சனி, 2 ஏப்ரல், 2016

நபிகள் நாயகத்தின் எளிமையான வாழ்க்கை


சொத்தும் சேர்க்கவில்லை சொகுசாகவும் வாழவில்லை

இவ்வளவு மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பொருள் திரட்டினார்களா? தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்களா? சொத்துக்களை வாங்கிக் குவித்தார்களா? அறுசுவை உண்டிகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்களா?

இதை முதலில் நாம் ஆராய்வோம்.

ஏனெனில் அரசியலோ, ஆன்மீகத்திலோ தலைமைத்துவத்தைப் பெற்றவர்கள் அந்தத் தலைமையைப் பயன்படுத்தி இப்படித் தான் நடந்து கொள்கின்றனர்.

ஒரு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றவர் சில மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்து விட்டு பதவி இழந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்பதவியைப் பெறுவதற்கு முன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாரோ, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தனவோ அதே அளவு தான் இப்போதும் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவர் பதவி வகித்த சில மாதங்களிலேயே பல மடங்கு சொத்துக்களைக் குவித்திருப்பார்.

இவ்வாறு சொத்துக்கள் குவிப்பதற்கு பிரதமர் பதவி கூடத் தேவையில்லை. பிரதமரை விட அதிகாரம் குறைந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட சொகுசான வாழ்க்கை வாழ்ந்து, தமது பெயரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களைக் குவித்துக் கொள்வதை நாம் காண்கிறோம்.

இதை விடக் குறைந்த அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் கூட அதிகாரத்தைத் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம்.

இவர்கள் இப்பதவிகளைப் பெறுவதற்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ, அதை விடப் பல்லாயிரம் மடங்கு வசதிகள் உடையவர்களாக மாறி விடுகிறார்கள்.

இதை ஒப்புக்கொள்வதற்கு வரலாற்று அறிவோ, ஆதாரமோ தேவையில்லை. நமது கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவரும் இதற்கு நிதர்சனமான உதாரணமாகத் திகழ்கிறார்கள்.

எந்த ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் 'நான் ஊழல் செய்யவில்லை' என்று அவர் மறுத்ததில்லை. 'நீ ஊழல் செய்யவில்லையா?' என்று குற்றம் சாட்டியவரையே திருப்பிக் கேட்பது தான் அவரது பதிலாகவுள்ளது.

கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளும், தண்டிப்பதற்குச் சட்டமும், நீதிமன்றங்களும், அம்பலப்படுத்திட செய்தி ஊடகங்களும் உள்ள இந்தக் காலத்திலேயே இப்படியென்றால், இத்தகைய இடையூறுகள் இல்லாத காலத்தில் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்?

இதற்கு வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவர்கள் களியாட்டம் போட்ட அரண்மனைகளும், கோட்டை கொத்தளங்களும், அந்தப்புரங்களும், ஆடம்பரப் பொருட்களும் இன்றளவும் இதற்குச் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

அமரும் ஆசனத்தைக் கூட தங்கத்தில் அமைத்துக் கொண்டவர்கள், காதக்காக மக்கள் வரிப் பணத்தில் காதல் மாளிகை எழுப்பியவர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற கேள்வி கேட்பாரற்ற காலத்தில் தான் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்தனர். அவர்களைச் சுற்றிலும் கைசர், கிஸ்ரா, ஹெர்குஸ் போன்ற பெரிய மன்னர்களும், சிற்றரசர்களும் ஆட்சி புரிந்தார்கள். அவர்களைப் போல் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்திருந்தால் யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்!

தலைமைப் பதவியைப் பெற்ற ஒருவர்

வகை வகையாக உண்டு, உடுத்தியிருக்கிறாரா?

பல வகையான பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறாரா?

ஆடம்பரப் பொருட்களைக் குவித்திருக்கிறாரா?

அண்ணாந்து பார்க்கும் மாளிகைகளைக் கட்டினாரா?

ஊரை வளைத்துப் போட்டாரா?

தனது வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்துச் சென்றிருக்கிறாரா?

என்ற கேள்விகளுக்கு இல்லை என்று விடை அளிக்க முடிந்தால் தான் 'அவர் பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை' என்று கூற முடியும். மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் நபிகள் நாயகத்தைப் பொருத்தவரை 'இல்லை' என்று தான் வரலாறு விடை கூறுகிறது.

உண்டு சுகிக்கவில்லை

மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம்.

'மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை' என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

'எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) 'பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்' என விடையளித்தார்.

அறிவிப்பவர் : உர்வா

நூல் : புகாரி 2567, 6459

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) இடம் கேட்டேன். அதற்கு அவர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை' என்றார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா?' என்று கேட்டேன். அதற்கவர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை' என்றார். 'தோல் நீக்கப்படாத கோதுமை மாவைச் சக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கவர் 'தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம். பின்னர் வாயால் அதை ஊதுவோம். உமிகள் பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம்' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ ஹாஸிம்

நூல் : புகாரி 5413

'நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை' என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5374

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை' என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5416, 6454

'ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு 'குழம்புடன் கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே' என விளக்கமளித்தார்.

நூல் : புகாரி 5423

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி 'சாப்பிடுங்கள்' என்று அனஸ் (ரலி) கூறி விட்டு 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை' எனக் கூறினார்.

அறிவிப்பவர் : கதாதா

நூல் : புகாரி 5385, 5421, 6457

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) 'எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2069, 2508

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு சுலைம் (ரலி) இடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர் 'என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார்' என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 3802

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன்' என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார்.
நூல் : புகாரி 5414

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரிடம் 'குழம்பு ஏதும் உள்ளதா?' எனக் கேட்டனர். 'வினிகரைத் தவிர வேறு ஏதும் எங்களிடம் இல்லை' என்று குடும்பத்தினர் கூறினார்கள். அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். 'வினிகர் சிறந்த குழம்பாக இருக்கிறதே' என இரு முறை கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3824

நான் எனது வீட்டின் நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் பின்னால் நடக்கலானேன். 'அருகே வா' என்று அவர்கள் அழைத்ததும் அருகில் சென்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். தமது வீட்டுக்குச் சென்றவுடன் 'காலை உணவு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் 'இருக்கிறது' என்று கூறி விட்டு மூன்று ரொட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள். 'குழம்பு ஏதும் உள்ளதா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். 'சிறிதளவு வினிகரைத் தவிர வேறு ஏதும் இல்லை' என்று குடும்பத்தினர் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். வீட்டிலுள்ளவர்கள் கொண்டு வந்தனர். எனக்கும், அவர்களுக்கும் தலா ஒரு ரொட்டியை முன்னால் வைத்தார்கள். மூன்றாவது ரொட்டியைச் சரி பாதியாக்கி ஒரு பாதியை எனக்கு முன்னால் வைத்து விட்டு இன்னொரு பாதியைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 3826

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன்; எனவே அவர்களுடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கான உணவைத் தயார் செய்வீராக!' என்று அபூ ஷுஐப் (ரலி) தமது ஊழியரிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாத) இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். 'இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டார். இவருக்கும் அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதியளிப்பீராக! இல்லாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்!' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ ஷுஐப் (ரலி) 'இவருக்கும் அனுமதி அளிக்கிறேன்' என்றார்.

நூல் : புகாரி 2081, 2456, 5434, 5461

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டனர். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அவ்விருவரும் பசி' என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வந்துள்ளேன்' என்றார்கள்... ஹதீஸ் சுருக்கம்.

நூல் : முஸ்லிம் 3799

இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும்.

ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். காய்ந்து போன ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை.

செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாத, வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்ற நிலையும் இருந்தது. அவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை. (இதைப் பின்னர் நாம் விளக்குவோம்)

* அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது?

* குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது?

* காய்ந்த ரொட்டியும், வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி?

* அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது?

* ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையை உலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா?

* முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும் நிலையை உலகில் எந்த மன்னரேனும், எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா?

* காய்ந்த ரொட்டியையும், தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிலிருந்து வாங்கி பசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா?

* பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கை எளிமையாக இருந்துள்ளது எப்படி?

இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை; செல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும்.

இந்த உணவுப் பழக்கத்தை மட்டும் வைத்து நபிகள் நாயகம் தமது பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்? எளிமையான உணவுப் பழக்கம் உடைய எத்தனையோ பேர் வளமான நிலையில் உள்ளனரே? வேறு வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றனரே! அது போல் நபிகள் நாயகமும் தமது பதவியின் மூலம் செல்வத்தைக் குவித்து வேறு வகையான சுக போகங்களை அனுபவித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

உடுத்தி மகிழவில்லை

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார்.
நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1277, 2093, 5810

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள்.

நூல் : புகாரி 390, 807, 3654

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள்.

நூல் : புகாரி 1031, 3565

மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர் 'இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது' என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம்' எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி 'இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?' எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2597, 6636, 6979, 7174, 7197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

சுகபோகங்களில் திளைக்கவில்லை

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.

நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகல் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 730, 5862

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். 'ஏன் அழுகிறீர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாயின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 4913

இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.

இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.

'நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்' என்று அவர் கூறுகிறார்.

நூல் : புகாரி 183, 992, 1198, 4572

கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.

அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?

நபிகள் நாயகத்தின் அரண்மனை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.

நூல் : புகாரி 3906

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.

தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.

தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப் பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.

பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திலிருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.

உலகிலேயே ஒரு மன்னர் தமது சொந்தப் பணத்தில் கட்டிய அரசாங்கத் தலைமையகம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

தமது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட நிலத்தில் தமக்காக அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கியிருப்பார்கள்? இடங்களுக்கு பெரிய மதிப்பு இல்லாத அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய இடத்தைத் தமக்காக வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய சொத்தாகக் கருதப்பட மாட்டாது. அத்தகைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது தமது நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இதை ஸஜ்தா என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில் ஸஜ்தா செய்வதற்குக் கூட அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

'நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.

நூல் : புகாரி 382, 513, 1209

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5*5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்!

பேரீச்சை மர ஓலையால் வேயப்பட்டதாகத் தான் அந்த அறை கூட அமைந்திருந்தது. அந்த வீட்டுக்குக் கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது; திறந்த வாசல் தான். இரவில் பாயையே வாசல் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.

மாமன்னரை விட்டு விடுங்கள்! இதை வாசிக்கின்றவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவராவது இத்தகைய ஒரு வீட்டில் வசிக்க ஒப்புவாரா? தனது வீட்டை விட ஆயிரம் மடங்கு பெரிய இடத்தைச் சமுதாயத்துக்கு வழங்கிய ஒருவர் இப்படி வசிக்க விரும்புவாரா?

இந்த வரலாற்று நிகழ்ச்சி நபிகள் நாயகத்தின் வீட்டின் பரப்பளவை மட்டும் கூறவில்லை.

அத்துடன் மற்றொரு செய்தியையும் சேர்த்துக் கூறுகிறது.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரம் பணியும் போது நீங்களே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற சந்தேகத்தை நீக்குவதற்காக 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்று ஆயிஷா (ரலி) விளக்கம் தருகிறார்.

வீட்டில் விளக்கு இல்லாமல் இருளாக இருப்பதால் தான் விரலால் குத்துவதை வைத்து ஸஜ்தா செய்யப் போகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

உலக மகா வல்லரசின் அதிபதியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் வீட்டில் விளக்கு என்பதே இருந்ததில்லை என்றால் இதற்கும் கீழே ஒரு எளிமை இருக்க முடியுமா?

பாரசீக ரோமாபுரி மன்னர்களின் அரண்மனைகளில் தொங்கிய சரவிளக்குகள் பற்றி இங்கே கூறப்படவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள உதவும் மண்சிட்டிகளில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி எரிக்கப்படும் திரி விளக்கைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்கள். இந்த விளக்குகளுக்கு ஊற்றும் எண்ணெய் இருந்தால் காய்ந்த ரொட்டியைத் தொட்டுக் கொள்வதற்குப் பயன்படுத்தியிருப்பார்களே?

ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் மட்டும் தான் விளக்கு இல்லாமல் இருந்ததா என்றால் அதுவுமில்லை. 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அவர்கள் வீட்டில் என்றுமே விளக்கு இருந்ததில்லை என்பதைக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்.

நூல் : புகாரி 729

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.

செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.

நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் அரசுப் பணத்தில் எதையும் தொடுவதில்லை என்ற கொள்கையின் காரணமாக கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விட கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன.

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ?

இவ்வாறு யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.

'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வழங்கிய மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் பட்டியலைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள்.

நூல் : புகாரி 2739, 2873, 2912, 3098, 4461

நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபிகள் நாயகமும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகள் நாயகத்திடம் இருந்தது. அதுவும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவை தாம்.

செழிப்பான நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியில் தரித்திரமும், பஞ்சமும் தலைவிரித்தாடியிருக்கலாம். அதன் காரணமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போயிருக்கலாம்' என்றெல்லாம் யாரேனும் நினைக்கக் கூடும்.

அவ்வாறு நினைத்தால் அது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த முதரண்டு வருடங்களில் கடுமையான வறுமை தலை விரித்தாடியது உண்மை தான். ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஸகாத்' என்னும் புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் செழிப்பும், பொருளாதாரத் தன்னிறைவும் ஏற்பட்டன.

அவர்களது ஆட்சியில் ஏற்பட்டது போன்ற தன்னிறைவை அவர்களுக்குப் பின் இன்று வரை எந்த நாட்டிலும் எந்த ஆட்சியும் அடைய முடியவில்லை. ஆம் அந்த அளவுக்கு அவர்களது ஆட்சியில் செல்வம் கொழித்தது. அந்த நிலையில் தான் இவ்வளவு எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டார்கள்! அவர்களது செழிப்பான ஆட்சிக்குச் சில சான்றுகளைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும். 'இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா?' என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம் எனக் கூறப்பட்டால் 'கடனை நிறைவேற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா?' எனக் கேட்பார்கள். ஆம் என்றால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். இல்லை எனக் கூறப்பட்டால் 'உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்' என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது 'இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே, யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும்' என்று கூறலானார்கள்.

நூல் : புகாரி 2297, 2398, 2399, 4781, 5371, 6731, 6745, 6763

குடிமக்கள் வாங்காத கடனை குடிமக்கள் தலையில் கட்டுகிற அரசுகளை நாம் பார்த்துள்ளோம். ஊதாரித்தனமாகச் செலவு செய்வதற்காக பணக்கார நாடுகளிடம் கடன் வாங்கி மக்களின் வரிப்பணத்தில் வட்டி கட்டும் ஆட்சிகளையும் நாம் பார்க்கிறோம். மக்கள் வாங்கிய கடனுக்காக மக்களிடம் வட்டி வசூலிக்கும் ஆட்சியையும், வட்டிக் கட்டத் தவறினால் ஜப்தி செய்யும் தண்டல்கார அரசுகளையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு கடன் பட்டிருந்தாலும், என்ன காரணத்துக்காகக் கடன் பட்டிருந்தாலும் அந்தக் கடன்கள் அனைத்தையும் ஆட்சித் தலைவர் என்ற முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அடைத்தார்கள். இவ்வாறு அடைப்பது என்றால் அளவுக்கு அதிகமாக செல்வம் குவிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இன்றைக்கு மிகப் பெரிய பணக்கார நாடுகளாகக் கருதப்படும் நாடுகள் தங்கள் குடிமக்களின் கடன்களை அடைக்க முன் வந்தால் பிச்சைக்கார நாடுகளாகி விடும்.

குடிமக்கள் ஒவ்வொருவரின் கடனையும் அரசே அடைத்த அற்புத ஆட்சியை, செழிப்பு மிக்க ஆட்சியைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) நடத்தினார்கள்.

நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவு செழிப்பானதாக இருந்தது என்றால் யாரேனும் இல்லை என்று கேட்டு வந்தால் மிகவும் தாராளமாக வாரி வழங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பு இருந்தது.

இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவோம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப் பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. 'முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை' என்று அந்த மனிதர் கூறினார். 'இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'நான் விட மாட்டேன்' என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் விட மாட்டேன்' என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். 'நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திருந்த ஒருவரை நோக்கி 'இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக' என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி 'நீங்கள் புறப்படுங்கள்!' என்றார்கள்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : நஸயீ 4694, அபூ தாவூத் 4145

இரண்டு ஒட்டகங்களை வைத்திருப்பவர் வசதியானவராக அன்று கருதப்பட்டார். இத்தகைய வசதியுடையவரும், யாரென்று தெரியாதவருமான ஒருவர் நாகரீகமற்ற முறையில் கேட்கும் போது ஒரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு பேரீச்சம் பழத்தையும், இன்னொரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு கோதுமையையும் ஏற்றி நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பினார்கள் என்பது அவர்களின் ஆட்சியில் காணப்பட்ட செழிப்புக்குச் சான்றாகும்.

கேட்டவருக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கியதற்கு இன்னும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றை இங்கே குறிப்பிட்டால் அதுவே தனி நூலாகி விடும். சிந்திக்கின்ற மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.

அரசுக் கருவூலத்தில் கணக்கின்றி செல்வம் குவிந்துள்ள நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்தது ஏன்?

ஏன் இந்த எளிய வாழ்க்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.

மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.

அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.

இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு' என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. 'நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா?' என்று பேரனிடம் கேட்டார்கள்.

நூல் : புகாரி 1485, 1491, 3072

'தமது பேரனின் வாயிலிருந்து பேரீச்சம் பழத்தை வெளியேற்றி விட்டு 'முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தைச் சாப்பிடக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?' எனக் கூறினார்கள் என்று கூறப்படுகிறது

நூல் : புகாரி 1485

'பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது' என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித் தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நான் ஏன் அவசரமாகச் சென்றேன் தெரியுமா? அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்' என்றார்கள்.

நூல் : புகாரி 851, 1221, 1430

மரணம் எந்த நேரத்திலும் ஏற்பட்டு விடலாம். ஏழைகளுக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டியை வீட்டில் வைத்து விட்டு மரணித்து விட்டால் குடும்பத்தினர் அதைத் தமக்குரியதாகக் கருதி விடக் கூடும். அவ்வாறு கருதி விடக் கூடாது என்று அஞ்சியே அவசரமாகப் புறப்பட்டுச் சென்று 'அது பொது நிதிக்குச் சொந்தமானது' என்று கூறி விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

'எனது படுக்கையில் ஒரு பேரீச்சம் பழம் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அது ஸகாத் நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிட்டிருப்பேன்' எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 2055, 2431, 2433

நபிகள் நாயகத்தின் வீடு பள்ளிவாசலுடன் ஒட்டி அமைந்திருந்தது. பள்ளிவாசலில் குவிக்கப்படும் ஸகாத் நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்களில் ஒன்றிரண்டு நபிகள் நாயகத்தின் வீட்டுக்குள் வந்து விழுந்திட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட சாப்பிட மாட்டேன் என்று அறிவிக்கிறார்கள். பொது நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட அதைத் தவிர்க்கும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர்.

இதை விடவும் உயர்வான மற்றொரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

'நான் ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல. என் மரணத்திற்குப் பிறகு எந்த ஆட்சி வந்தாலும் அரசுக் கருவூலத்தின் ஸகாத் நிதியாதாரம் என் வழித் தோன்றல்களுக்குத் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை உலகம் உள்ளளவும் நீடிக்கும்' என்பதே அந்தப் பிரகடனம்.

இன்றும் கூட நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களாக இருப்ப வர்கள் எந்த அரசிலும் ஸகாத் நிதியைப் பெறுவதில்லை. முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதும் இல்லை. இஸ்லாமியச் சட்டப்படி நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் ஸகாத் பெறுவதும், அவர்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்குவதும் குற்றமாகும்.

தமது வழித் தோன்றல்களாக இருப்பதால் மற்றவர்களுக்குக் கிடைக்கும் சலுகையும் கிடையாது என்று அறிவித்ததற்கு நிகரான தூய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உலக வரலாற்றில் ஒருவரும் இல்லை.

தாமும், தமது குடும்பத்தினரும் ஸகாத் நிதியைத் தொடாதது மட்டுமின்றி தம்முடன் தொடர்புடையவர்கள் கூட அதிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். இதைப் பின் வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை ஸகாத் நிதியைத் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்போது அபூ ராஃபிவு என்பாரும் அவருடன் செல்லலானார். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஸகாத் எனும் பொது நிதி நமக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஒரு சமுதாயத்தால் விடுதலை செய்யப்பட்டவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று குறிப்பிட்டார்கள்.

நூல்கள் : நஸயீ 2565, அபூதாவூத் 1407

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மனிதர்களில் சிலர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகளை வைத்திருப்பவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

'அடிமைகளை விடுதலை செய்தால் விடுதலை செய்தவரே அந்த அடிமைக்கு வாரிசு' என்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும். அதாவது அந்த அடிமை மரணித்து விட்டால் அவரது சொத்துக்கள் விடுதலை செய்தவரைச் சேரும்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்டவர் தான் அபூ ராஃபிவு. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு வாரிசாகும் நிலையில் இருந்தார்கள். அவரும் ஸகாத் நிதியில் எதையும் பெறக் கூடாது என்பதற்காக அவரை ஸகாத் வசூலிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.

அரசாங்கப் பணத்தைத் தமக்கோ, தம் குடும்பத்துக்கோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும் ஒரு அரசாங்கத்திலும் தமது வழித் தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரகடனம் செய்தது மட்டுமின்றி மற்றொரு புரட்சிகரமான பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக்காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள்.)

நூல் : புகாரி 2776, 3096, 6729

நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா (ரலி)க்கு ஏற்பட்ட அனுபவம் அந்த மாமனிதரின் அப்பழுக்கற்ற தன்மையைப் பறை சாற்றும்.

நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களின் உற்ற தோழர் அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்களிடம் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா வந்தார். தமது தந்தை விட்டுச் சென்ற கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அபூபக்ரிடம் கேட்டார்...

'எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்' என்று உங்கள் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே, அதை உங்களிடம் தர இயலாது. நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள். ஆயினும், நான் தர மறுப்பதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான்' என்று கூறி மறுத்து விட்டார்.

நூல் : புகாரி 3093, 3094, 3712, 4034, 4036, 4241, 5358, 6725, 6728

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொது உடமையாக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாரிசுரிமையை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) இடம் கேட்டுப் பெறுவதற்காக உஸ்மான் (ரலி)யை அனுப்பத் திட்டமிட்டனர். அப்போது ஆயிஷா (ரலி) 'எனக்கு யாரும் வாரிசாக முடியாது; நான் விட்டுச் சென்றவை பொது நிதியில் சேர்க்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லையா?' என்று கேட்டு அம்முயற்சியைக் கைவிட வைத்தார்.

நூல் : புகாரி 6730

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புக்களையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது.

'அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது' என்ற கொள்கையின் காரணமாக வியாபாரம், அல்லது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.

தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.

மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திலிருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.

இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா?' என்றார்கள். அவர் கிடாய்' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி 'நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்' என்று கூறினார்கள்.

இதை லகீத் பின் ஸபுரா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : அபூதாவூத் 123, அஹ்மத் 17172

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திட இந்த வருமானம் போதுமானதாக இருந்தது.

அரபு நாட்டு ஆடுகள் அதிகமாகப் பால் சுரக்கக் கூடியவை. நூறு ஆடுகள் இருக்கும் போது பத்து ஆடுகளாவது பால் கொடுக்கக் கூடியவையாக இருக்கும். நூறு ஆடுகள் கொண்ட பண்ணையில் மாதம் இரண்டு ஆடுகள் குட்டி போட்டாலே போதுமான வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தின் மூலம் தான் தமது தேவைகளையும், தமது மனைவியரின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் இந்த வருமானம் தேவைக்கும் அதிகமான வருமானமாகும். ஆனால் பல மனைவியர் இருந்த காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியிருந்ததால் தான் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய வறிய வாழ்க்கை வாழும் நிலை ஏற்பட்டது.

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் பல மனைவியரை மணக்க வேண்டும் என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற நமது நூலைப் பார்க்கவும்.)

இவை தவிர இன்னொரு வகையிலும் அவர்களுக்கு வருமானம் வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பல்வேறு போர்களைச் சந்தித்தார்கள்.

போரில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித ஊதியமும் அன்றைய காலத்தில் வழங்கப்படுவதில்லை. போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றால் தோற்றவர்களின் உடமைகளை வெற்றி பெற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. போரில் பங்கு கொண்டவர்களுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அது போல் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் தனி மனிதர்களுக்கு உரிமையாக இல்லாத பொதுச் சொத்துக்களும் வெற்றி பெற்றவர்களுக்குச் சொந்தமாகி விடும். அவற்றையும் வெற்றி பெற்ற நாட்டினர் போரில் பங்கெடுத்தவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற வீரர்களைப் போலவே நேரடியாகப் போரில் பங்கெடுத்தார்கள். வாள் வீச்சிலும், குதிரை ஏற்றத்திலும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருந்ததால் மற்றவர்களை விடத் தீவிரமாகப் பங்கெடுத்தார்கள்.

போரில் பங்கு கொண்ட மற்ற வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது போல் போர் வீரர் என்ற முறையில் தமக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார்கள். குதிரை வைத்திருப்பவர்களுக்கு சாதாரணப் போர் வீரரை விட இன்னொரு மடங்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் குதிரை வீரர்களுக்குக் கிடைத்த பங்குகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தன.

கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்கள் நபிகள் நாயகத்துக்கு இவ்வாறு தான் கிடைத்தன. இதையும் மரணிக்கும் போது பொது உடமையாக்கி விட்டார்கள் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இந்தத் தோட்டங்களிலிருந்தும் அவர்களுக்கு வருமானம் வந்தது.

நண்பர்கள், மற்றும் அண்டை வீட்டார் அன்பளிப்புகளாக வழங்கினால் அதை ஏற்றுக் கொள்வார்கள். தாமும் அன்பளிப்புச் செய்வார்கள்.

இந்த வகைகளில் தவிர வேறு எந்த வருமானமும் அவர்களுக்கு இருந்ததில்லை. இதிலிருந்து தான் தமது குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த அற்புதமான வாழ்க்கை அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.