பார்வையைப் பாதுகாப்போம்
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
(அல் குர்ஆன் 24:30, 31)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6243
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இளைஞர்களே! உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி 1905
வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்துதல்
''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ''அப்படி நீங்கள் அந்தச் சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் ''பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: புகாரி 2465
மற்றொரு அறிவிப்பில் ''அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி), நூல் முஸ்லிம் 4365
அந்நியப் பெண்களை விட்டும் பார்வையைத் திருப்புதல்
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல் குர்ஆன் 24:30, 31)
பர்தாவைப் பேணாத பெண்கள் முன்னிலையில் நாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது போன்று தனிமையில் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்: திர்மிதி 2700
(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது, ''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபியவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1513
(இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''ஒரு இளைஞனையும், இளம் பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள் என்று தப்ரியின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. (ஃபத்துஹுல் பாரீ)
இறைவனை அஞ்சி வாழ்தல்
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
அல்குர்ஆன் 17:36
அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். ''எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். ''ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!'' என்று அவை கூறும்
. (அல் குர்ஆன் 41:30)
கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான். (அல் குர்ஆன் 40:19)
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 6:103)