அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி மிக்க வாழ்க்கையைப் பற்றி நாம் எல்லாம் பல சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட மிக முக்கியமான மூன்று விசயங்களைப் பற்றி நான் இப்போது உங்களுக்கு எடுத்துக் காட்டப் போகின்றேன். உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் “முகம்மத் (ஸல்)” அவர்கள் உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்?
புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் (ஸல்) அவர்கள் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார்.
வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம் மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.
மேற்கூறிய அறிக்கைகளை மீண்டும் ஒருமுறை நன்றாக படியுங்கள். அதுவே போதுமானதாக இருக்கலாம் எம்பெமானார் (ஸல்) அவர்கள் நிச்சயமாக உலக மானிட சமுதாயத்தின் தன்னிகரற்ற முன்மாதிரி என்ற உண்மையினை. போர்களும், குழப்பங்களும், ஆதிக்கமும், இனவெறியும், அரச பயங்கரவாதங்களூம் மேலோங்கியிருக்கும் தற்போதைய உலகில் மனிதன் தேடும் அன்பு, பண்பு, பாசம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, நீதி, நேர்மை ஆகியவற்றினை நபிகள் நாயகம் அவர்களின் அற்புதமான வாழ்விருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
உலகில் உள்ள அனைத்து துறைகளுக்குமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் முன்மாதிரி என்பதற்கு பல விசயங்களை வரலாற்றில் நாம் காணலாம்.
சிறப்பான ஆட்சியாளராகவும் அதில் எளிமையான நடைமுறைகளையும் அவர்கள் கையாண்டார்கள்.
ஆடம்பர மாளிகை, சொகுசான வாகனம், ஆயிரக்கணக்கான உதவியாளர்கள், பல்லாயிரன கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்பு, விலை உயர்ந்த ஆடைகள் இவையே ஆட்சியாளர்களின் அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் இந்த விசயங்களை அவர்களின் வாழ்க்கையில் நாம் என்றைக்கும் காணவில்லை.
இவை எவற்றையுமே எதிர்ப்பார்க்காத, ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆட்சியாளர்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். வறுமையில் வாடும் சிறிய நாட்டின் ஆட்சியாளர்கள் கூட இதையே கௌரவமாக கடைபிடித்த போதும், கடைபிடிக்கும் போதும் வளம் கொழிக்கும் மிக பெரிய அரேபிய சாம்ராஜ்யத்தின் தன்னிகரற்ற ஆட்சியாளராக திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திலும், எச்சூழ்நிலையிலும் ஆடம்பரத்தினையும், வீண்விரயத்தினையும் துளியும் விரும்பவில்லை. மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்காகவே செலவிட்டார்கள். தற்போதைய உலகம் சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் (என்ற மாயையை) எதிர்கொள்ள ஆட்சியாளர்கள் சிக்கன நடவடிக்கையை கையாள வேண்டும் என்று தற்போதுதான் உலகம் ஒப்பாரி வைக்கிறது. ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்விஷயத்திலும் ஒரு முன்மாதியாக அன்றே வாழ்ந்துக்காட்டினார்கள். ஆடம்பரம் என்ற சுவடே தெரியாமல் சிறப்பான முறையில் நிர்வாகம் புரிந்தார்கள். அவர்கள் ஆட்சியில் காலத்தில் அவர்கள் சம்பாதித்தவை லட்சக்கண்க்கான மக்களின் உல்லங்களை மட்டுமே.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.) நூல்: புகாரி
தற்போதைய ஆட்சியாளர்களைப் போய் சந்திப்பது பற்றி கற்பனைதான் செய்ய முடியும். ஒரு சாதாரன குடிமகனும் வளமிக்க சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியான முஹம்மது நபி(ஸல்) அவர்களை எளிதில் சந்திக்க முடியும் என்றளவிற்கு எளிமையாக வாழ்ந்துக்காட்டினார்கள்.
(குறிப்பு: கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக "இஸ்லாம் என் பார்வையில்" என்ற தலைப்பில் ஜூன் - 2013 ல் நடைபெற்ற பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற சகோதரர் சந்திர போஸ் அவர்களின் கட்டுரை. பரிசளிப்பு நிகழ்ச்சியை காண... )