடிந்ததும் சூரியன் உதிக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். சூரியன் உதித்த பின்னர் எழுவது தான் அவர்களின் வழக்கம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்களும் அமர்ந்திருப்பார்கள். அப்போது அறியாமைக் காலத்தின் (இஸ்லாத்தை ஏற்காத காலத்தின்) தமது நடவடிக்கைகள் குறித்து நபித்தோழர்கள் பேசுவார்கள். அதை நினைத்துச் சிரிப்பார்கள். இதைப் பார்க்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்னகைப்பார்கள்.
நூல் : முஸ்லிம் 1074, 4286
இந்த நிகழ்ச்சியைக் கவனியுங்கள்! மாபெரும் வல்லரசின் அதிபரும், ஆன்மீகத் தலைவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி இங்கே கூறப்படுகிறது.
தொழுகையை முடித்ததும் மக்கள் தமது அறியாமைக் காலத்தில் செய்த கிறுக்குத்தனங்களையும், மூடச் செயல்களையும் ஒருவருக் கொருவர் பேசிச் சிரிப்பார்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்தி ருக்கிறார்களே என்பதற்காக மௌனமாக இருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஏதேனும் கூறும் போது மிகவும் கவனமாகச் செவிமடுக்கும் அவர்களின் தோழர்கள் சாதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்கும் போது இயல்பாகவே நடந்து கொள்வார்கள்.
நபிகள் நாயகத்துக்கு மரியாதை தரக் கூடாது என்பதற்காக அவர்கள் இவ்வாறு நடக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டால் உயிரையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் சாதாரணமாக அமர்ந்தால் போதுமானது என்று பயிற்றுவித்ததன் அடிப்படையிலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.
மழலைகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் கூட பாடம் நடத்தாத நேரங்களில் தமக்கு முன்னால் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்க மாட்டார். தனக்குக் கீழே உள்ளவர் தன் முன்னே இவ்வாறு நடப்பதை உயர் அதிகாரி விரும்ப மாட்டார். எந்த ஒரு ஆன்மீகத் தலைவரின் முன்னிலையிலும் அவரது சீடர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். நடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த மாமனிதரின் உள்ளம் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருந்தால் அவரால் இவ்வாறு நடந்து கொள்ள முடியும்!
நம்மை விடச் சிறியவர்கள், நமக்குக் கீழே இருப்பவர்கள் நம் முன்னே இப்படி நடந்து கொள்ள நாம் அனுமதிக்க மாட்டோம். அப்படியே நடந்து கொண்டால் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பக்குவமாக நாம் அந்த இடத்திலிருந்து நழுவி விடுவோம்.
சராசரி மனிதர்களாகிய நமக்கே இது மரியாதையைப் பாதிக்கும் செயலாகத் தெரிகிறது. இந்த மாமனிதரோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் சகாக்களை விட்டு நழுவாமல் அங்கேயே இருக்கிறார்கள். அது மட்டுமின்றி மழலைகள் செய்யும் சேட்டைகளைக் கண்டு மகிழும் பெற்றோரைப் போல் தாமும் அந்த மக்களுடன் சேர்ந்து புன்னகை சிந்துகிறார்கள்.
ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்துள்ளது.
ஆன்மீகத் தலைவராகவும், மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உயர் பண்பின் காரணமாகவே மாமனிதர் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.
நாகரீகம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் கூட ஆன்மீகத் தலைவரோ, அரசியல் தலைவரோ, பெரிய தலைவரோ, சிறிய தலைவரோ இவ்வளவு சகஜமாக சாதாரண மக்களுடன் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற நம்பகத் தன்மை நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இஸ்மாயீன் வழித் தோன்றல்களே! அம்பெய்யுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்' என்று கூறினார்கள். மற்றொரு அணியினர் அம்பெய்வதை உடனே நிறுத்திக் கொண்டனர். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 'நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?' என்று அவர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்' என்றார்கள்.
நூல் : புகாரி 2899, 3507, 3373
இரண்டு அணிகள் அம்பெய்து விளையாட்டில் ஈடுபடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம். அவ்வாறு ஒதுங்காமல் அவர்களை ஊக்குவிக்கிறார்கள். தாமும் ஒரு அணியில் சேர்ந்து சாதாரண மனிதர் நிலைக்கு இறங்கி வருகிறார்கள். எதிரணியினரின் மனம் ஒப்பாததன் காரணமாகவே அதிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.
மிக்தாத் (ரலி) என்னும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள்.
நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி 'இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம்' என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின் பங்கை எடுத்து வைத்து விடுவோம்.
அவர்கள் இரவில் வந்து உறங்குபவரை எழுப்பாத வகையிலும், விழித்திருப்பவருக்குக் கேட்கும் வகையிலும் ஸலாம் கூறுவார்கள். பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது விட்டு தமது பங்கை அருந்துவார்கள்.
ஒரு நாள் என்னிடம் ஷைத்தான் வந்து விட்டான். நான் என் பங்கை அருந்தினேன். 'முஹம்மது அவர்கள் அன்ஸார்களிடம் செல்கிறார்கள்; அன்ஸார்கள் நபிகள் நாயகத்தைக் கவனிப்பார்கள்; எனவே இந்த மிடறுகள் அவர்களுக்குத் தேவைப்படாது' என்று எனக்குள் கூறிக் கொண்டு நபிகள் நாயகத்திற்குரிய பங்கையும் அருந்தி விட்டேன்.
அது வயிற்றுக்குள் சென்றதும் தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டேன்.
'நீ என்ன காரியம் செய்து விட்டாய்! முஹம்மது அவர்களின் பங்கை யும் அருந்தி விட்டாயே! அவர்கள் வந்து பார்க்கும் போது தமது பாலைக் காணாவிட்டால் உனக்கு எதிராகப் பிரார்த்தனை செய்து விடுவார்களே! அவ்வாறு பிரார்த்தனை செய்து விட்டால் நீ அழிந்து விடுவாயே! உனது இவ்வுலக வாழ்வும், மறுமை வாழ்வும் நாசமாகி விடுமே' என்று ஷைத்தான் எனக்குள் பலவாறாக எண்ணங்களை ஏற்படுத்தினான்.
என்னிடம் ஒரு போர்வை இருந்தது. அதனால் காலைப் போர்த்தினால் தலை தெரியும். தலையைப் போர்த்தினால் கால் தெரியும். எனக்குத் தூக்கமும் வரவில்லை. எனது இரு நண்பர்களும் நான் செய்த காரியத்தைச் செய்யாததால் தூங்கி விட்டார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். வழக்கம் போல் ஸலாம் கூறினார்கள். பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பின்னர் தமது பானத்தை நோக்கி வந்தார்கள். அதைத் திறந்து பார்த்ததும் அதில் எதையும் காணவில்லை. உடனே தமது தலையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள் 'இப்போது பிரார்த்தனை செய்யப் போகிறார்கள். நான் அழியப் போகிறேன்' என்று நினைத்தேன். அவர்கள் 'இறைவா! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகத் தந்தவருக்கு நீ பருகச் செய்வாயாக!' என்று வழக்கம் போல் பிரார்த்தனை செய்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போர்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு, கத்தியை எடுத்துக் கொண்டு ஆடுகளை நோக்கிச் சென்றேன். அந்த ஆடுகளில் நன்கு கொழுத்ததை அறுத்து நபிகள் நாயகத்திற்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் அந்த ஆடு மடியில் பால் சுரந்து நின்றது. மற்ற ஆடுகளும் மடியில் பால் சுரந்து நின்றன. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நுரை பொங்கும் அளவுக்கு பால் கறந்தேன். அதை நபிகள் நாயகத்திடம் கொண்டு சென்றேன். 'உங்கள் பங்கை நீங்கள் பருகி விட்டீர்களா?' என்று அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்' என்றேன். அவர்கள் அருந்திவிட்டு மீதியைத் தந்தார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்' என்று மீண்டும் கூறினேன். மீண்டும் அருந்திவிட்டு என்னிடம் தந்தார்கள். அவர்களின் பசி அடங்கியது என்பதை அறிந்து கொண்டதும், அவர்களின் பிரார்த்தனைக்குரியவனாக நான் ஆகிவிட்டதை உணர்ந்த போது, நான் விழுந்து விழுந்து சிரித்தேன். நான் கீழே விழுந்து விடுவேனோ என்ற அளவுக்குச் சிரித்தேன். 'மிக்தாதே! ஆடையைச் சரிப்படுத்துவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! இப்படி இப்படி நடந்து விட்டேன்' என்று அவர்களிடம் விளக்கினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ்வின் அருள் தவிர வேறில்லை. இதை முன்பே என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நமது நண்பர்கள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கும் பருகக் கொடுத்திருக்கலாமே' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 3831
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராக இருக்கும் நிலையிலும் ஆட்டில் கறக்கும் பாலே அவர்களின் உணவாக இருந்ததுள்ளது அவர்களின் தூய வாழ்க்கைக்குச் சான்றாகவுள்ளது.
தம்மிடம் வசதி இல்லாத நிலையிலும் மூன்று நபர்களைப் பல நாட்கள் தமது பொறுப்பில் சுமந்து கொண்டது அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்றாகவுள்ளது.
தமது ஆடுகளில் கறந்த பான் ஒரு பகுதியைத் தமக்குத் தராமல் அருந்தியவர்கள் மீது அவர்களுக்குக் கோபமே வரவில்லை என்பது இந்த மாமனிதரின் மகத்தான நற்பண்புகளைக் காட்டுகிறது.
'எனக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தது தான் அவர்களின் அதிகபட்ச கண்டனமாக இருந்தது. நபிகள் நாயகத்திற்கு உணவளித்தால் இறைவன் நமக்கு உணவளிப்பான் என்று ஆர்வமூட்டினார்களே தவிர யார் தனது பங்கை அருந்தியவர் என்று கூட விசாரிக்கவில்லை.
தம்மைப் பட்டினி போட்டவர்களை இவ்வளவு மென்மையாக நல்வழிப்படுத்தியது அவர்களின் மகத்தான நற்குணத்திற்கு மற்றொரு சான்றாகவுள்ளது.
தமக்கு உணவளித்தவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்து விட்டார்கள். எனவே, எப்படியாவது அவர்களுக்கு உணவ ளித்து அவர்களின் பிரார்த்தனையைப் பெற வேண்டும் என்று மிக்தாத் (ரலி) எண்ணி நபிகள் நாயகத்திற்குச் சொந்தமான ஆட்டை அறுக்கத் துணிகிறார். எவ்வளவு இடையூறு செய்தாலும், இழப்பை ஏற்படுத்தி னாலும் நபிகள் நாயகத்திற்குக் கோபமே வராது என்று மற்றவர்கள் நினைக்குமளவுக்கு அவர்களின் பண்பாடு அமைந்துள்ளது.
இரவில் பால் கறந்து விட்டதால் ஆட்டில் மீண்டும் கறக்க முடியாது என்று எண்ணியே அவர் ஆட்டை அறுக்கத் துணிகிறார். ஆனால் அல்லாஹ்வின் அருளால் மூன்று ஆடுகளின் மடிகளிலும் பால் சுரந்திருப்பதைக் கண்டு அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். செய்த தவறையும் செய்து விட்டு அவர்கள் முன்னிலை யில் விழுந்து விழுந்து இந்த நபித் தோழரால் சிரிக்க முடிகிறது. அப்போது கூட இந்த மாமனிதருக்குக் கோபம் வரவில்லை. அவர் சிரிக்கும் போது ஆடை விலகுவதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள்.
வழக்கத்துக்கு மாறாக அல்லாஹ்வின் அருளால் மீண்டும் ஒரு முறை பால் கறக்கப்பட்டு தமக்குத் தரப்படுகிறது என்பதை அறிந்தவுடன் மற்ற இரு நண்பர்களையும் எழுப்பியிருக்கக் கூடாதா? என்று அக்கறையுடன் விசாரித்தது அவர்களின் நற்பண்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்து கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) நடந்து கொண்டது போல் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் கூட நடக்க முடியுமா? என்று கற்பனை செய்து பார்த்தால் தான் இந்த மாமனிதரின் மகத்துவம் நமக்கு விளங்கும்.
யார் என்று தெரியாதவர்களைப் பல நாட்கள் தங்க வைத்து கவனிக்க மாட்டோம். நமது உணவையும் சாப்பிட்டு விட்டு நம்மைப் பட்டினி போட்டால் சும்மா இருக்க மாட்டோம். செய்வதையும் செய்து விட்டு நம் முன்னே சிரித்தால் அதையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடமே காணப்பட முடியாத இந்தப் பண்பாடு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் காணப்படுவதால் தான் உலகம் அவர்களை மாமனிதர் எனப் போற்றுகிறது.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அப்பாஸ் (ரலி) மக்களிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித் தான் இருப்பேன்' எனக் கூறினார்கள்.
நூல் : பஸ்ஸார் 1293
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுடன் கலந்து மக்களில் ஒருவராக இருப்பதை தாமாக வேண்டி விரும்பியே தேர்வு செய்து கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுத்ததால் மக்களால் அவர்களுக்குப் பலவிதக் கஷ்டங்கள் ஏற்பட்டன என்பதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாகத் தங்கும் வகையில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்தால் மக்கள் சகஜமாக அவர்களை நெருங்க முடியாது. இதனால் அவர்களின் சிரமம் குறையும் என அவர்கள் மீது அக்கரை கொண்ட சில நபித்தோழர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், நபிகள் நாயகமோ வேண்டி விரும்பியே இதைத் தேர்வு செய்திருப்பதாகக் கூறி விடுகிறார்கள். பதவியோ, அதிகாரமோ அவர்களை எள்ளளவும் பாதித்து விடவில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு மக்களோடு மக்களாகப் பழகினார்கள் என்றால் குறைந்த பட்சம் தினசரி ஐந்து தடவை யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்தித்து விடலாம் என்ற அளவுக்கு மக்களோடு கலந்திருந்தார்கள்.
இஸ்லாத்தின் முக்கியமான கடமைகளில் ஐந்து நேரத் தொழுகை முதன்மையானது என்பதை அனைவரும் அறிவர். அந்தத் தொழுகையைப் பள்ளிவாசலில் கூட்டாக நிறைவேற்றுமாறு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் தாம் தலைமையேற்று நடத்தி வந்தார்கள். தினமும் பள்ளிவாசலுக்கு ஐந்து தடவை வருவார்கள். தினமும் ஐந்து தடவை மக்களைச் சந்திப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கடைசிக் கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் கூட அவர்களை நூறு தடவைக்குக் குறையாமல் பார்த்திருப்பார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து பத்து ஆண்டுகள் கூட்டுத் தொழுகை நடத்தினார்கள். பத்து ஆண்டுகளும் விடாமல் பள்ளிவாசலுக்கு வந்தவர்கள் நபிகள் நாயகத்தை 18 ஆயிரம் தடவை பார்த்திருக்க முடியும்.
வெளியூர்ப் பயணம் சென்ற காலத்தைக் கழித்தால் கூட பெரும்பாலானவர்கள் பதினைந்தாயிரம் தடவைக்கு மேல் நபிகள் நாயகத்தைப் பார்த்திருக்கிறார்கள்
உலக வரலாற்றில் இவ்வளவு அதிகமான சந்தர்ப்பங்களில் மக் களைச் சந்தித்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.
மாபெரும் ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) பார்வையில் சாமான்யரும், பிரமுகரும் சமமாகவே தென்பட்டனர். அவர் களின் வரலாற்றில் இதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகளைக் காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலையை ஒரு கறுப்பு நிற மனிதர் செய்து வந்தார். அவர் திடீரென இறந்து விட்டார். அவரை அற்பமாகக் கருதிய நபித் தோழர்கள் அவரது மரணத்தை நபிகள் நாயகத்திடம் தெரிவிக்காததால் அவர் இறந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியவில்லை. ஒரு நாள் அவரைப் பற்றி நினைவு வந்து 'அவர் எங்கே?' என விசாரித்தனர். அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 'அப் போதே எனக்கு இதைத் தெரிவித்திருக்க மாட்டீர்களா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். பின்னர் 'அவரது அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்' என்றனர். அவரது அடக்கத் தலத்தைக் காட்டி யதும் அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல் : புகாரி 1337
'இறந்தவர் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவர் என்பதால், இவரைப் போன்ற மதிப்பற்றவர்களின் மரணத்தை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?' என எண்ணி நபித் தோழர்கள் அவரை அடக்கம் செய்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதை ஏற்க முடியவில்லை. 'எனக்கு ஏன் அப்போதே தெரிவிக்கவில்லை?' எனக் கேட்கிறார்கள். அறிவித்திருந்தால் அவரை நல்லடக்கம் செய்யும் பணியில் நானும் ஈடுபட்டிருப்பேனே என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக்காக இவ்வாறு கூறவில்லை. மாறாக அவரை நல்லடக்கம் செய்த இடம் எதுவென விசாரித்து அறிந்து அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்வதைக் காண்கிறோம். அவர்களைப் பொருத்த வரை பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகத் தோன்றியதால் தான் இவ்வாறு அவர்களால் நடந்து கொள்ள முடிந்தது.
அனஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் பணியாளராக இருந்தார். அவரது பாட்டி முளைக்கா (ரலி) தமது இல்லத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினார். அங்கே சென்று அவர் அளித்த விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கொண்டார்கள். முளைக்கா (ரலி) வசதி படைத்தவர் அல்லர். சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவரும் அல்லர். மிக மிகச் சாதாரண நிலையில் உள்ளவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே தொழுதார்கள். தொழுவதற்குத் தகுதியான பாய் கூட அவ்வீட்டில் இருக்கவில்லை. நீண்ட நாட்கள் பயன் படுத்தியதால் கறுப்பு நிறமாக மாறிவிட்ட பாய் தான் அங்கே இருந்தது. அதில் தான் தொழுதார்கள்.
நூல் : புகாரி 380, 860
பாய் கூட இல்லாத அளவுக்குப் பரம ஏழை தான் முளைக்கா (ரலி). அவர் அளித்த விருந்து எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை இதிலிருந்து ஊகிக்கலாம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட ஒதுக்கித் தள்ளும் நிலையில் இருந்த ஏழைக் குடிசையின் விருந்தை ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுள்ளனர். அவர்கள் எல்லா மனிதர்களின் உணர்வுகளையும் மதிப்பவர்களாக இருந்தார்கள். சாதாரண மனிதனும் கூட தன்னை விட அற்பமானவர்களை ஒதுக்கித் தள்ளுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போது மிக உயர்ந்த நிலையில் இருந்த இந்த மாமனிதர் இதிலும் வெற்றி பெறுகிறார்கள்.
ஆன்மீகத் தலைவர்களானாலும், அரசியல் தலைவர்களானாலும், அதிகாரம் படைத்தோராக இருந்தாலும் பிரமுகர்களையும், சாமானியர்களையும் பாரபட்சமாக நடத்துவதைக் காண்கிறோம்.
அதிகாரம் படைத்தோர், அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றாலும், 'நாங்கள் பக்குவம் பெற்ற வர்கள், துறந்தவர்கள்' என்றெல்லாம் அவர்கள் தம்மைப் பற்றி கூறிக் கொள்வதில்லை. எனவே அவர்கள் சாமான்யர்களையும், பிரமுகர் களையும் பாரபட்சமாக நடத்துவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
'மற்ற மனிதர்களை விட தாங்கள் பண்பட்டவர்கள்; பக்குவம் அடைந்தவர்கள்' என்று ஆன்மீகத் தலைவர்கள் தம்மைப் பற்றி அறிவித்துக் கொள்கிறார்கள். இது உண்மை என்றால் அவர்களின் பார்வையில் பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகவே தென்பட வேண்டும்.
ஆனால் இவ்வாறு பாரபட்சம் காட்டுவதில் ஆன்மீகத் தலைவர் என்று தம்மைக் கூறிக் கொள்வோர், மற்றவர்களை விட மிஞ்சி நிற்பதை நாம் சர்வ சாதாரணமாகக் காணலாம்.
அவர்களின் கதவுகள் அதிபர்களுக்கும், அமைச்சர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும், புகழ் பெற்றவர்களுக்கும் தான் திறக்கப்படுகின்றன. மற்ற சாமான்யர்களுக்குக் கூட்டத்தோடு கூட்டமாக தர்ம தரிசனம் தான் கிடைக்கின்றது.
அது போல ஆன்மீகத் தலைவர்கள் எத்தகைய மக்களைத் தேடிச் செல்கிறார்கள்? கோடீஸ்வரர்களைத் தேடிச் செல்கிறார்கள். அவர்களது வணிக நிறுவனங்கள், இல்லங்களைத் திறந்து வைக்கச் செல்கிறார்கள். பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதற்காக அல்லாமல் இவர்கள் எந்தக் குடிசையிலும் கால் வைத்திருக்க மாட்டார்கள்.
இவ்வளவு எளிமையாகவும், பணிவாகவும் நடந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையறியாமல், தம் கவனத்துக்கு வராமல் தம்மால் மக்களுக்கு ஏதும் இடையூறு ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சுகிறார்கள்.
மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அவர்கள் நோய் வாய்ப்பட்ட போது இது பற்றி மக்களுக்கு அவர்கள் செய்த பிரகடனம் அவர் களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டதாகும்.
அந்த நிகழ்ச்சியை ஃபழ்லு என்பார் பின் வருமாறு விவரிக்கிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்களுக்கருகில் கட்டுப் போடுவதற்குரிய சிவப்புத் துணி இருந்தது. 'என் பெரிய தந்தை மகனே! இதை என் தலையில் கட்டுவீராக' என்றார்கள். அதை எடுத்து அவர்களின் தலையில் கட்டினேன். பின்னர் என் மீது அவர்கள் சாய்ந்து கொள்ள நாங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். (நபிகள் நாயகம் (ஸல்) மரணப் படுக்கையில் இருந்ததால் மக்கள் பெருமளவு அங்கே குழுமி யிருந்தனர்.) 'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.
மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்
இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள்.
நூல் : முஸ்னத் அபீ யஃலா 6824
இப்படிச் சொல்லக் கூடிய துணிவு இன்றைய உலகில் ஒருவருக்கும் கிடையாது. என்னிடம் யார் கணக்குத் தீர்க்கிறாரோ அவர் தான் மற்றவர்களை விட எனக்கு நெருக்கமானவர் என்று இன்றைக்கு எவரேனும் கூற முடியுமா?
இந்த மாமனிதருக்குத் தான் இவ்வாறு பிரகடனம் செய்ய முடிகின்றது
இவ்வளவு தெளிவாகப் பிரகடனம் செய்த பிறகும், மக்களுக்கு இருந்த தயக்கம் முழுவதையும் நீக்கிய பிறகும் 'என்னை அடித்தீர்கள்; ஏசினீர்கள்' என்றெல்லாம் ஒருவர் கூடக் கூறவில்லை. பொது நன்மைக்காக வாங்கிய கடனை அவர்கள் மறந்து விட்டார்கள். அது மட்டுமே முறையிடப்பட்டது. இம்மாமனிதரால் எந்த மனிதருக்கும் முடியளவு கூட பாதிப்பு ஏற்படவே இல்லை.
இந்த நூல் நெடுகிலும் நபித் தோழர்கள் என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சமுதாயத்தில் சில பேர் நபிகள் நாயகத்துக்குத் தோழராக இருந்திருப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். நபிகள் நாயகத்தின் மார்க்கத்தை ஏற்று அவர்கள் அணியில் சேர்ந்த ஒவ்வொருவரும் தமது தோழர்கள் என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள். எந்த மன்னரும் தனது குடிமக்கள் அனைவரும் தனது நண்பர்கள் என அறிவித்ததில்லை. தொண்டர்கள் என்று தான் அறிவித்திருக்கிறார்கள்.
எந்த ஆன்மீகத் தலைவரும் தன்னை ஏற்றுக் கொண்டவர்களை தோழர்கள் என அறிவித்தது கிடையாது. மாறாக அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் சீடர்கள் என்றே அறிவிக்கப்படுகின்றனர்.
தொண்டர்களும் சீடர்களும் இல்லாத அனைவரையும் தோழர் என அழைத்த ஒரே தலைவரும் ஒரே மன்னரும் ஒரே ஆன்மீகத் தலைவரும் நபிகள் நயாகம் மட்டுமே.
இதனால் தான் நபிகள் நாயகத்தின் காலத்தில் அவர்களை ஏற்ற அனைவரையும் முஸ்லிம்கள் இன்றளவும் தோழர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு அறிவித்து தம்மை மற்றவர்களுக்குச் சமமாகக் கருதி அதைப் பிரகடனம் செய்தவர் புகழுக்காகவோ மக்களின் செல்வாக்குப் பெறவோ பதவியை ஏற்றிருக்க இயலுமா?
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல் தம்மை வரம்பு மீறிப் புகழக் கூடாது எனத் தெளிவான கட்டளையும் பிறப்பித்திருந்தார்கள்.
தம்மை வரம்பு மீறிப் புகழக் கூடாது என்று கடுமையான முறையில் எச்சரிக்கையும் செய்திருந்தார்கள்.
எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.
நூல் : அஹ்மத் 12093
இதே கருத்து அஹ்மத் 15726, 15717 ஆகிய ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.
'கிறித்தவ சமுதாயத்தினர் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடியானே. எனவே அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனது தூதர் என்றும் என்னைப் பற்றிக் கூறுங்கள்' என்று மேடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.
நூல் : புகாரி: 3445
தம்மை எல்லை மீறிப் புகழக் கூடாது என்று மக்கள் மன்றத்தில் கடுமையாக எச்சரிக்கை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியின் மூலம் புகழடைய விரும்பியிருப்பார்கள் என்று கருத இயலுமா?