திங்கள், 1 அக்டோபர், 2012

யார் இவர்? - மாமனிதர் நபிகள் நாயகம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

  • உலக மக்களின் 4ல் ஒருவர் இவரை தங்களின் உயிரின் மேலாக மதிக்கின்றனர்.
  • சுமார் 200 கோடி மக்கள் தங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும், இவரிடமே தீர்வை எதிர்பார்க்கின்றனர்.
யார் இவர்?

1484 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டின் மக்கா நகரில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் கருணை அவர்கள் மீது உண்டாகட்டும்) பிறந்தார்கள்.

அவர்கள் தமது 25ஆம் வயதில் வணிகராகவும், நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில் தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர்.

எனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம். இருக்கின்ற செல்வத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.

ஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத் தூதர் என்று கூறுவதையும் தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.

அந்தச் சமுதாயம் இதைத் தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை அறியலாம்.

பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்த ஒருவர், இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன்வர மாட்டார்.

ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓர் ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்குத் திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.
  • இந்த நிலையிலும் அவர்கள் தமக்காகச் செல்வம் திரட்டவில்லை. அரண்மனையில் வசிக்கவில்லை.
  • கடைசிவரை குடிசையிலே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.
  • அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிட்டதில்லை.
  • ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வதற்காக தைக்கப் பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.
  • வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர் கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.
  • தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள்.
  • ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்; தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவதற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார்கள்.

மக்களிடம் புகழ், மரியாதை அடைவதற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும்.

புகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார்.
  • கடவுள் முன்னால் நிறுத்தப்படும் போது வெற்றி பெறுவேனா என்பது எனக்குத் தெரியாது.’’
  • ‘‘என்னிடம் கடவுளின் பொக்கிஷங்கள் இல்லை; மறைவானது எனக்கு தெரியாது’’
  • ‘‘தப்புச் செய்தால் நானும் கடவுளிடம் தப்பிக்க முடியாது’’
  • ‘‘நானும் உங்களைப் போன்ற மனிதனே’’

என்றெல்லாம் மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறது.

‘‘நீர் எனக்கு அஞ்சாமல் மனிதருக்கு ஏன் அஞ்சுகிறீர்?’’ என்று நபிகள் நாயகத்தை இறைவன் கண்டிக்கும் வசனங்களும் குர்ஆனில் உள்ளன.

கண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் கடிந்து கொண்ட போது - அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் - அதை இறைவன் கண்டித்த வசனங்களும் குர்ஆனில் உள்ளன.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் நமது மரியாதை குறைவதை ஜீரணிக்க மாட்டோம். நபிகள் நாயகம் அவர்களோ தம்மைக் கண்டித்து தமது மதிப்பைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறை வார்த்தை என்று அறிவித்தார்கள்.

தம்மைக் கடவுள் என்று நபிகள் நாயகம் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் மீது மக்களில் சிலர் அன்பு வைத்திருந்தனர். அப்படியிருந்தும் நபியவர்கள் தம்மை, மற்றவர்களைப் போன்ற மனிதராகவே பிரகடனம் செய்தார்கள்.

இந்த விவரங்கள் யாவும் இறைச்செய்தி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலே காணப்படுகின்றன.

தம்மைக் கண்டிக்கின்ற தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் கற்பனையாக இருக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
  • அவர்களுக்குப் பல்லக்கு இருக்கவில்லை!
  • அவர்களுக்கு வாயிற்காப்போன் இருக்கவில்லை!
  • காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை!
  • ‘‘இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்’’ என்று எச்சரித்தார்கள்!

மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர்கள் விரும்பவில்லை. மக்களிடம் பெற்றதுமில்லை.

உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இவர் தீர்வு வழங்கியுள்ளார். அதனால் தான் பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார்: ‘‘முஹம்மது நபி இந்த உலகின் அதிபராக பொறுப்பேற்றால் இன்றைய பிரச்சனைகள் அனைத்தையும் விரைவாகவும் சிறப்பாகவும் தீர்த்துவிடுவார்."

வெளியீடு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

மேலும் படிக்க...