வியாழன், 26 ஏப்ரல், 2012

"திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?"

இறைவனின் திருப்பெயரால்...

''என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வைத்து விடுங்கள்'“ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 3461)


திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?

அல்லாஹ்வின் சட்டங்களையும் அவனது தூதர் காட்டித் தந்த வழிமுறைகளையும் முழுமையாக ஏற்று, பின்பற்றி நடப்பவரே உண்மையான தவ்ஹீத்வாதி. ஆனால் இன்று தவ்ஹீத்வாதி என்று சொல்பவர்கள் எல்லா விஷயங்களிலும் நபிவழியைப் பின்பற்றினாலும் திருணம் என்று வந்து விட்டால், நபிவழி எந்த ஊருக்கு விடுமுறையில் போய் விடுகிறது என்று நமக்குத் தெரிவதில்லை.

பெண் பார்த்தல்

தன்னை தவ்ஹீத்வாதி என்று கூறிக் கொள்ளும் அரைகுறைகள், அல்லாஹ்வும் அவன் தூதரும் சொன்னபடி பெண் பார்க்கிறார்களா?

மார்க்கம் தெரிந்த பெண்ணையோ அல்லது மார்க்கம் படித்து அதன்படி செயல்படும் பெண்ணையோ திருமணம் முடிக்காமல் சிவந்த பெண்ணா? பணம் நிறைந்த பெண்ணா? என்று மட்டும் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள்.

அழகுள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படலாம். ஆனால் அழகு மட்டுமே வேண்டும் என்று நிற்கலாமா? இப்படி சிவப்பு நிற பெண்களே வேண்டும் என்றிருந்தால் கறுப்பு நிறப் பெண்களை எந்த கிரகத்து ஆண்கள் மண முடிப்பார்கள்?

அழகு மட்டுமே வேண்டும் என்றால் மார்க்கம் வேண்டாமா? தீனைப் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? ஒழுக்கம் இருக்க வேண்டாமா? இதையெல்லாம் மார்க்கம் வலியுறுத்தவில்லையா? அல்லது நபிமொழி நூல்களில் இந்த விவரங்கள் இடம் பெறவில்லையா?

அழகுக்காக இணை வைக்கும் பெண்ணை தேர்வுசெய்தல்

பெண்ணைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியது, முதலில் அந்தப் பெண் ஓரிறைக் கொள்கையில் பிடிப்புள்ளவளாக இணை வைப்புச் செயலிருந்து விலகியவளாக இருக்க வேண்டும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)

இணை வைக்கும் பெண்கள் எவ்வளவு அழகுள்ளவளாக இருந்தாலும், அறிவுள்ளவளாக இருந்தாலும், அந்தப் பெண்ணை கண்டிப்பாகத் திருமணம் முடிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் தெளிவான கட்டளையிடுகிறது.

ஆனால் பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக இணை வைக்கும் பெண்களை திருமணம் புரிந்ததாகக் கூறும் இந்த அரைகுறை தவ்ஹீத்வாதிகள், பெற்றோர்கள் சொல்லும் எல்லா விஷயத்திலும் பின்பற்றி நடக்கிறார்களா? தர்ஹாவிற்குப் போக வேண்டும் என்று சொன்னாலும் சென்று விடுவார்களா? அதற்கும் பெற்றோர்களைக் காரணம் காட்டுவார்களா?

ஆடத் தெரியாமல் ஆடிவிட்டு, தெருக் கோணல் என்று சொல்வார்களே அதைப் போன்று கொள்கையில் உறுதியில்லாமல் பெற்றோர்கள் மீது பழியை போடுகிறார்கள்.

ஒரு பேச்சுக்கு இவ்வாறு பெற்றோர்கள் கட்டளையிட்டாலும் நாம் அதை ஏற்று நடக்க வேண்டும் என்றா திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது?

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன் 29:8)

''அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்'' (புகாரி 7257)

இதுபோன்ற நபிமொழிகள் அரைகுறை தவ்ஹீத்வாதிகளின் காதுகளில் விழுவதில்லையே! ஏன்?

மார்க்கமுள்ள பெண்ணைத் தேர்வு செய்!

ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் பெண்ணாகவும் நபிமொழியை அறிந்தவளாகவும் தொழுகையைப் பேணுபவளாகவும் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முன்னுரிமை வழங்குபவளாகவும் உள்ள பெண்ணைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு முதலிடம் கொடுத்து தவ்ஹீத்வாதிகள் பெண்ணைத் தேர்வு செய்துள்ளார்களா?

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (5090)

நபிகளார் எதற்கு முதலிடம் கொடுக்கச் சொன்னார்களோ, அதற்கு முதலிடம் கொடுக்காமல் மற்ற மூன்று விஷயங்களுக்கு அரைகுறை தவ்ஹீத்வாதிகள் முதலிடம் கொடுக்கிறார்கள்.

உண்மையில் இந்த நபிமொழியைப் பின்பற்றியிருந்தால் தவ்ஹீத் கொள்கையில் பிடிப்புள்ள எத்தனையோ ஏழைப் பெண்களுக்குத் திருமணம் நடந்திருக்கும். ஆனால் அழகுக்கும் பணத்திற்கும் முதலிடம் கொடுப்பதால் கொள்கைப் பிடிப்புள்ள ஏழைப் பெண்கள் இன்று திருமணமாகாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இணை வைக்கும் பெண்களைத் திருத்தி விடலாமா?

அழகுக்காகவும் பணத்திற்காகவும் இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்யும் அரைகுறை தவ்ஹீத்வாதிகளிடம், ஏன் இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்கிறீர்கள்? என்று கேட்டால் அதற்கு இன்னொரு காரணத்தைக் கூறுகிறார்கள். அந்த பெண்களை திருமணத்திற்குப் பிறகு திருத்தி விடலாமாம்.

திருத்திவிடலாம் என்றிருந்தால் இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யாதே என்று ஏன் அல்லாஹ் கூற வேண்டும்? திருத்த முடியும் என்றால், 'இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்பவர்கள் அவர்களைத் திருத்தட்டும்' என்று கூறியிருக்கலாமே? அல்லாஹ்விற்குத் தெரியாதது இந்த அரைகுறை தவ்ஹீத்வாதிகளுக்குத் தெரிந்துவிட்டதா?

திருத்தி விடுவோம் என்று கூறுகிறார்களே! திருந்தி விடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது இவர்களிடத்தில்?

நூஹ் நபி, லூத் நபி ஆகியோர் தங்கள் மனைவியிடத்தில் செய்யாத அறிவுரையா? அவர்கள் என்ன திருந்தி விட்டார்களா? இவர்களைப் போன்று உங்கள் மனைவி இருந்து விட்டால் என்ன செய்வீர்கள்? தங்களையும் சேர்த்துத் திருத்தும் வண்ணம் உள்ள கொள்கை பிடிப்புள்ள பெண்ணையல்லவா தவ்ஹீத்வாதிகள் தேர்வு செய்திருக்க வேண்டும்?

(இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்த போது) அபூதல்ஹா (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை (மிகவும் விரும்பி) பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ''அபூதல்ஹா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் (பெண் கேட்டால்) மறுக்கப்படாது. (அவ்வளவு சிறந்வர்கள் நீங்கள்) ஆனால் நீங்கள் ஓரிறைக் கொள்கையை மறுப்பவராக இருக்கிறீர்கள். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். உங்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே எனது மஹராகும். இதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன்'' என்று கூறினார்கள். அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அதுவே அவர்களுடைய மஹராக ஆனது. (நூல்: நஸயீ 3289)

ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பு கொடுத்து ஒரு சிறந்த நபித்தோழரை இஸ்லாத்திற்குக் கொண்டு வந்த உம்மு ஸுலைம் போன்ற பெண்ணைத் தேர்வு செய்ய ஏன் தவ்ஹீத்வாதிகளுக்கு மனம் வருவதில்லை?

நிறத்தால், பணத்தால் புறக்கணிக்கப்படும் பெண்களை மார்க்கத்தை மட்டும் பார்த்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட தவ்ஹீத்வாதிகள் முன்வருவார்களா?

அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமான தோற்றத்துடன் இருப்பார்கள்.

"(இது பற்றிய) எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்படவில்லையா? அதை நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டு இருக்கவில்லையா?" என்று கூறப்படும்
.
"எங்கள் இறைவா! எங்கள் துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழி தவறிய கூட்டமாக இருந்தோம்" என்று கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்" என்றும் கூறுவார்கள்.

"இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!" என்று அவன் கூறுவான்." (23:104-108)