செவ்வாய், 15 நவம்பர், 2011

கத்தரில் 11-11-2011 அன்று நடைபெற்ற "மாபெரும் இரத்ததான முகாம்"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

 
தியாக திருநாளை முன்னிட்டு கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும், ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷனும் இணைந்து 11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது.

ஜும்மா தொழுகைக்குப்பின் மதியம் 2 மணி முதல் நடைபெறுவதாக அறிவித்திருந்த போதிலும், மதியம் 1 மணியிலிருந்தே சகோதரர்கள் ஆர்வத்துடன் வந்து காத்திருந்தார்கள். தோஹா QITC மர்கஸில் இரவு 10 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் பங்கு கொண்ட 137 பேரில் 91 சகோதரரர்கள் தகுதி பெற்று இரத்த தானம் கொடுத்தார்கள். 6 சகோதரிகள் உட்பட 46 பேர் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் தகுதி பெறாததால் இரத்த தானம் கொடுக்க முடியாமல் போனது.

முதலில் ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷன் குழுவின் பொறுப்பாளர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள்  80 பேருக்கு மட்டுமே இரத்தம் சேமிக்க வசதியுள்ளதாக கூறினார். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததனால், கூடுதல் ஏற்பாடுகள் செய்யுமாறு QITC சார்பாக மண்டல தலைவர் Dr.அஹமத் இப்ராஹீம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதனடிப்படையில் கடைசியாக காத்திருந்தவர்களுக்கும் முதல்கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, கூடுதலாக இரத்தம் சேமிக்க தேவைப்படும் உபகரணங்கள் வரவழைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொண்ட அனைவருக்கும் எல்லாம்வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

"ஒரு மனிதரை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - திருக்குர்ஆன் 5:32

அல்ஹம்துலில்லாஹ்.