வெற்றி பெற்றோர் யார்?
கடமையான காரியங்களைச் சரியாக நிறைவேற்றுவோர்
நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவர் பரட்டைத் தலையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்'' என்றார்கள். உடனே அவர், ''அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?'' என்று கேட்டார். அதற்கவர்கள், ''நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு எதுவும் இல்லை'' என்றார்கள். ''அடுத்து ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் ''அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) கடமையுண்டா?'' என்றார். அதற்கவர்கள், ''நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை'' என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பற்றியும் சொன்னார்கள். அதற்கவர், ''அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?'' என்றார். அதற்கவர்கள் ''நீராக விரும்பிச் செய்தாலேத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை'' என்றார்கள். உடனே அந்த மனிதர், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன்'' என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது, ''இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி), நூல்: புகாரீ 46
''ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். (நற்காரியங்களில் கொள்ளும்) அனைத்து ஆர்வத்திற்கும் ஒரு வரையறை உள்ளது. யாருடைய வரையறை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ அவர் வெற்றி பெற்று விட்டார். எவருடைய வரையறை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ அவர் அழிந்து விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: அஹ்மத் (6664)
(திருக்குர்ஆன், நபிகளார் காட்டித்தராத) ஒவ்வொரு புதிய காரியங்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பர்: ஜாபிர் நூல்: நஸயீ 1560
உறுதியாக இருங்கள். வெற்றியடைவீர்கள். உங்களுடைய நற்காரியங்களில் சிறந்தது தொழுகையாகும். நம்பிக்கைக் கொண்டவனைத் தவிர வேறு எவரும் உளூவைப் பேண மாட்டார்கள். அறிவிப்பாளர்: சவ்பான் நூல்: அஹ்மத் 21380
தொழுகையைப் பேணியவர்
அடியானிடம் முதலில் விசாரிக்கப்படுவது அவனது தொழுகையைப் பற்றித் தான். அத்தொழுகை சரியாக அமைந்திருந் தால் அவன் வெற்றி பெறுவான். ஈடேற்றம் அடைந்து விடுவான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான். கைசேதப்படுவான்.
அபூஹுரைரா (ரலி) நூல்: நஸயீ 461, திர்மிதீ 378
மனத்தூய்மையுடன் நல்லறங்கள் புரிந்தவர்
உயிரின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நஷ்டப்பட்டார். (அல்குர்ஆன் 91:7லி10).
அல்லாஹ் நிறத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மனிதர்களை நேசிப்பதில்லை. உள்ளத்தையே பார்க்கின்றான். பார்ப்பதற்கு அருவருப்பான, கருப்பு நிறத்தில் உள்ள ஒரு நீக்ரோவின் உள்ளம் சரியானதாக இருக்கின்றது. அதே சமயம் ஆப்பிள் பழத்தைப் போன்று சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக உள்ள ஒருவனின் உள்ளம் மோசமானதாக இருந்தால் இவ்விருவரில் சிவப்பானவரை விட நீக்ரோவே அல்லாஹ்விடம் மதிப்பிற் குரியவராகவும் சிறப்பிற்குரியவராகவும் ஆகின்றார்.
இதற்கு உதாரணமாக அபூஜஹ்லையும் பிலால் (ரலி) அவர்களையும் குறிப்பிடலாம். அபூஜஹ்ல் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய தலைவன். ஆனால் அவன் எண்ணங்களும், செயல்களும் சரியில்லை. ஆனால் நீக்ரோவாக இருந்த பிலால் (ரலி) அவர்களின் உள்ளமும் செயல்களும் சிறந்ததாக இருந்தது. எனவே அவர்களை சுவர்க்கவாதி என்று இந்த உலகத்திலேயே நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
(புகாரீ 1149)
யார் தனது உள்ளத்தை ஈமானுக்காகத் தூய்மையாக்கி, மேலும் தன் உள்ளத்தை தவறுகளிலிருந்து பாதுகாப்பாக்கி (ஈமானில்) மன நிறைவு பெற்றதாக்கி தனது நாவை உண்மை பேசக் கூடியதாகவும் தனது சரீரத்தை சீரானதாகவும் தனது செவிப்புலனை (நல்லவற்றை) கேட்கக் கூடியதாகவும் தனது கண்ணை (நல்லவற்றை) காணக் கூடியதாகவும் ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார்.
அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர. தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 23:1லி11)