பயங்கரவாதிகளை அத்வானி ஒப்படைப்பாரா ?
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள்? தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா? கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா? முப்படைகளையும் வழி நடத்துவார்களா? ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும் சேனல்களால் செய்யவைக்க முடிந்தால் அதுவே பெரிய சாதனை தான். தாஜ், ஓபராய் ஓட்டல்கள் இருக்கும் தென் மும்பை மக்களவைத் தொகுதியில் சென்ற தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களைப் போல இரு மடங்கு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டே போடவில்லை! பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம். இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும். ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள். ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா? காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும். பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது. ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன? உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா? இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள். காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது. காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம். பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான். பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது. சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று நிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான். இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை. தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை. பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய மோசமான சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல. ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள். இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும். பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான். அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும். தன் மதவாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா?
ஞானி யின் ஓ பக்கங்கள்